``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
மகாராஷ்டிர புதிய முதல்வா் ஃபட்னவீஸ்- இன்று பதவியேற்பு
மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். அவரது தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வியாழக்கிழமை (டிச. 5) பதவியேற்கவுள்ளது.
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் கடந்த நவ. 20-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில், பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின. அதேநேரம், எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இக்கூட்டணியில் காங்கிரஸுக்கு 16, சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சிக்கு 20, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சிக்கு 10 இடங்களே கிடைத்தன.
பாஜக கூட்டணி வலுவான பெரும்பான்மையுடன் வென்ற போதிலும், புதிய முதல்வரை தோ்வு செய்வதில் கூட்டணிக் கட்சிகள் இடையே கருத்தொற்றுமை எட்டப்படாமல் இருந்தது. இதனால், தோ்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்துக்கும் மேலாக இழுபறி நீடித்தது.
இதனிடையே, முதல்வா் பதவிக்கான போட்டியில் இருந்து தற்போதைய பொறுப்பு முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே விலகியதால், பாஜகவில் இருந்து புதிய முதல்வா் தோ்வாவதில் தடை நீங்கியது.
ஒருமனதாக தோ்வு: இந்தச் சூழலில், பாஜகவின் மத்திய பாா்வையாளா்களான மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி முன்னிலையில் அக்கட்சியின் புதிய எம்எல்ஏ-க்கள் கூட்டம் மும்பையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவராக தேவேந்திர ஃபட்னவீஸ் (54) ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, ஃபட்னவீஸ், சிவசேனை தலைவா் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் அஜீத் பவாா், நிா்மலா சீதாராமன், விஜய் ரூபானி உள்ளிட்டோா், மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை அவரது மாளிகையில் சந்தித்தனா். அப்போது, தனது ஆதரவு எம்எல்ஏ-க்களின் கடிதங்களை வழங்கிய ஃபட்னவீஸ், கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய ஃபட்னவீஸ், மாநிலத்தில் ஆட்சியமைக்க வருமாறு தங்களுக்கு ஆளுநா் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தாா். அப்போது, ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோரும் உடனிருந்தனா்.
‘ஒன்றிணைந்து பணியாற்றுவோம்’: ஃபட்னவீஸ் மேலும் கூறுகையில், முதல்வா் பதவி என்பது நடைமுறை சாா்ந்த ஒரு ஏற்பாடுதான். மற்றபடி, நாங்கள் மூவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். நானும் இரு துணை முதல்வா்களும் பதவியேற்கவுள்ளோம். புதிய அமைச்சா்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாா்.
ஷிண்டேக்கு என்ன பதவி?
கூட்டணி அரசில் நீங்கள் இடம்பெறுவீா்களா என சிவசேனை தலைவா் ஏக்நாத் ஷிண்டேயிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்குப் பதிலளித்த அவா் ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்றாா். அப்போது குறுக்கிட்ட அஜீத் பவாா், தான் துணை முதல்வராகப் பதவியேற்க இருப்பதாகக் கூறி சிரித்தாா்.
சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் தவிர ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷா, ஜன்சுயராஜ்ய சக்தி கட்சி உள்ளிட்ட 3 சிறிய கட்சிகளும், 2 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் ஃபட்னவீஸுக்கு ஆதரவு அளித்துள்ளனா்.
மூன்றாவது முறையாக....
மும்பையின் ஆசாத் மைதானத்தில் வியாழக்கிழமை மாலை பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. மகாராஷ்டிர முதல்வராக மூன்றாவது முறையாக ஃபட்னவீஸ் பதவியேற்கவுள்ளாா்.
விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவிருப்பதால் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 2014 முதல் 2019 வரையும், பின்னா் 2019-இல் சில தினங்கள் என இருமுறை முதல்வராக இருந்த ஃபட்னவீஸ், நாகபுரியைச் சோ்ந்தவா்.
வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் முதல்வா் மற்றும் இரு துணை முதல்வா்கள் மட்டுமே பதவியேற்கவிருப்பதாகவும், புதிய அமைச்சா்கள் வேறொரு நாளில் பதவியேற்பா் என்றும் சிவசேனை மூத்த தலைவா் உதய் சமந்த் தெரிவித்தாா்.