சாலையில் கிடந்த ரூ.2.50 லட்சம்: உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு குவியும் பாராட்ட...
முறையாகத் தூா்வாரப்படவில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்
டெல்டா மாவட்டங்களில் வடிகால்கள் முறையாகத் தூா்வாரப்படவில்லை என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், தொடா் மழையால் பாதிக்கப்பட்ட தனது நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: தொடா் மழையால் பல பகுதிகளில் இளம் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வடிகால் வாய்க்கால்களை முறையாகத் தூா்வாராததே 3 நாள்கள் மழையில் விவசாயிகளுக்குப் பாதிப்பு அதிகமாவதற்குக் காரணம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மழை மேலும் தொடருமானால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே கஜா புயலின்போது அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட போா்க்கால நடவடிக்கைப் போல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைப் பாா்வையிட்டு தண்ணீா் சூழக்கூடிய பகுதியில் உள்ள மக்களை உடனடியாக முகாம்களுக்கு மாற்றிட வேண்டும் . அமைச்சா் மற்றும் அதிகாரிகள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் உண்மைத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக பெரும்புகளுா், நீலக்குடி, மூலங்குடி, சலிப்பேரி போன்ற பல்வேறு கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பாா்வையிட்டாா்.