செய்திகள் :

BB Tamil Day 14: சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்ட தர்ஷா; விசே உசுப்பி விட்டதால் சூடான அர்னவ்

post image
இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், அர்னவ் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், போட்டியாளர்கள் எந்த மாதிரியான தர வரிசையில் இருக்கிறார்கள் என்பதை ஒரு உத்தேசமான கணிப்பாக பார்த்து விடுவோம். ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக பார்க்காமல் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முத்து நிச்சயம் டாப் 1-ல் இருக்கிறார். அவருக்கும் இரண்டாவது இடத்திற்குமான தூரம் கணிசமான அளவில் இருக்கிறது.

வேகமாக முன்னேறும் திறமையாளரைப் பார்த்து சக போட்டியாளர்களுக்கு எரிச்சல் வருவது இயல்புதான். அந்த வகையில் பெண்களின் பலத்த எதிர்ப்பை முத்து சம்பாதித்து வருகிறார். ஆண்கள் அணியிலும் முத்துவின் திறமையைப் பார்த்து உள்ளுற எரிச்சல்பட்டாலும் உடன்படுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. தீபக், விஷால் ஆகிய இருவரும் கூடுதலாக மெனக்கெட்டால் முத்துவிற்கு போட்டியாக அமையலாம். மற்றவர்கள் சுமார்தான்.

பெண்கள் அணியில் தர்ஷிகா, ஆனந்தி, ஜாக்குலின் ஆகிய மூவரும் அடுத்தடுத்த வரிசையில் நகரக்கூடிய திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.  இவர்களுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தக்கூடிய புதிய போட்டியாளர்கள் உள்ளே வந்தால் மட்டுமே களம் இன்னமும் சுவாரசியமாக மாறும்.  இரண்டாவது வாரத்தில் விஜய்சேதுபதியின் ஹோஸ்டிங் எப்படியிருந்தது? பார்ப்போம். 

பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 14

சவுந்தர்யாவைப் பற்றி பெண்கள் அணி புறம் பேசிக் கொண்டிருந்தது. மீண்டும் உணவுப் பிரச்சினை. அவர்களுக்கு வைத்திருந்த பாயசத்தை எடுத்து, ‘ஆண்கள் அணியுடையது’ என்று நினைத்து சவுந்தர்யா சாப்பிட்டு விட்டாராம். ‘என்னதிது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?’ என்று பொங்கிய சுனிதா ‘spoiled brat’ என்று ஆங்கிலத்தில் கோபப்பட்டார். “சாச்சனாவை வேணுமின்னா கொஞ்சம் குழந்தைன்னு ஒத்துப்பேன். இது குழந்தை கிடையாது’ என்று பொருமினார் அன்ஷிதா. 

சவுந்தர்யாவிற்கு ஆதரவாக பேச ஆரம்பித்த ஜாக்குலின் அங்கு வந்த எதிர்ப்பைப் பார்த்து ‘அவளுக்கு சொன்னா புரியவே மாட்டேங்குது’ என்று பின்வாங்கினார். பிக் பாஸ் வீட்டில் உரசல்கள், சண்டைகள் ஏற்படுவதற்கு அடிப்படையான காரணமாக இருப்பதில் முக்கியமானது பசி. ‘பசி வந்துட்டா நீ நீயா இருக்க மாட்டே’ என்கிற விளம்பரம் மாதிரி ஆகி விடுகிறார்கள். 

‘நீதான் தைரியமான ஆளாச்சே.. சொல்லேன்’ - உசுப்பி விட்ட விசே


“உள்ளே பயங்கரமா அடிச்சுக்கறாங்க. ஆடு புலி ஆட்டம் மாதிரி இருக்குது. யாருக்குத் தெரியும், சைலண்ட்டா இருக்கற ஆமை கூட ஜெயிச்சிடலாம். பார்ப்போம்’ என்றபடி மேடைக்கு வந்தார் விஜய்சேதுபதி. “பிக் பாஸ்..  நம்ம செல்லங்களைப் பார்த்துடலாமா?” என்றபடி வீட்டுக்குள் நுழையத் தயாரானார். என்னதான் ‘செல்லம்’ என்று விசே சொன்னாலும் அவர் அடிக்கிற முரட்டுத்தனமான அடிகளைப் பார்க்கும் போது ‘பிக் பாஸ்.. அந்தச் சனியன்களை காட்டித் தொலைங்க’ என்பதைத்தான் அப்படி சர்காஸ்டிக்காக சொல்கிறாரோ என்று தோன்றுகிறது.

