2024-ல் பசிபிக் பெருங்கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!
கடந்த 2024 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் மாயமான பெரு நாட்டு மீனவர் தற்போது (2025) உயிருடன் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டைச் சேர்ந்த மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ (வயது 61) என்ற மீனவர் கடந்த 2024 டிசம்பர் 7 அன்று அந்நாட்டின் தென் கடல் பகுதியில் 2 வார மீன்பிடி பயணம் மேற்கொண்டார்.
மார்கோனா எனும் கடற்கரை நகரத்திலிருந்து துவங்கிய இந்த பயணத்தின் 10வது நாளில் ஏற்பட்ட சூறாவளியினால் அவரது படகு அதன் கடல் எல்லையிலிருந்து அடித்து செல்லப்பட்டு பசிபிக் பெருங்கடலில் மாயமானது.
இதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மற்றும் பெரு நாட்டு கடலோரக் காவல் படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனைகள் அனைத்தும் தொடர்ந்து தோல்வியடைந்தது.
இதையும் படிக்க:பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!

இந்நிலையில், கடந்த மார்ச்.12 அன்று ஈக்வடார் நாட்டு கடலோரக் காவல் படைக்கு சொந்தமான டான் எஃப் எனும் கப்பல் கரையிலிருந்து சுமார் 1,094 கி.மீ. தொலைவில் கேஸ்ட்ரோவின் படகை கண்டுபிடித்துள்ளனர். அப்போது, அந்த படகினுள் நீர்சத்து குறைபாடினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
பின்னர், ஈக்வடார் நாட்டுடான எல்லையில் அமைந்துள்ள பெருவின் பைட்டா நகரத்தில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு கடந்த மார்ச்.14 அன்று அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சுமார் 95 நாள்கள் கழித்து அவரை உயிருடன் கண்ட அவரது குடும்பத்தினர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் அந்த சந்திப்பானது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 95 நாள்களாக அவரது படகில் சேகரித்த மழை நீரை குடித்தும் கரப்பான்பூச்சி, பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை வேட்டையாடி சாப்பிட்டு அவர் உயிர் பிழைத்துள்ளார். ஆனால், கடந்த 15 நாள்களாக எந்தவொரு உணவும் கிடைக்காமல் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறியுள்ளார்.
பின்னர், அவர் பைட்டாவிலிருந்து பெரு நாட்டு தலைநகர் லிமாவுக்கு விமானம் மூலமாக அழைத்து செல்லப்பட்ட அவரை அங்குள்ள விமான நிலையத்தில் அவரது மகள் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆராவாரத்துடனும் அந்நாட்டின் தேசிய பானமான பிஸ்கோவை கொடுத்து அவரை வரவேற்றனர்.
மேலும், சான் ஆண்டர்ஸ் மாவட்டத்திலுள்ள அவரது வீடு அமைந்துள்ள தெரு முழுவதும் அவரது வருகைக்காக அலங்கரிக்கப்பட்டு பட்டாசுக்கள் வெடித்து கேஸ்ட்ரோ வரவேற்கப்பட்டார். இத்துடன், அவர் மாயமான காலத்தில் கடந்த அவரது பிறந்த நாளை தற்போது கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கேஸ்ட்ரோவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 2012 ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டிலிருந்து பயணித்து பசிபிக் பெருங்கடலில் மாயமான சால்வடார் நாட்டு மீனவரான ஜோஸ் சால்வடார் அல்வரெங்கா என்பவர் சுமார் 14 மாதங்கள் கழித்து 2014 ஆம் ஆண்டு மார்ஷல் தீவுகளில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.