யூனியன் தலைவர் பதவிக்கு ரூ. 30 லட்சம்! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வால் ஒருவர் தற்கொலை முயற்சி?
சண்டிகரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ பணமோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சண்டிகரின் சங்க்ரூர் தொகுதி எம்எல்ஏ-வான ஆம் ஆத்மியைச் சேர்ந்த நரேந்தர் கௌர் பராஜ், தன்னை பவானிகர் பகுதி லாரி தொழிற்சங்கத்தின் யூனியன் தலைவராக நியமிப்பதாகக் கூறி, ரூ. 30 லட்சம் பெற்றதாக மன்ஜித் சிங் காகா என்பவர் குற்றம் சாட்டினார்.
ஆனால், தன்னை நரேந்தர் ஏமாற்றி விட்டதாகக் கூறி, லாரி தொழிற்சங்க அலுவலகத்தின் முன்பாக விஷம் அருந்தி, மன்ஜித் தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும், அவரை மீட்ட அப்பகுதியினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், நரேந்தர் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.
இதையும் படிக்க:மார்ச் 4 முதல் புதிய வரி விதிப்பு அமல்: டிரம்ப்பால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு?
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டை அப்பட்டமான பொய் என்று நரேந்தர் தொடர்ந்து மறுத்து வருகிறார். அவர் மேலும் கூறியதாவது, ``பவானிகர் லாரி தொழிற்சங்க யூனியன் தலைவர் தேர்தலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தேர்தல், தொழிற்சங்க உறுப்பினர்களால் சுயாதீனமாக நடத்தப்பட்டது; இது ஒரு அரசு சாரா அமைப்பாகும்.
இந்தத் தேர்தலுடன் என்னை இணைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை; அரசியல் நோக்கம் கொண்டவை. அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள்தான், ஆம் ஆத்மியின் பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கின்றன.
இந்த வழக்கில், காவல்துறையினர விரிவான விசாரணை நடத்த வேண்டும். ரூ. 30 லட்சம் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். பணத்தை கொடுத்தவர்கள் மற்றும் ஏற்றுக்கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.