கழுதை பாலில் சோப், க்ரீம்; ஒருலிட்டர் 1300 ரூபாய் - 150 குடும்பங்களுக்கு வாழ்வளி...
BB TAMIL 9 DAY 21: ‘கம்ருதீன், உக்காருங்க’ சலித்துக் கொண்ட விசே; வசமாக சிக்கிய பாரு - கம்மு கூட்டணி
‘கம்ருதீன்.. உக்காருங்க’ - இந்த வசனத்தை இந்த சீசனில் விஜய்சேதுபதி எத்தனை முறை சொல்லியிருப்பார். இப்படி ஒரு க்விஸ் கேள்வியே வைத்து விடலாம். பேசாமல் கம்ருதீன் பெயரை ‘கம்முனுருங்கதீன்’ என்று மாற்றி வைத்து விடலாம்.
ஆனால் இது கம்ருதீனும் அடாவடி நடவடிக்கைகளுக்கு தேவைதான். கேட்ட கேள்வியைப் புரிந்து கொள்ளாமல் வம்பாக ஜாங்கிரி சுற்றி விசேவிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.

“என்னதான் அட்வைஸ் பண்ணாலும் ஸாரி சொல்லிட்டு வீட்டுக்குள்ள மறுபடியும் அதையேதான் பண்றாங்க. இவங்களை மேய்க்கறதே ஒரு பெரிய சவாலா இருக்கு. அதுக்கு தனியா திறமை தேவைப்படுது” என்று சலித்துக் கொண்டபடி வீட்டுக்குள் சென்றார் விசே.
பிறந்த நாள் வாழ்த்தை கேட்டு வாங்கிக் கொண்ட வினோத், பிறகு பாடிய கானா பாடல் சுவாரசியம். ‘சோத்து துன்ட்டு சும்மா இருக்கக்கூடாது’ என்கிற வரி வந்த போது ஒரு மாதிரியாக விழித்தார் திவாகர்.
முதல் கேள்வியாக ‘வீட்டு தல’ கனி எப்படி நடந்து கொண்டார் என்பது. கனியின் எதிர் டீம் நபர்களில் ஒருவரான கம்ருதீன் உடனடியாக எழுந்து “அவங்க சிலரை கட்டம் கட்டியிருக்காங்க. அவங்களுக்கு மட்டும்தான் அட்வைஸ், தண்டனைல்லாம் கொடுப்பாங்க” என்று சொல்ல “இல்ல.. புரியல” என்று பங்கம் செய்தார்.
பிறகு கம்ருதீன் ஜப்பானிய அதிபர் போல, “அவரு என்ன சொல்றார்ன்னா…” என்று அவரது உரையை பாரு மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. பாருவும் கம்ருதீனும் இது குறித்து பேசும் போது “நல்லா சத்தமா பேசுங்க. ஜெயில்ல பேசிக்கற மாதிரி குசுகுசுன்னு பேசாதீங்க” என்று விசே கிண்டல் அடித்தது சுவாரசியம்.

இப்ப பாருங்க.. பாரு எப்படி சொல்லப் போறாங்க” என்ற விசே , ‘இது என்னோட கேம்.. இது என்னோட ஸ்ட்ராட்டஜி..’ என்று பாருவைப் போலவே நடந்து காட்டியது சுவாரசியமான காமெடி. “போன தலய விட இந்த தல நிறைய சொல்யூன்ஸ் கொண்டு வந்தாங்க. ஆனா அவங்க அல்லாட்டத்தைப் பார்க்க எனக்கே பாவமா இருந்தது” என்று பாரு சொல்ல “யாருக்கு.. உங்களுக்கு?” என்று கேட்டு கிண்டலடித்தார் விசே. (அந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணமே நீங்கதானே..? என்பது விசேவின் சிரிப்பிற்கு காரணம்!).
“கனியக்கா எஃப்ஜேவிற்கு சப்போர்ட் பண்றாங்க. அவருக்கு பஞ்சாயத்து பண்ணும் போது மட்டும் டோன் சாஃப் ஆயிடுது. என்னை மட்டும் கண்டிப்பா பேசறாங்க” என்று வியன்னா விரிவாக புகார் செய்ய ‘இந்தப் பொண்ணுக்கு இவ்ளோ பேச வருமா?” என்பது மாதிரி வியந்தார் விசே.
“கனி. இது உங்க மேல வர்ற மூணாவது கம்ப்ளெயிண்ட். பார்த்து நடந்துக்கங்க” என்ற விசே, துணிச்சலாக பேசிய வியன்னா காப்பாற்றப்பட்ட செய்தியை சொன்னார். பிறகு சுபிக்ஷா, பிரவீன் ஆகியோரும் காப்பாற்றப்பட்டனர்.

