'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' - கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்...
Ajith: "F1 படத்தில் Brad Pittடிடம் கேட்கும் கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்" - அஜித்தின் பதில் என்ன?
நடிகர் அஜித் குமார், இப்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். 'அஜித் குமார் ரேஸிங்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கியிருக்கும் அஜித் குமார், தனது சினிமா வாழ்க்கை குறித்தும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்தும் இன்னும் பல விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

கேள்வி: 'F1' படத்தில் பிராட் பிட் கதாபாத்திரமான சன்னி ஹெய்ஸ் இறுதிக் காட்சியில் ரேஸிங்கில் வெற்றி பெற்றுவிட்டு, அங்கிருந்து வெளியேறி மீண்டும் தனது மோட்டார் ஸ்போர்ட்ஸ் கனவை அடுத்தடுத்து எடுத்துச் செல்ல கிளம்பிவிடுவார். கார் ஓட்டுவதே அவரது அலாதி ஆனந்தம் எனப் படம் முடியும்.
படத்தில் சன்னி ஹெய்ஸிடம், 'பணத்துக்காக கார் ஓட்டவில்லை என்றால் எதற்காக கார் ஓட்டுகிறீர்கள்' என்று கேட்பார்கள். இப்போது அதே கேள்வியை நான் அஜித்திடம் கேட்க விரும்புகிறேன். எதற்காக அஜித் கார் ஓட்டுவது, ரேஸிங் எனக் கவனம் செலுத்துகிறார்.
அஜித் குமார்: "'Pushing the limits'. நான் ஒரு கட்டத்திற்குள் அடங்கிவிட விரும்பவில்லை. எனது எல்லைகளைக் கடந்த எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்து பார்க்க ஆசைப்படுகிறேன்.
ரேஸிங் மோட்டர் ஸ்போர்ட்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் அதை இப்போது செய்துகொண்டிருக்கிறேன்.

கார் ரேஸிங்கில் ஒவ்வொரு முறையும் நமது எல்லைகளைக் கடந்து செல்ல வேண்டும் 'Pushing the limits'. ஒரு சிறிய தவறு செய்தால்கூட பெரிய பாதிப்புகள் வந்துவிடும். அதனால் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் வாழ்க்கைக்கும் பல பாடங்களைச் சொல்லித் தருகின்றன.
எல்லா ஸ்போர்ட்ஸும் வாழ்க்கைக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருவதாகவே நினைக்கிறேன். எல்லாரும் ஏதோவொரு ஸ்போர்ட்ஸில் ஈடுபட வேண்டும். அது வாழ்க்கையை இன்னும் அழகாக வாழ்வதற்கு உதவும். அதை ஒரு தியானம்போல உணர்வீர்கள்.
கேள்வி: ஒரு சூப்பர் ஸ்டாராக சினிமாவில் வாழ்ந்துவிட்டு இப்போது ரேஸிங்கில் உதவியாளர்கள் இல்லாமல் நீங்களாகவே உங்கள் வேலைகளைச் செய்கிறீர்கள், சிறிய அறையில் உடை மற்றுகிறீர்கள், சமைக்கிறீர்கள், பெரிதாக இங்கு வசதிகள் இல்லை. வசதியாக வாழ்ந்துவிட்டு இப்போது எல்லாமே நீங்களாவே செய்துகொண்டிருப்பது எப்படி இருக்கிறது?
அஜித் குமார்: நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கால கட்டத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். அப்போது நானே என் வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். எந்தவொரு உதவியாளர்களும், வசதிகளும் எனக்கில்லை. வசதியான வாழ்க்கையெல்லாம் அதன்பிறகுதான் வந்தது.

Ajith Kumar: "20 வருடங்களுக்கு முன் என்னைச் சந்தித்திருந்தால், என்னை வெறுத்திருப்பீர்கள்" - அஜித்
என் வேலைகளைச் செய்ய எனக்கென்று உதயவியாளர்கள் வந்தபிறகு எனக்கு நேரம் மிச்சமானது. ஆனால் காலப்போக்கில் எல்லாவற்றிற்கும் அவர்களை நம்பியிருக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவீர்கள். அது ஆபாத்தானது.
இப்போது என் வேலைகளை நானே செய்துகொள்கிறேன், எல்லாவற்றையும் நானே செய்வதை ரசிக்கிறேன். உங்களைச் சுற்றி அதிகமானவர்கள் இருந்தால், வாழ்க்கை கடினமாகிவிடும். அதனால், முடிந்தவரை சுயமாக இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
இப்போது மீண்டும் எனது பால்ய காலத்திற்குச் சென்று எனது வாழ்க்கையை மீண்டும் இன்னொரு இடத்தில் இருந்து தொடங்குகிறேன். நானாக சமைத்துக் கொள்வது, நானே என் வேலைகளைப் பார்த்துக் கொள்வது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. அது எனக்குப் பிடித்திருக்கிறது. மக்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் நானும் இருக்க ஆசைப்படுகிறேன்" என்று பேசியிருக்கிறார் அஜித்.