‘உங்களுக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கும். நீங்கதான் தைரியமான ஆளாச்சே.. கேளுங்க பார்க்கலாம்’ என்கிற டாஸ்க்கை ஆரம்பித்து நிகழ்ச்சியை பரபரப்பாக மாற்ற முயன்றார் விசே. “வயசுல பெரியவங்களா இருக்கீங்களே ரஞ்சித் சார். நாமினேஷன் சதிக்கு நீங்களும் பலியாகலாமா?” என்கிற கேள்வியுடன் ஆனந்தி ஆரம்பித்து வைக்க “இல்ல.. தங்கம்.. நான் நெனச்சதும் முத்து சொன்னதும் சரியா மேட்ச் ஆச்சு.. சாமி” என்று ரஞ்சித் இனிமையான புன்னகையுடன் பதில் சொன்னதும் வேறு வழியில்லாமல் ஆனந்தி அமர்ந்து விட்டார். 

ஆனந்தி

“யாருய்யா.. அந்த ஜோக்கர்?” என்று சுனிதா ஆவேசமாக கேட்ட கேள்வியை முத்து திறமையாக எதிர்கொண்டதில் சுனிதாவிற்கு பதில் பேசவே தோன்றவில்லை. அடுத்து ஒரு சுவாரசியம் நிகழ்ந்தது. “நான் மென்ட்டல் டார்ச்சர்ன்ற வார்த்தையை பயன்படுத்தினேனா.. சொல்லுங்க.?” என்று பெண்கள் அணியை நோக்கி அர்னவ் அழுத்தமாக கேள்வியெழுப்ப “சூப்பரு.. ஏம்ப்பா.. இப்படி நீ பேசி நான் பார்த்ததே இல்லை.. செம” என்று கைதட்டி அர்னவ்விற்கு ஆதரவு தந்தார் விசே. 

“அதாவதுங்கய்யா.. நான் ஆடு களவு போன மாதிரி கனவுதான் கண்டேன்” என்கிற காமெடி மாதிரி தர்ஷா தத்தித் தத்தி தடுமாறி பதில் சொல்ல “சொன்னியா.. இல்லையாம்மா.. டக்குன்னு சொல்லுங்க” என்று ஹெட்மாஸ்டர் மாதிரி அதட்டினார் விசே. “எனக்கு ஃபுட்டேஜ் பார்க்கணும் சார்.. இது விஷயமா ஆண்கள் அணில ஒரு கலவரமே நடந்தது. அருண் வேற என்னை ரொம்ப திட்டிட்டான்” என்று அர்னவ் வேண்டுகோள் வைக்க, இந்த சீசனின் முதல் குறும்படம் வெளியாகப் போகிறதோ என்கிற ஆவல் எழுந்தது. ஆனால் குறும்படம் என்றால் விசேவிற்கு பிடிக்காது போல. இந்த விஷயத்தை அப்படியே கடந்து விட்டார். படம் போட்டு நிரூபித்திருந்தால் காட்சிகள் சுவாரசியமாக ஆகியிருக்கும். 

‘பிக் பாஸ் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க” - கறாராக பேசிய விசே

“நெஜம்மாவே சமைக்கத் தெரியுமா.. தெரியாதா?” என்றொரு கேள்வியை தர்ஷாவை நோக்கி விஷால் கேட்க சபையில் பலத்த கைத்தட்டல் எழுந்தது. ‘சமைக்கத் தெரியும்’ என்று அடிபட்ட முகத்துடன் சொன்னார் தர்ஷா. “ஏன்.. பிரதர்.. வெங்காயம் வாசனை போறதுக்கு இஞ்சி போடணும்ன்னு ஐடியா சொன்ன நீங்கள்லாம் சமையல் பத்தி பேசலாமா?” என்று விஷாலையும் போட்டுத் தாக்கினார் விசே. 

