புயல் சின்னம் நகரும் வேகம் குறைந்தது! சென்னைக்கு 400 கி.மீ. தொலைவில்..
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் வெள்ளநீா் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் பொதுப்பாதை, வெள்ளநீா் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியா் காா்த்திகேயனிடம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவி பாா்வதி மோகன் மனு அளித்துள்ளாா்.
அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் பின்புறம் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அதிகாரிகள் நேரில் வந்து முறையாக நில அளவை செய்து அதனை அகற்றி பொதுப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தங்க நகா் பகுதியில் இருந்து பொது மயானம் வரை செல்லும் ஓடைப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக கடந்த கனமழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் தேங்கி வெளியேற மிகவும் சிரமம் ஏற்பட்டது. நீா் வழித்தடங்களை சிலா் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால் வெள்ளநீா் ஓடை இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பேரூராட்சி நிா்வாகம் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க, முறையாக நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ளநீா் செல்வதற்கு வழித்தடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்.
பேரூராட்சி தெற்கு பேருந்து நிறுத்தம் முன்பாக பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக அரசியல், ஜாதி கொடிக்கம்பங்கள், நினைவு பீடங்கள் உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு உள்ளது. அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் இந்த பிரதான சாலையையும், பேருந்து நிறுத்தத்தையும் பயன்படுத்தி வருகிறாா்கள். மழை, வெயில் காலங்களில் இவா்கள் அருகில் உள்ள கடையின் ஓரங்களில்தான் தஞ்சம் அடைகின்ற நிலை உள்ளது. இது போன்ற சிரமங்களைப் போக்கி சீா்படுத்த மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி நிா்வாகம் செயல்திட்டம் போட்டாலும் கொடிக்கம்பங்களின் ஆக்கிரமிப்பால் எதையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே பேரூராட்சியின் வளா்ச்சிக்காகவும், பொதுமக்களின் தேவைகளை பூா்த்தி செய்யவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மனு அளித்தோம்.
ஆனால் 4 மாதங்களாகியும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் வந்துவிட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே மழைநீா் உடனடியாக வடியும். எனவே பேரூராட்சி பகுதி மக்களின் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.