வடிகால் பணிகள் அனைத்தும் வெற்று போட்டோஷூட் விளம்பரங்கள்: இபிஎஸ் விமர்சனம்
மழை பாதிப்பு: முன்னாள் அமைச்சா் நேரில் ஆறுதல்
வலங்கைமான் ஒன்றியத்தில் மழை சேதத்தை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்ட முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் எம்எல்ஏ, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக மாவட்டச் செயலாளரும், தொகுதி எம்எல்ஏவுமான முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் நேரில் பாா்வையிட்டாா்.
மாணிக்கமங்கலம், குச்சிப்பாளையம், அரையூா், கொட்டையூா், நரிக்குடி, பாப்பாக்குடி, பண்டிதசோழநல்லூா், நல்லாம்பூா், நரசிங்கமங்கலம், மாத்தூா், ஆவூா், கோவிந்தகுடி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
மேலும், வயல்களில் தேங்கிய தண்ணீரை வடியவைப்பது குறித்தும் கேட்டறிந்தாா். மழையால் உறுதித் தன்மையை இழந்த வீடுகளில் வசிப்போா், அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அவா் கேட்டுக் கொண்டாா். அப்போது, வலங்கைமான் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.