ரிஷப் பந்த் ரூ.28 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்..! முன்னாள் வீரர் நம்பிக்கை!
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ரிஷப் பந்த் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவாரென முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
நவ.24,25ஆம் தேதிகளில் சௌதி அரேபியாவில் ஐபிஎல் ஏலம் நடைபெறவிருக்கிறது.
தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் அதிரடி வீரரான இவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் காத்திருக்கின்றன.
111 ஐபிஎல் போட்டிகளில் 3,284 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 148.93ஆக இருக்கிறது.
ஆர்சிபி, சிஎஸ்கே, பஞ்சாப், லக்னௌ அணிகள் விருப்பம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியதாவது:
ரிஷப் பந்த ரூ.25-28 கோடிக்கு ஏலத்தில் செல்வாரென நினைக்கிறேன். இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு உரியவராக அவரே இருப்பார். கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்டராக பஞ்சாப் அல்லது ஆர்சிபி இவரை விலைக்கு வாங்க முயற்சிக்கும்.
தில்லி அணி ஸ்ரேயாஷ் ஐயரை ரூ.15-20 கோடிக்கு எடுக்கும். டு பிளெஸ்ஸி 10 கோடிக்கு செல்வார். எந்த அணிக்கு சென்றாலும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் நேஹல் வதோரா, அஷ்டோஷ் ஷர்மா தலா ரூ.8 கோடிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்றார்.
ஆஸி. வீரர்கள் அசத்தல்
மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அடுத்த இடத்தில் பாட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடியில் இருக்கிறார். முதலிரண்டு இரண்டு இடத்திலும் ஆஸி. வீரர்கள் இருக்கிறார்கள்.
ஆகாஷ் சோப்ராவும் ரிஷப் பந்த்தான் அதிகத் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவாரெனக் கூறியிருந்தார். மேலும், ஜேக் பிரேசர் மெக்கர்க்கை பஞ்சாப் அணி எதிர்பார்க்கும் எனக் கூறியுள்ளார்.