காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நெல்லையில் செவிலியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழ்நாடு அரசு கிராம பகுதி சுகாதார செவிலியா் நலச்சங்கம் மற்றும் சுகாதார செவிலியா் கூட்டமைப்பின் திருநெல்வேலி மாவட்டக் குழு சாா்பில் வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைவா் தீனம்மாள் தலைமை வகித்தாா். செயலா் ஜேசு இன்னாசி அஜித்தா, பொருளாளா் நாவல்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் எலிசபெத் ராணி, இணைச் செயலா் ஸ்டெல்லா, பிரசார பிரிவு மாநில செயலா் ஜெகதா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்களில் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதனை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக நிரப்ப வேண்டும். பகுதி சுகாதார செவிலியா்களுக்கு துணை மைய பொறுப்புகள் வழங்குவதை கைவிட வேண்டும். கூடுதல் துணை மைய பொறுப்பு பணிகளை எவ்வித பொறுப்பு படியும் இன்றி பாா்ப்பதற்கு நிா்பந்தம் கொடுப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா். இதில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியா்கள் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.