“நீங்க மனச்சாட்சிப்படிதான் ஆடறீங்களா?” என்று முத்துவிடம் கேள்வி கேட்டு வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டார் ஜாக்குலின். “ஜாக்குலின் அழும் போது முத்து மனிதாபிமானமா நடந்துக்கலை” என்று தர்ஷிகா சாட்சி சொல்ல “அப்ப நீங்க என்ன வேணா அழிச்சாட்டியம் பண்ணுவீங்க.. தண்டனை கொடுத்தா மட்டும் அழுவீங்க… அப்ப அந்த தண்டனையை உடனே கலைச்சுடணுமா. எந்த ஊர் நியாயம் இது?” என்று விசே அதிரடியாக கேட்க ‘என்னடா இது.. நாம போட்ட பந்து நமக்கே திரும்பி வருது” என்று ஜெர்க் ஆனார் ஜாக்குலின். அதென்னமோ ஜாக்குலினை குடாய்வதென்றால் விசேவிற்கு தனியான ஆர்வம் வந்து விடுகிறது. ஜாக்குலினிற்கும் அப்படியொரு கடிவாளம் அவசியம்தான். ஜாக் சொன்ன புகார்களை முத்து அநாயசமாக எதிர்கொண்டார்.

விஷால்

“பிக் பாஸ் போட்ட விதிகளைத் தாண்டி நீங்களா ஸ்பெஷல் ரூல்ஸ் போட்டுக்காதீங்க.. உங்களை வசதியா வெச்சுக்கறதுக்கு இந்த ஷோ இல்ல. விதிகள்படிதான் ஆடணும். மீறினா தண்டனை இருக்கும். அதைக் கொடுக்கறவங்களும் மக்கள் பார்த்துட்டு இருக்காங்கன்ற கவனத்தோட கொடுப்பாங்கன்னு நம்பறேன். ஒருவேளை தண்டனைகள் கடுமையா இருந்தா ஆட்சேபம் தெரிவிக்க உங்களுக்கு உரிமையுண்டு” என்றார் விசே. 

விதிகளை பெண்கள் அணி அலட்சியமாக கையாள்வதைப் பற்றிய எச்சரிக்கையாக இது அமைந்தது. “வீட்டுப்பணிகளை ஆண்கள்தானே செய்யணும்?” என்கிற கேள்விக்கு “நான் சாப்பிட்ட தட்டை நான்தான் கழுவுவேன்” என்று சொன்ன ஜாக்குலினைப் பாராட்டி பிரேக்கில் சென்றார் விசே. ஜாக்குலின் பின்பற்றுவது ஒரு நல்ல பழக்கம். 

விசே பிரேக்கில் சென்ற சமயத்தில் பாயாச மேட்டரை எழுப்பி சவுந்தர்யாவிடம் பலத்த ஆட்சேபத்தை எழுப்பினார் சுனிதா. “உனக்குப் புரியுதா.. இல்லன்னா. புரியாத மாதிரி நடிக்கிறியா.. இது உன் வீடு கிடையாது” என்றெல்லாம் சுனிதா எகிற, ‘இப்ப நான் என்ன பண்ணேன்” என்று பரிதாபமாக பார்த்தார் சவுந்தர்யா. ஆண்கள் அணிக்கான உணவு என்று நினைத்து சவுந்தர்யா சாப்பிட்ட பாயாசம், தர்ஷா மற்றும் ஆனந்தியின் பங்கு. இந்த விஷயம் தெரிந்ததும் ‘ஸாரி’ என்று கேட்டார் சவுந்தர்யா. உணவு விஷயத்தில் அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு வருவது பரிதாபமான விஷயம். சுனிதா தன்னுடைய ஓவர் ரியாக்ஷனை தவிர்த்திருக்கலாம். 

