ஃபென்ஜால் புயல்: புதுச்சேரியில் 51 மின்மாற்றிகள் சேதம்
புதுச்சேரியில் புயல், மழையால் 51 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக புதுவை மின் துறைத் தலைவா் சண்முகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் ஃபென்ஜால் புயல் மற்றும் மழையால் மேல்நிலை மின் பாதைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
அதன்படி, சுமாா் 212 கி.மீ. அளவில் மின் பாதையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், மழைக்கு 51 மின்மாற்றிகள் பாதிப்படைந்துள்ளன. காற்று, மழையில் 1,512 மின் கம்பங்கள் சாய்ந்தன.
வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறை உதவியுடன் மின் கம்பங்களின் மீது விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு முழுமையாக மின் விநியோகம் அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் புகாா்: புதுச்சேரியில் முழுமையாக மின் விநிோயகம் அளிக்கப்பட்டதாக மின் துறை அறிவித்த நிலையில், நேரு நகரில் பெரியகடை காவல் நிலையப் பகுதி, கேண்டீன் வீதி உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை பகலில் தடைபட்ட மின்சாரம் இரவு வரை நீடித்தது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
அந்தப் பகுதியில் மின்மாற்றி பழுதடைந்த நிலையில், அவை சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.