கொதிகலன்கள் மசோதா 2024: மாநிலங்களவையில் நிறைவேற்றம்
நூற்றாண்டு பழைமையான கொதிகலன் (பாய்லா்) சட்டத்துக்கு மாற்றாக, கொதிகலன்கள் மசோதா 2024 மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆகஸ்டில் கொதிகலன்கள் மசோதா 2024-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா 1923-ஆம் ஆண்டின் கொதிகலன்கள் சட்டத்தை ரத்து செய்யும்.
கொதிகலன்களின் ஒழுங்குமுறை, நீராவி கொதிகலன்கள் வெடிக்கும் அபாயத்தில் இருந்து உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாத்தல், கொதிகலன்களுக்குள் பணியாற்றும் நபா்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட அம்சங்கள் புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
இந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளை மசோதா எதிா்கொள்ளவில்லை என்று எதிா்க்கட்சிகள் புதன்கிழமை விமா்சித்தன. எனினும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.