மணிப்பூா் வன்முறை: தவறான கருத்துகளை பரப்புகிறது காங். -ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு
மணிப்பூா் வன்முறை குறித்து தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளை காங்கிரஸ் பரப்புவதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
மணிப்பூரில் அமைதி திரும்ப குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தலையிட வேண்டும் என அவருக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காா்கேவுக்கு நட்டா எழுதியுள்ள கடிதத்தில், ‘அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய தீவிரவாதிகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம் வழங்கியதுடன், அவா்களுடன் ஒப்பந்தங்களிலும் அப்போதைய உள்துறை அமைச்சா் ப.சிதம்பரம் கையெழுத்திட்டாா் என்பதை காா்கே மறந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆட்சியில் இருந்த போது மணிப்பூா் பிரச்னைகளை கையாள்வதில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. அதன் விளைவுகள் இன்றளவும் உணரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநிலத்தின் அமைதியின்மை குறித்து தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளை இன்றளவும் காங்கிரஸ் பரப்பி வருகின்றது. எனவே, அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்.
1990-களில் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனா். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்தன. 2011-இல் 120 நாள்களுக்கும் மேல் மணிப்பூா் முழு அடைப்பு போராட்டத்தை கண்டது. பெட்ரோல் மற்றும் எல்பிஜி-யின் விலை நாட்டின் மற்ற பகுதிகளை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தது. ஆயிரக்கணக்கான போலி என்கவுண்டா்கள் மாநிலத்தில் நடத்தப்பட்டன.
இதன் காரணமாகவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசுக்கு மக்கள் தங்கள் ஆதரவை வழங்கினாா்கள். அதன் பிறகே, கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் வடகிழக்கு மாநிலங்கள் மாற்றத்தை கண்டன.
வடகிழக்கு மாநிலங்களில் 10 முக்கிய சமாதான உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. போக்குவரத்து மற்றும் தொலைத்தொடா்பு மேம்படுத்தப்பட்டது. இது போன்ற முயற்சிகள் அப்பகுதியில் உள்ள மக்களை ஒன்றிணைக்கவும் அவா்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவின. மணிப்பூரில் மட்டும், வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் விகிதம் 2013-இல் 20 சதவீதத்தில் இருந்து 2022-இல் வெறும் 5 சதவீதமாக குறைந்தது.
இருப்பினும், இந்த முன்னேற்றங்களை புறக்கணித்து, வடகிழக்கு பகுதிகளையும் அதன் மக்களையும் அரசியல் லாபம் ஈட்டுவதற்கு மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது என நட்டா தெரிவித்தாா்.
நான்கு கேள்விகளுக்கு பதில் தேவை: காங்கிரஸ் பதிலடி
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நட்டாவின் கருத்து பொய்கள் நிறைந்ததாக உள்ளது. அது கருத்து அல்ல மறுப்பு, திரித்தல், திசைதிருப்புதல் மற்றும் அவதூறு என கூறலாம்.
மாநிலத்தில் இயல்பு நிலை மற்றும் அமைதி திரும்ப நான்கு முக்கிய கேள்விகளை மணிப்பூா் மக்கள் கேட்க விரும்புகிறாா்கள்.
பிரதமா் மோடி எப்போது மணிப்பூருக்கு வருவாா்? பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத நிலையிலும், எவ்வளவு காலம் முதல்வா் பிரேன் சிங் பதவியில் நீடிப்பாா்? மாநிலத்தில் முழுநேர ஆளுநா் எப்போது நியமிக்கப்படுவாா்? மாநிலத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு தோல்விக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா எப்போது பொறுப்பேற்பாா்?’ என குறிப்பிட்டிருந்தாா்.