மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
Ajith Kumar: "20 வருடங்களுக்கு முன் என்னைச் சந்தித்திருந்தால், என்னை வெறுத்திருப்பீர்கள்" - அஜித்
நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா யூடியூப் சேனலுக்குக் கொடுத்த நேர்காணலில் அவர் உதவியாளர்கள் இல்லாமல் எளிமையாக தனது வேலைகளைத் தானே செய்துகொள்வது ஏன் என்பதை விளக்கி பேசியுள்ளார்.
Ajith Kumar பேசியதாவது:
"நான் மிகவும் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தேன். எனக்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். எனக்கு ஏழு எட்டு வயதிலேயே சமைக்கக் கற்றுக் கொடுத்தனர். நான் மிகச் சிறிய வயதில் கிச்சனில் வேலை செய்த நினைவுகள் எனக்கு இருக்கின்றன.

எல்லாருமே இதைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பொது வாழ்க்கைக்கு வரும்போது, உங்களுக்கு நிறைய கமிட்மென்ட்களும் கடமைகளும் இருக்கும் அதை நிறைவேற்றுவதற்காக உங்களுக்கு மற்றவர்களின் தேவை இருக்கும். அது நேரத்தை மிச்சப்படுத்தும்.
உங்களுக்குத் தினசரி உதவி செய்ய ஒரு குழு இருப்பதை நான் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால் நான் அதைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் சில சமயம் அது உங்களைப் பாழாக்கி விடும்.
ஆரம்பத்தில் உங்கள் கை பையைத் தூக்கவும், மற்றவற்றுக்கும் உதவி செய்வார்கள். காலப்போக்கில் உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரிடத்திலும் அதை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவீர்கள்.
நான் அப்படி இருந்திருக்கிறேன், இப்போது அதற்காக வெட்கப்படுகிறேன். அதனால்தான் இப்போது எல்லாவற்றிலுமிருந்து விலகி துபாயிலிருக்கிறேன். முக்கியமான காரணம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்தான். இங்கு நிறைய சர்க்யூட்டுகள் இருக்கு. ஒரு வகையில் அது எனக்கு உதவுகிறது.
இங்கு எல்லாவற்றையும் நானே செய்வதை ரசிக்கிறேன். குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொண்ட விஷயங்கள் தற்போது உதவுகின்றன.

மற்றவர்கள் உதவிக்கு இருப்பது நேரத்தை மிச்சப்படுத்தும். ஆனால் அது உங்களைப் பாழாக்கக்கூடும். 20 வருடங்களுக்கு முன்பு என்னைச் சந்தித்திருந்தால், நீங்கள் என்னை வெறுத்திருப்பீர்கள்.
நான் பாழாகியிருந்தேன் என்று சொல்லவில்லை, ஆனால் என்னிடம் ஒரு குழு இருந்தது. உங்களைச் சுற்றி அதிகமானவர்கள் இருந்தால், வாழ்க்கை கடினமாகிவிடும். நான் நிறைய நேரத்தை அவர்களுக்கிடையிலான தினசரி சண்டைகளைத் தீர்ப்பதிலும், அவர்களை நிர்வகிப்பதிலும் வீணடித்தேன்.
அதனால், முடிந்தவரை சுயமாக இருப்பது நல்லது என்று நினைத்தேன். சில சமயங்களில் உதவி இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் பல சமயங்களில் நீங்களே சமாளித்துக்கொள்ளலாம். இப்போது நான் என் முடிவுகளால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எல்லோரிடமிருந்தும் விலகி இருக்கிறேன்.
திரைப்பட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு, ஊக்கத்துக்கு நன்றி. ஆனால் அது சில சமயம் போதைப்பொருள் போல ஆகிவிடும். புகழ் ஒரு போதை. என் முந்தைய அனுபவங்களால் நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். நான் ரசிகர்கள் கொடுக்கும் புகழை ரசிக்கிறேன், ஆனால் அதைத் தொட விரும்பவில்லை, அதன் தாக்கத்தில் இருக்க விரும்பவில்லை." எனப் பேசியுள்ளார்.


