“யாரால தனியா நிக்க முடியாது.. இன்னொருத்தர் நிழல்லதான் அவங்களால நிக்க முடியும்?” - இதுதான் அடுத்த கேள்வி.
இதில் பெரும்பான்மையோர் பாரு - கம்ருதீன் கூட்டணியை சொன்னது உண்மை. ‘பாரு காக்கா ஸ்ட்ராட்டஜியை’ ஃபாலோ பண்றாங்க’ என்றார் கெமி. பாருவின் முறை வந்த போது நாலைந்து பேரை இழுத்து வர “என்ன சாமர்த்தியம் பார்த்தீங்களா?” என்று சிரித்தார் விசே. ஆதிரையும் எஃஜேவும் ஒருவருக்கொருவர் நிழலாக இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.
துஷாரை சொன்ன கம்ருதீன் “சார். இன்னொரு விஷயம். எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஹைட்டா இருக்கிற காரணத்தினால துஷார் என்னை மிரட்டினார்” என்கிற புகாரை வைக்க “யப்பா.. சாமி. காமிரால்ல எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிட்டுதான் இருந்தோம்” என்று விசே மடக்கினார்.
“தல திரும்பிடும்ன்னு சொல்லி மிரட்டறீங்க.. அத்தனை வன்முறை பேச்சு, நடத்தை. நீங்க போட்ட குப்பையையெல்லாம் வார்றதுக்கு ஒரு வாரம் ஆகும். நேத்திக்கே பொதுவா வார்னிங் கொடுத்துட்டு போனேன். ‘உங்க இமேஜ்தான் கெடும்’ன்னு சொன்னேன். ஆனா நீங்க என் மேலேயே கம்ப்ளெயிண்ட் கொடுக்கறீங்க. ஹஹ” என்று கம்ருதீனை இறங்கி அடித்தார் விசே.

