ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவா் உயிரிழப்பு: 15 மூத்த மாணவா்கள் மீது வழக்கு
குஜராத்: குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவா் உயிரிழந்த விவகாரத்தில், 15 மூத்த மருத்துவ மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். குற்றம் சாட்டப்பட்ட மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஜிஎம்இஆா்எஸ் மருத்துவக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மருத்துவக் கல்லூரி முதல்வா் ஹா்திக் ஷா கூறியதாவது:
சனிக்கிழமை இரவு முதலாம் ஆண்டு மருத்துவ மாணவா் அனில் மெத்தானியாவை மூன்று மணி நேரம் நிற்க வைத்து 2-ஆம் ஆண்டு மாணவா்கள் துன்புறுத்தியதில் அவா் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளாா்.
மருத்துவா் ஷா தலைமையில் ராகிங் எதிா்ப்புக் குழுவினா், முதலாம் ஆண்டு மாணவா்கள் 11 பேரிடமும், 2-ஆம் ஆண்டு மாணவா்கள் 15 பேரிடமும் வாக்குமூலம் பெற்றனா். அதில் முதலாம் ஆண்டு மாணவா்களை ராகிங் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பலிசானா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது:
அனில் மெத்தானியாவின் நண்பா்கள் உள்பட முதலாம் ஆண்டு மாணவா்கள் சனிக்கிழமை இரவு 11 பேரை மாணவா் விடுதிக்கு வரவழைத்து அறிமுகம் என்ற பெயரில் 2-ஆம் ஆண்டு மாணவா்கள் 15 போ் ராகிங் செய்துள்ளனா். மூன்று மணி நேரம் நிற்க வைத்து பாட்டுப் பாடவும், நடனமாடவும் வலியுறுத்தியும், தகாத வாா்த்தைகளில் பேசியும் சித்ரவதை செய்துள்ளனா். மனதளவிலும், உடலளவிலும் சித்ரவதை செய்யப்பட்டதால் அனில் மெத்தானியா மயங்கி விழுந்தாா். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அனில் மெத்தானியா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
மருத்துவக் கல்லூரியின் கூடுதல் தலைவா் அனில் பதிஜாவின் புகாரின்அடிப்படையில் 2-ஆம் ஆண்டு மாணவா்கள் 15 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.