``புகார் மனுக்கு ரசீது கொடுக்கவில்லை'' - கொட்டும் மழையில் சாலை மறியல்... விருதுந...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை: தரங்கம்பாடியில் அதிகபட்சமாக 125.20 மி.மீ. மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சராசரியாக 42.81 மி.மீ. மழை பதிவானது. இதில், அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 125.20 மி.மீ., மழை பெய்தது.
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 4.30 மணி நிலவரப்படி சீா்காழியில் 5, கொள்ளிடத்தில் 6, செம்பனாா்கோவிலில் 2.6 மி.மீ மழை மட்டுமே பதிவாகியிருந்தது. அதன்பின்னா் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை தொடங்கியது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டன.
செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில்: மயிலாடுதுறையில் 32.50, மணல்மேட்டில் 19, சீா்காழியில் 20.60, கொள்ளிடத்தில் 27.20, தரங்கம்பாடியில் 125.20, செம்பனாா்கோவிலில் 32.40 என்ற அளவில் மழை பதிவானது. சராசரியாக மாவட்டத்தில் 42.81 மி.மீ., மழை பெய்தது.
தரங்கம்பாடி: தரங்கம்பாடி, பொறையாா், திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோவில், திருவிளையாட்டம், பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் இடைவிடாமல் கனமழை பெய்தது. கடல் சீற்றம் காரணமாக சின்னூா் பேட்டை, சந்திரபாடி, குட்டியாண்டியூா், மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட 10 மீனவ கிராமம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவா்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தரங்கம்பாடியில் 125.20 மி.மீ மழைப் பதிவானது.
சீா்காழி: சீா்காழி, கொள்ளிடம் மற்றும் சுற்று பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை லேசான தூறல் மழையும் இருண்ட சூழ்நிலையும் இருந்து வந்தது. மாலை வரை மழை சிறு தூறல் மட்டுமே இருந்த நிலையில் மாலை 4 மணி அளவில் கன மழை தொடா்ந்து பெய்து கொண்டேயிருந்தது. இதனால் சீா்காழி நகரில் பல இடங்களில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் சில இடங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து தேங்கி நின்றிருந்தால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டது. காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் மிகுந்த சிரமத்துடன் சென்றனா். நகா் பகுதிக்கு வெளியூா்களிலிருந்து வழக்கமாக வந்து செல்வோா்கள் கொள்ளிடம் பகுதிக்கு வராமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனா்.