36 வருடங்களுக்குப் பின் சிறையிலிருந்து விடுதலையான 104 வயது முதியவர்.
கொல்கத்தா: 36 வருடங்களுக்குப் பின்னர் மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா சிறையிலிருந்து 104 வயது முதியவர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா மாவட்டத்தை சேர்ந்த 104 வயதான ரசிகத் மொண்டல், கடந்த 1988 ஆம் ஆண்டு நிலத்தகராறில் தனது சகோதரரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த 1992 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட இவரை, 36 வருடங்கள் கழித்து கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தண்டனை காலத்தில் ஒரு முறை பிணையிலும் ஒரு முறை பரோலிலும் வெளியே வந்த இவர் பிணைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் சிறைக்கு சென்றார். மேலும் இதற்கு முந்தைய சந்தர்பங்களில் இவரது விடுதலை மனுவை செஷன்ஸ் மற்றும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதையும் படிக்க: தாய், தந்தை, மகள் குத்திக் கொலை! தில்லியில் பயங்கரம்
தனது 72 வது வயதில் சிறைக்கு சென்றவர், தற்போது 104 வயதில் முழுவதுமாக விடுதலையாகியுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டப்பொழுது, தான் ஒரு நிரபராதி எனவும் சூழ்நிலை கைதியாக தண்டனையை அனுபவித்தாகவும், இனியுள்ள நாள்களை தனது வீட்டிலுள்ள சிறிய தோட்டத்தை பராமரிப்பதிலும் தனது குடும்பத்தினரோடு நேரம் செலவளிப்பதிலும் கழிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ”மேற்கு வங்க மாநிலத்தின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 100 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளை கொண்ட மிகச் சில வழக்குகளில் இதுவும் ஒன்று” என்று தெரிவித்தனர்.