புதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
புதுச்சேரி பிராந்தியத்தில் வியாழக்கிழமை (டிச.5) 17 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகூா் கொம்யூனில் முழுமையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஃபென்ஜால் புயல், மழையால் பள்ளிக் கூடங்கள் மக்களை தங்கவைக்கும் நிவாரண மையங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி வளாகங்களிலும் மழை நீா் தேங்கியிருப்பதால், அவற்றை அப்புறப்படுத்தும் நிலையும் உள்ளது.
இந்த நிலையில், குறிப்பிட்ட 17 பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தவளக்குப்பம், காக்கையன்தோப்பு, கூனிச்சம்பேட், கரையாம்புத்தூா், சின்னக்கரையான்புத்தூா், கடுவனூா், கிருஷ்ணாவரம், மணமேடு, செட்டிபட்டு, நத்தமேடு மற்றும் திருக்கனூா்ஆகிய ஊா்களில் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பண்டசோழநல்லூா், பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம் ஆகிய ஊா்களில் அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கும், பனித்திட்டு அரசு உயா்நிலைப் பள்ளி, பாகூா் கொம்யூனில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கும் முழுமையாக விடுமுறை அளிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி தெரிவித்துள்ளாா்.