செய்திகள் :

விடுதலை பாகம் 2 விமர்சனம்: ஆழமான அரசியல், அதி தீவிரமான திரைமொழி; மீண்டும் சாதிக்கிறாரா வெற்றிமாறன்?

post image
அருமபுரியில் பன்னாட்டு நிறுவனத்தின் சுரங்கத்தைக் கொண்டுவர முனைகிறது தமிழக அரசு. அதை எதிர்த்துப் போராடிய தமிழக மக்கள் படை ரயில் தண்டவாள பாலத்தை உடைத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள். புதிதாக பணிக்குச் சேரும் காவல் அதிகாரி குமரேசன் (சூரி) பல இன்னல்களைத் தாண்டி அதன் தலைவர் பெருமாள் வாத்தியாரை (விஜய் சேதுபதி) கைது செய்கிறார். இந்த நிலையில் முடிந்த முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, வாத்தியாரின் முன்கதையாக விரிகிறது இந்தப் படம். அதன்படி வாத்தியாரைக் காட்டுப்பாதை வழியாக மற்றொரு முகாமுக்குக் கூட்டிச் செல்ல முற்படுகிறது காவல்துறை. அப்போது வழிநெடுக பெருமாள் வாத்தியார் தன்னுடைய காதலையும் சமூக அரசியல் போராட்டத்தையும் காவலர்களுக்கு விவரிக்கும் தொகுப்பே `விடுதலை பாகம் 2'.
விடுதலை 2 படத்தில்...

அநீதி விலங்குகள் பூட்டப்படுவதை வேடிக்கை பார்க்கும் சாதாரண வாத்தியாராக ஆரம்பித்து ஒரு தத்துவத்தின் தலைவனாக அதைத் திறக்கும் சாவியாகிறார் விஜய் சேதுபதி. மெல்ல மெல்ல ஏறும் கதாபாத்திரத்தின் கனத்தினை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அதிலும் மாற்றத்துக்கான இடத்தில் அழுது உடையும் காட்சியிலும், நிர்வாணம் ஒன்றும் அசிங்கமல்ல என்று கால் மேல் கால் போடும் இடத்திலும் ஒரு 'தலைவனாக' மிளிர்கிறார். முதல் பாகத்தினைப் போல அதிக திரை நேரம் இல்லாவிட்டாலும் “புரியலங்கையா, தெரியலிங்கய்யா” என்று பார்வையாளர்களின் பக்கம் நின்று சாமானிய மனிதனாகவே கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் சூரி. இறுதி காட்சியின் நடிப்புக்குக் கைதட்டல்கள்! கம்யூனிச தோழராக மஞ்சு வாரியர் சிறப்பானதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார் என்றாலும் அவரின் பாத்திரம் குறித்து இரண்டாம் பாதியிலிருக்கும் நம்பகத்தன்மை முதல் பாதியில் சற்றே மிஸ்ஸிங்.

கம்யூனிச ஆசான் கே.கே-வாக வரும் கிஷோர் பேசிக்கொண்டே இருக்கும் தொனி மேலோங்குகிறது. மனித மனத்தில் இருக்கும் அழுக்கை அப்படியே கண்ணாடி போட்டுக் காட்டியிருக்கிறது சேத்தனின் பர்ஃபாமன்ஸ். சத்தமே இல்லாமல் அதிகாரத்தின் காய்களை நகர்த்தும் இடத்திலிருக்கும் ராஜிவ் மேனன் கத்தியின்றி ரத்தமின்றி தந்திரமான வில்லத்தனத்துடன் ஒரு யுத்தத்தை நிகழ்த்தியிருக்கிறார். பண்ணை அடிமைத்தனத்திலிருந்து திமிறியெழும் பாத்திரத்தில் கென் கருணாஸ் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். இறுதிக்காட்சியில் குற்றவுணர்ச்சி மேலோங்கக் குழப்ப நிலையில் இருக்கும் இடத்தை அற்புதமாகக் கடத்தியிருக்கிறார் பாலஹாசன்.ஆர். கதையின் முக்கியமான இடத்தில் அதிகார ஆசையை வெளிப்படுத்தும் இயக்குநர் தமிழின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. இதுதவிர கௌதம் வாசுதேவ் மேனன், இளவரசு, அனுராக் காஷ்யப், சர்தார் சத்யா, போஸ் வெங்கட் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்குப் பொருந்திப்போகிறார்கள்.