வினோத் செய்யும் அலப்பறைகள் குறித்து நீளமாக புலம்பிய திவாகர் “என்னை தினமும் வம்பிழுக்கிறார். தூங்க விட மாட்டேங்கிறார்” என்று கதறினார். இதற்கு சாட்சி சொல்ல எழுந்த விக்ரம் “திவாகர் என் மேல படுத்துட்டு இருந்தார்” என்று அபத்தமாக ஆரம்பிக்க “என்னது..?” என்று ஜாலியாக ஜொ்க் ஆனார் விசே. ஒரு ஸ்டான்ட்அப் காமெடியனை கலாய்த்த மோமெண்ட். “இல்ல. சார்.. தொடை மேல படுத்துட்டு இருந்தார். அப்ப வினோத் வந்து.. வாயால சத்தம் எழுப்பி ஒரண்டை இழுத்தார்” என்று சாட்சியம் சொன்னார்.
வினோத்தும் கம்ரூதீனும் இணைந்து தன்னை டார்ச்சர் செய்வதைப் பற்றி திவாகர் தொடர்ந்து புலம்ப “அவரு சொல்றதை கேட்க ஜாலியாக இருக்கலாம். ஆனா அது ஒரு மனுஷனோட வலி” என்று விசே சொல்ல சபை சீரியஸ் ஆனது. “நீ என்னோட காலுக்கு கீழேதான்னனு சொல்றாரு சார். அவருதான் ஆரம்பிச்சாரு” என்று வினோத் எழுந்திருக்க “திவாகர்.. நீங்களும் கட்டுப்பாட்டோடு பேசணும்.. என்னை வெச்சு அவரு ஃபேமஸ் ஆக டிரை பண்றாருன்னு சொல்றீங்க. இங்க ஒழுங்கா கேம் ஆடினாலே ஃபேமஸ் ஆகலாம். யார் தயவும் தேவையில்லை” என்றார் விசே.
“நீங்க ரெண்டு பேரும் ஜாலியா பேசிக்கறது, எங்களுக்கு எண்டர்டெயின்ங்கா இருக்கு.. அதுதான் எங்களுக்கு வேணும். ஆனா ஒருத்தரையொருத்தர் டீஸ் பண்றது பார்க்க நல்லால்ல” என்று விசே சொன்னது உண்மை.
ஆதிரை பேசும் போது ‘பெண்கள் பாதுகாப்பு’ மேட்டரை அவிழ்த்து விட, திவாகருக்கு அனைத்து பெண்களும் ஆதரவு தர, கம்ருதீனுக்கு மீண்டும் மண்டகப்படி நடந்தது. “சுபிக்ஷா அப்படி சொன்னாங்க சார்… அஞ்சு செகண்ட் பின்னாடி பார்த்தீங்கன்னா.. மதர் பிராமிஸா ரிகார்டு ஆகியிருக்கு சார்” என்று சீசன் 1 ஜூலி போலவே கம்ருதீன் கதற “அப்படி ஒரு காட்சியை காமிராக்கள் பதிவு செய்யவில்லை. உக்காருங்க கம்ருதீன்.. பிளேட்டை மாத்திப் பேசாதீங்க. நீங்க பண்ணதுதான் தப்பு” என்று அதட்டி உட்கார வைத்தார் விசே.

விசே பிரேக் விட்டு சென்றதும் “எஃப்ஜே கூட நான் அடிக்கடி சண்டைதான் போடறேன்.. அப்புறம் எப்படி நிழலா இருக்கேன்னு சொல்றாங்க” என்று அரோராவிடம் அனத்திக் கொண்டிருந்தார் ஆதிரை. (ஒருவேளை நிழல் சண்டையா இருக்குமோ?!)
“இங்க எல்லோருமே யாருக்காவது நிழலாத்தான் இருக்காங்க.. எங்களை மட்டும் சொல்றது தப்பு” என்று ஆவேசமாக கதறிக் கொண்டிருந்தார் பாரு. துஷாரிடம் மீண்டும் ஒரண்டை இழுத்த கம்ருதீன் “என்ன மாதிரியான வளர்ப்பு?” என்கிற வார்த்தையை விட மற்றவர்கள் தடுத்தார்கள். துஷாருக்கும் கம்ருதீனுக்கும் மீண்டும் கைகலப்பு ஏற்படும் சூழல். அறிவிப்பு தராமல் அமைதியாக வந்த விசே டிவி வழியாக இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். “இப்பத்தானடா.. சொல்லிட்டுப் போனேன்… ஒரு டீ குடிச்சிட்டு வர்றதுக்குள்ள திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்க”...
“நாமினேஷன்ல இருக்கறவங்க ஒண்ணா உக்காருங்க” என்கிற வழக்கமான வசனத்தைச் சொன்னார் விசே. “யாரு வெளிய போவா?” என்று யூகக் கேள்விக்கு, கோரஸாக அரோகரா சொல்வது போல மெஜாரிட்டியான நபர்கள் ‘அரோரா’ என்றனர். ஆனால் அனைவரையும் ஷாக் அடையச் செய்வது போல் அரோராவை காப்பாற்றி விட்டு ஆதிரைக்கு எவிக்ஷன் கார்டு கொடுத்தார்.
டாஸ்க்கில் சிறந்து விளங்கினாலும் ரொமான்ஸ் இம்சைகள் காரணமாக ஆதிரை வெளியேறினாரோ என்று தோன்றுகிறது. இந்த வகையில் கடந்த சீசனின் தர்ஷிகாவை நினைவுப்படுத்துகிறார் ஆதிரை. டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்ற தர்ஷிகா, விஜே விஷாலுடனான காதலால் தடுமாறி ஆட்டத்தில் கவிழ்ந்தார்.

