Ajithkumar Exclusive: அஜித்துடன் மீண்டும் இணையும் இசையமைப்பாளர்; GBU-விலிருந்து வெளியேறினாரா DSP?
`குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. மொத்த படப்பிடிப்பும் இன்னும் 7 நாள்களில் முடிந்துவிடும் என மைத்ரி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர் நவீன் `புஷ்பா 2' திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்வில் தெரிவித்திருந்தார்.
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைப்பதாக முன்பே அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது அவருக்குப் பதில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் படத்திற்குள் வந்திருக்கிறாராம். சென்னையில் நடைபெற்ற `புஷ்பா 2' திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்வில்கூட மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் செயல்களின் மீது அதிருப்தி தெரிவித்து சில விஷயங்களைப் பேசியிருந்தார் தேவி ஶ்ரீ பிரசாத். `புஷ்பா 2' திரைப்படத்தின் பின்னணி இசைப் பணிகளையும் மற்றொரு இசையமைப்பாளர் பார்த்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தேவி ஶ்ரீ பிரசாத்துக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் ரீப்ளேஸ் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படத்தின் கதாநாயகனாக ஜி.வி. பிரகாஷ் நடித்திருந்தார். இதுமட்டுமல்ல, ஆதிக் ரவிசந்திரனுக்குப் பெரியளவிலான வரவேற்பைப் பெற்றுக் கொடுத்த `மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கும் அதிரடியான இசையை அமைத்துக் கொடுத்திருந்தார்.
தனது ஆதர்ச நாயகனை வைத்து தற்போது திரைப்படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் ஆதிக். தன்னுடைய கரியரின் மிக முக்கியமான திரைப்படத்திற்கு இசையமைக்கக் களமிறங்கியிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இதற்கு முன்பு அஜித்தின் `க்ரீடம்' திரைப்படத்திற்கு இவர் இசையமைத்திருந்தார். தற்போது 17 வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் படத்திற்கு இசையமைக்கிறார்.
ஜி.வி. பிரகாஷுக்கு ஏற்கெனவே இந்தாண்டு கேப்டன் மில்லர், தங்கலான், அமரன், லக்கி பாஸ்கர், மட்கா எனப் பல ஹிட் ஆல்பம்கள் அமைந்திருக்கின்றன. `குட் பேட் அக்லி' ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என்பதால் `மார்க் ஆண்டனி' திரைப்படத்தைப் போலவே அதிரடியான இசையைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...