மொஹல்லா பேருந்து சேவைகளை ஆய்வு செய்தார் முதல்வர் அதிஷி!
தில்லியின் தனித்துவமான மொஹல்லா பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ள சார்ஜிங் மற்றும் பிற சேவைகளை முதல்வர் அதிஷி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தில்லி எல்லையின் கடைசி மைல் வரை பொதுமக்களின் பேருந்து போக்குவரத்து சிக்கலைத் தீர்க்கும் வகையில் மொஹல்லா பேருந்து சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு வழித்தடங்களின் சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிஷி கூறுகையில்,
தலைநகரில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், மொஹல்லா பேருந்துகளின் இயக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தில்லி சாலைகளில் இயக்கப்படும்.
மொஹல்லா பேருந்துகள் குறிப்பாக குறுகிய சாலைகள் உள்ள பகுதிகள் அல்லது வழக்கமான 12 மீட்டர் பேருந்துகள் இயக்க முடியாத அளவுக்கு நெரிசலான பகுதிகளுக்குப் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தில்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து சிக்கல்கள் இருந்துவருகின்றன. தில்லி எல்லையின் கடைசி மைல் வரை உள்ள சிக்கலைத் தீர்க்க தில்லியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மொஹல்லா பேருந்துகள் இயக்கப்படும்.
மொஹல்லா பேருந்து சேவையை நகரம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான தில்லி அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது என்று அவர் கூறினார்.