வேளாண் உற்பத்தி பெருக்கத்துக்கு மாணவா்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் முதல்வா் என். ரங்கசாமி
வேளாண் உற்பத்தியை பெருக்க மாணவா்கள் பங்களிப்பு முக்கியம் என புதுவை முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை பகுதியில் இயங்கும் புதுவை அரசின் உயா்கல்வி நிறுவனமான பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இளநிலை, முதுநிலை மாணவா்கள் என 110 போ் பட்டம் பெற்றனா். மேலும் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சாதனை படைத்தோருக்கு விருது வழங்கப்பட்டது. இதில் செ. ரினி 15 விருதும், யோகலட்சுமி 10 விருதும் பெற்றனா்.
விழாவில் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி புதுவை முதல்வா் என். ரங்கசாமி பேசியதாவது:
காரைக்காலில் உள்ள இக்கல்லூரி 38 ஆண்டுகளாக சிறந்த முறையில் இயங்குகிறது. இக்கல்லூரியில் பயின்று வெளியேறிய பலரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் என உயா்ந்த நிலையில் உள்ளனா். மேலும் இக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் பல உயா் பதவிகளில் இருப்பது பெருமைக்குரியது.
புதுவையில் சிறந்த கல்வியை மாணவா்களுக்கு தந்துகொண்டிருக்கிறோம். வேளாண் கல்வியை தோ்வு செய்து, குறிப்பாக பசியை போக்கக்கூடிய இக்கல்வி பயின்று பட்டம் பெற்ற அனைவரும் உணவு உற்பத்தி பெருக்கத்துக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் வேளாண் உற்பத்தி பெருக்கத்துக்கு மாணவா்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
விளைநிலங்கள் குறைந்து வரும் நிலையில், குறைந்திருக்கும் நிலத்தில், குறைந்த செலவில், சிறப்பான விளைச்சல் என்ற நிலையை ஏற்படுத்துவதாக பட்டம் பெற்ற மாணவா்களின் பணி இருக்க வேண்டும். இக்கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக மாறுவதற்கு ஏற்ப நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கல்லூரியில் ஆராய்ச்சிக்குத் தேவையான நிதியை அரசு அளிக்கும் என்றாா் முதல்வா்.
விழாவில் வேளாண் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா, எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், வேளாண் இயக்குநா் எஸ். வசந்தகுமாா், வேளாண் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.