இந்த சீசனின் கடந்த எவிக்ஷனில் வெளியேறிவர்களை பிக் பாஸ் அவ்வளவாக கண்டு கொண்டதில்லை. ஆனால் ஆதிரையை “நீங்கள் ஒரு நல்ல போட்டியாளர். இவ்வளவு சீக்கிரம் வெளியே செல்ல வேண்டியவர் அல்ல” என்று வெளிப்படையாக சொன்னது சிறப்பு. “சரி.. போறதுதான் போறீங்க. இங்க இருக்கறவங்க பத்தி உங்க உண்மையான அபிப்ராயத்தை சொல்லிட்டுப் போங்க” என்று பிக் பாஸ் கேட்க “திவாகர்..நீங்க தனியா ஆடினா சூப்பரா வருவீங்க. கம்ருதீன், எஃப்ஜே கோபத்தை குறைக்கணும்.. கெமி பெஸ்ட் கம்பானியன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
மேடையில் விசே “எங்க மிஸ் ஆச்சுன்னு நெனக்கறீங்க?” என்று கேட்க “என் கேம் நல்லாத்தான் ஆடினேன். டாஸ்க்லாம் சிறப்பா பண்ணேன்.. மக்கள் என்னைப் புரிஞ்சுக்கலை” என்று அவர்கள் மீதே பழி போட்டு விட்டுச் சென்றார் ஆதிரை. வீட்டுக்குச் சென்று வீடியோக்களைப் பார்த்தால் அவருக்கே புரியலாம்.
ஆதிரையை வழியனுப்பி வைத்த விசே “இனிமே ஆட்டம் இன்னமும் ரணகளமா இருக்கும். தயாரா இருங்க. அடுத்த வாரம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார். (வைல்ட் கார்ட் என்ட்ரிதானே?!)
கலையும் திவாகரும் இப்போது ஒரு கூட்டணி அமைத்து விட்டார்கள். அடுத்த வாரம் யாரைத் தூக்கலாம் என்று ரகசியம் பேசிக் கொண்டார்கள். வினோத், கம்ருதீன் இங்கிருந்து போனால் திவாகருக்கு நிம்மதி.

‘உங்க காரெக்டர்தான் வெளிப்படுது’ என்று விசே அத்தனை அட்வைஸ் செய்தாலும் கம்ருதீன் அடங்குவதாக இல்லை. “நான் திவாகரை அடிச்சத பாத்தியா” என்று ஒரண்டை இழுக்க துஷார் வந்து ‘சிம்ப்ளி வேஸ்ட். வா.. ஸ்ருதி போகலாம்’ என்கிற மாதிரி அரோராவை இழுத்துச் செல்ல ‘த்தோடா.. வன்ட்டாரு ஹீரோ.. சின்னப்பையா’ என்கிற மாதிரி அனத்திக் கொண்டிருந்தார் கம்ருதீன்.
‘இந்த வாரமும் பாரு செய்கிற அலப்பறையோடுதான் எபிசோடுஆரம்பம்’ என்பதை இன்றைக்கு வெளியாகியிருக்கிற பிரமோ காட்டுகிறது. இதுல இருந்து நமக்கு எப்பத்தான் விடுதலை கிடைக்கும்?!




















