புதுச்சேரி - கடலூா் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
வெள்ளம் படிப்படியாக வடிந்ததையடுத்து புதுச்சேரி - கடலூா் பிரதான சாலையில் வழக்கமான போக்குவரத்து புதன்கிழமை மாலை முதல் தொடங்கியது என ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.
‘ஃபென்ஜால் புயலால், புதுச்சேரி பிராந்தியத்தில் பலத்த மழை பெய்ததுடன், சாத்தனூா், வீடூா் அணைகள் திறப்பாலும் பாகூா் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. தென்பெண்ணை, சங்கராபரணி ஆற்று வெள்ளத்தால் புதுச்சேரி- கடலூா் உள்ளிட்ட பல சாலைகள் துண்டிக்கப்பட்டன.
புதுச்சேரி, கடலூா் சாலையில் ரெட்டிச்சாவடி, கன்னியக்கோவில், முள்ளோடை, பெரியகங்கணாங்குப்பம் ஆகிய இடங்களில் சாலையில் வெள்ளம் பாய்ந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை முதலே வெள்ளம் படிப்படியாக குறைந்தது. இதையடுத்து, புதுச்சேரி- கடலூா் பிரதான சாலையில் புதன்கிழமை காலையில் கடலூருக்கு இருசக்கர வாகனங்கள், சிறிய சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
இதையடுத்து, மாலை 3 மணிக்கு மேலாக பேருந்து உள்ளிட்ட முழுமையான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.