விடுதலை 2 படத்தில்...

இளையராஜாவின் இசையில் ‘தெனம் தெனமும் உன் நெனப்பு’, ‘மனசுல மனசுல’ ஆகிய பாடல்கள் கரடுமுரடான திரைக்கதை பயணத்தில் இதமான கீதங்கள். பின்னணி இசை அழித்தொழிப்பு, துப்பாக்கிச் சூடு ஆகிய எழுச்சியான இடங்களில் மலைப்பாதையில் ஏறும் குமரேசனின் ஜீப்பைப் போலச் சற்றே தள்ளாடியிருக்கிறது. மலைக்காட்டின் மிதமான ஒளியுணர்வில் இரு குழுவுக்கும் நடுவே நடக்கும் சண்டையைப் பரபரப்பான கோணங்களில் படம்பிடித்திருக்கிறது ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் கேமரா கண்கள். குறிப்பாக இரவுநேரக் காட்சியின் ஒளியுணர்வு, சிங்கிள் ஷாட் காட்சிகளின் நேர்த்தி, இறுதிக் காட்சியின் பிரமிப்பு எனக் கண்கள் விரிய வைத்திருக்கிறார். ஒன்றை உள்வாங்கிக் கொள்வதற்கு எந்த அவகாசமும் கொடுக்காமல், ஒரு காட்சி அல்லது வசனம் முறையாக முடியும் முன்னரே அடுத்தடுத்து நகரும் முதல் பாதியின் படத்தொகுப்பு படத்தின் பெரிய நெருடல். பழைய வாகனங்கள் அதிலிருக்கும் பிளாக் நம்பர் போர்டு என நுணுக்கமான இடங்களில் கலை இயக்குநர் ஜாக்கியின் பங்களிப்பு தெரிகிறது.

பண்ணை அடிமைத்தனத்தை எதிர்க்கும் கருப்பனின் கதையோடு ஆரம்பிக்கும் திரைக்கதை, வாத்தியாரின் பார்வையில் அரசியல் பாடம் எடுக்கத் தொடங்குகிறது. ஆனால் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டிய அது, வேகவேகமாக நகர்ந்து செல்லும் காட்சிகளால் முழுமையடையாத உணர்வினைத் தருகிறது. சாதிய வர்க்க மொழி அரசியல், இடதுசாரிகளின் பங்களிப்பு என்று பொதுவுடைமை அரசியலின் தீவிரமான பக்கங்களைச் சமரசமின்றி திரையில் காட்டியிருப்பதற்குத் திரைக்கதை ஆசிரியர்கள் மணிமாறன் மற்றும் வெற்றிமாறனுக்குப் பாராட்டுகள். ஆனால், அவற்றில் காட்சிகளை விட வசனங்கள் அதிகமாகி இருப்பது பாடம் எடுக்கும் தொனியை மேலோங்க வைக்கிறது. இதே காரணத்தால் முதலாளித்துவ பண்ணையார்களுக்கு எதிரான அழித்தொழிப்பு எழுச்சியின் தாக்கமும் சற்றே குறைந்துவிட்ட உணர்வு! ஆனால் இடதுசாரி இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்களால் உண்டான பிரிவைப் பதிவு செய்த விதம் சிறப்பு. விவசாயக் கூலிகள் தொடங்கி, தொழிற்சாலை தொழிலாளர்கள் வரை இடது சாரி அமைப்புகள், தொழிற்சங்களைச் சேர்ந்த தோழர்கள் உழைக்கும் மக்களின் உரிமையை பெற்றுத்தர எத்தனை அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்டன எனக் காட்சியப்படுத்தியற்கு ஒரு செவ்வணக்கம்.

விடுதலை 2 படத்தில்...

இரண்டாம் பாதியில் மலைக்காட்டுக்குள் செல்லும் பயணம் திரைக்கதையின் சுவாரஸ்ய அனுபவத்தை அதிகரிக்கிறது. `நீ கூப்புடுறது இல்ல என் பேரு நான் சொல்றது தான் என் பேரு', பெரும்பான்மை கூட்டம் சிறுபான்மை மக்களை எப்படி நசுக்குகிறது என்பதை விளக்கும் இரண்டு பாதைகளை வைத்து வரும் வசனம் என ‘நச்’ அரசியல் வசனங்களுக்கு உழைத்த வெற்றிமாறனின் எழுத்துக் கூட்டணிக்கும், 'அரசால் சொல்லப்படும் அனைத்தும் உண்மையல்ல' என்று அரச பயங்கரவாதத்தின் மற்றொரு முகத்தைத் தோலுரிக்கும் இயக்குநர் வெற்றிமாறனின் துணிச்சலுக்கும் பாராட்டுகள். ராகவேந்திரன் கதாபாத்திரத்தை வைத்துச் சொல்லப்பட்ட மனிதனின் அகங்கார குணத்தின் அருவருப்பு ஒரு புறம், எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அதிகார மமதையில் பாடித் திரியும் அமுதனின் அசிங்கம் மறுபுறம் என ஆழமான கதாபாத்திர வடிவமைப்புக்குச் சான்றாக விளங்குகின்றன இப்பாத்திரங்கள்.

ஒரு கதை பலரால் தங்களுக்குத் தேவையான பகுதிகளை வைத்துத் திரித்துச் சொல்லப் பயன்படும், ஆனால் அதிலிருக்கும் உண்மையை நாம்தான் தேட வேண்டும் என்ற வசனத்தின் பிரதிபலிப்பாகவே வெற்றிமாறனின் திரைமொழியும் விரிவது அபாரம்! முடிவில் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்க அனைத்து வாய்ப்புகளும் இருந்தும், தத்துவத்தின் பின்னணியில் முடித்த விதத்தில் பேசிய அரசியலிலிருந்து அறம் தவறாமல் நிற்கிறது படைப்பு... சிறப்பு!

விடுதலை 2 படத்தில்...
மொத்தத்தில் இடதுசாரி தமிழ்த் தேசிய தத்துவத்தை முன்னெடுக்கும் `விடுதலை பாகம் இரண்டு', முதலில் சற்றே பிரசாரத்தை முன்னெடுத்தாலும் பிற்பாதியில் சுவாரஸ்யமான திரைமொழி, தேர்ந்த அரசியல் என விடுதலைக்கான வெற்றிக் கொடியைப் பறக்கச் செய்கிறது.

சகுனி பட இயக்குநர் சங்கர் தயாள் மறைவு; `யாரிடமும் கோபப்படாதவர்' - கலங்கும் நடிகர் செந்தில்

கார்த்தி நடித்த 'சகுனி', செந்தில், யோகிபாபு இணைந்து நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படங்களின் இயக்குநர் சங்கர் தயாள், மாரடைப்பு காரணமாக காலமானார். கடந்த 2012ல் 'சகுனி' வெளியானது. அதன் பிறகு பல வரு... மேலும் பார்க்க

Viduthalai 2: "மக்கள் தெரிஞ்சுக்க வேண்டிய அரசியல் இது..." - 'விடுதலை 2' குறித்து நடிகர் சூரி

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 2' திரைப்படம் இன்று (டிச 20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது .இப்படத்தில் சூரி கதை நாய... மேலும் பார்க்க