மறுத்துப் பேசாமல் சொதப்பிய போட்டியாளர்கள்

பிரேக் முடிந்து திரும்பிய விசே, ‘சத்யாவோட கேப்டன்சி எப்படியிருந்தது?” என்று கேட்க கலவையான எதிர்வினைகள் வந்தன. “அவர் ஆண்களுக்கு சார்பா இருந்த மாதிரி தெரிஞ்சது” என்றார் ஆனந்தி. இரண்டு கைகளையும் தூக்கிய முத்து “அவர் ஆண்கள் அணிக்கு சார்பாக இல்லை. பெரும்பாலான சமயங்களில் நடுநிலைமையைத்தான் பின்பற்றினார். ஆனால் சில இடங்களில் இன்னமும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்” என்று மையமாகச் சொல்ல “இந்த வார கேப்டன்சில எனக்கு திருப்தியில்லப்பா.. கேப்டன்றது தைரியமா முடிவுகள் எடுக்க வேண்டிய ஒரு பதவி. சொகுசா உக்கார்றதுக்கு இல்ல. ஒரு பிரச்சினை வந்தா கேப்டன்தான் முடிவு எடுக்கணும். எல்லாத்துக்கும் ‘டாடி’யை (பிக் பாஸ்) கேட்டுக்கலாம்ன்னு இருந்தா எப்படி?” என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார் விசே. 

அடுத்ததாக ‘பிபி அவார்ட்ஸ்’ பற்றிய தலைப்பிற்குள் வந்தார் விசே. தனக்கு கிடைத்த ‘டிராமா க்வீன்’ விருது பற்றி தர்ஷா சொல்ல பார்வையாளர்களின் மத்தியில் கிண்டல் கலந்த பலமான கைத்தட்டல் கேட்டதும் மெழுகு பொம்மை போல முகம் மாறினார் தர்ஷா. தனக்கு கிடைத்த ‘க்ரூப்புல டூப்பு’  விருது பற்றி தடுமாற்றத்துடன் சவுந்தர்யா சொல்ல “உங்களுக்கு ஏன் எப்பவுமே வார்த்தை பற்றாக்குறை ஏற்படுது?” என்று நக்கலடித்தார் விசே. ‘எனக்குப் பேச வராது’ என்பது சவுந்தர்யா எப்போதுமே ஒப்புக் கொள்கிற வாக்குமூலம். “இதை வேற யாருக்காவது தர்றீங்களா?” என்கிற கேள்விக்கும் தடுமாறினார் சவுந்தர்யா.

பிக்பாஸ் வீடு

“ஏம்மா.. உங்களுக்குத் தந்த விருதோட அர்த்தம் கூட தெரியாம இருக்கீங்களே.?” என்று சவுந்தர்யாவை விசே மேலும் மடக்க “சரிங்க. நானே வெச்சுக்கறேன்” என்று பின்வாங்கினார் சவுண்டு. ‘என்னம்மா.. இப்படிப் பண்றீங்களேம்மா’ என்று நொந்து போனார் விசே. தனக்கு தரப்பட்ட அவமான விருதை மறுத்துப் பேசி அதற்குப் பொருத்தமானவர்களுக்குத் தந்து ஆட்டத்தை சுவாரசியமாக்குவார்களா என்பதுதான் விசேவின் எதிர்பார்ப்பு. ஆனால் சவுந்தர்யா மட்டுமல்ல, பலரும் பம்மி பம்மி அமர்ந்தார்கள். ‘என்னடா.. இது எவ்வளவு பத்த வெச்சாலும் வெடிக்காத நமத்துப் போன பட்டாசா இருக்கே?” என்று விசேதான் டயர்ட் ஆக வேண்டியிருந்தது. 

“இப்ப பாருங்க.. ஜாக்குலின் அசத்தப் போறாங்க” என்று பில்டப் தந்து அடுத்ததாக அவரிடம் வந்த விசே “உங்களுக்கு கிடைச்ச ‘டம்மி பாவா’  விருதை யாருக்குத் தர விரும்பறீங்க?” என்று கேட்க “அது வந்து சார்…  தர்ஷாவிற்குத் தரலாம். பயங்கரமா கத்துவா.. ஆனா பாவம்  அவஒரு குழந்தை சார்” என்று ஜாக்குலினும் சொதப்ப வேறு வழியில்லாமல் வாய் விட்டு சிரித்து விட்டார் விசே. ‘அந்தக் குழந்தையே நீங்கதான்’ என்கிற மாதிரி முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டிருந்தார் தர்ஷா. ‘என்னடா இப்படி ஆயிடுச்சு” என்று சங்கடமான முகத்திற்கு மாறினார் ஜாக்குலின். (பிக் பாஸ் ஒரு ஸ்கிரிப்டட் ஷோ என்று சொல்பவர்கள் இது போன்ற எக்ஸ்பிரஷன்களை கவனியுங்கள். உலகத்தின் எந்தவொரு சிறந்த நடிகராலும் இப்படியொரு இயல்பான முகபாவத்தை நிகழ்த்தவே முடியாது. அசலாக வெளிப்படும் முகபாவங்களை எவருமே நகல் செய்யவே முடியாது). 

சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்ட தர்ஷா

அடுத்த பட்டாசாவது பற்றுகிறதா என்று முயன்றார் விசே. “தர்ஷா.. நீங்க சொல்லுங்க.. டிராமா க்வீன் விருதை வேற யாருக்காவது தர விரும்பறீங்களா?” என்று அவர் கேட்க, மென்று முழுங்கிய தர்ஷா “மக்கள் கைத்தட்டறது.. நீங்க சிரிக்கறதல்லாம் பார்த்தா.. அந்த விருது எனக்கேதான் பொருத்தமாக இருக்குன்னு தோணுது” என்று குழந்தை மாதிரி பேச தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக மாறிய விசே “ஏம்மா.. இந்த வீட்ல மத்தவங்க மேல நிறைய கம்ப்ளெயிணட் சொல்ற ஒரே ஆள் நீங்கதான். உங்களுக்கா ஆள் இல்ல?” என்று கேட்க வேறு வழியில்லாமல் அந்த விருதை ஜாக்குலினிக்கு திருப்பி அளித்தார் தர்ஷா. (யப்பா.. உலக நடிப்புடா சாமி!). 

அடுத்த பட்டாசும் டம்மியாகத்தான் ஆனது. ஆண்கள் அணி ஏறத்தாழ அனைத்து விருதுகளையும் தூக்கி அர்னவ்வின் தலையில் போட “சுமைதாங்கியா வாழற அர்னவ் இதைப் பத்தி என்ன சொல்றார்?” என்று விசே கேட்க,  ‘நான் இதை பெருமையா எடுத்துக்கறேன்” என்று சம்பிரதாயமான சமாளிப்பாக அர்னவ் சொல்ல “இது பெருமையா எடுத்துக்க வேண்டிய விஷயம் இல்ல பிரதர்” என்று கடுப்பானார் விசே. ஏன் பலரும் தங்களின் மீதான அவமானப் பழிகளை மறுத்துப் பேசாமல் அப்படியே பம்மி விடுகிறார்கள் என்பதில் பார்வையாளர்களுக்குமே எரிச்சல் வந்திருக்கும். 

தர்ஷா

விசே உசுப்பி விட்டதால் சற்று சூடான அர்னவ் “ஆண்கள் அணில க்ரூப்பிஸம் இருக்கு. அதனாலதான் நான் வெளியே இருக்கேன்” என்றொரு புகாரை சொன்னவுடன் “அப்படி வா குமாரு’ என்று உற்சாகமானார் விசே. “ஆண்கள் அணி … இதப் பத்தி சொல்லுங்க.. யாராவது உங்களை மறுத்துப் பேசினா அவரை கட்டம் கட்டுவீங்களா.. ஏன் அர்னவ் மேல எல்லா கேஸையும் எழுதறீங்க?” என்று விசே கேட்க அதற்கு விளக்கம் அளிக்க எழுந்தார் ரஞ்சித். “ஆண்கள் அணி தங்களுக்குள் பேசிக் கொள்வதையெல்லாம் பெண்கள் அணியிடம் போய் அர்னவ் சொல்லி விடுகிறார். அன்ஷிதாவிற்கு மட்டும் அனுமதியில்லாமல் சுடுதண்ணீர் தந்தார். தர்ஷா எங்க டீமுக்குள் வந்த பிறகு நிலைமை இன்னமும் மோசமாயிடுச்சு” என்பதின் ரஞ்சித்தின் வாக்குமூலம். 

“ஓகே.. யார் சேவ்டுன்னு பார்க்கலாமா.. இல்ல பிரேக் போயிட்டு வந்துடவா?” என்று விசே கேட்க “சேவ்டு பார்க்கலாம் சார்” என்று போட்டியாளர்கள் ஆவலுடன் சொல்ல “இல்ல.. நான் பிரேக் கோயிட்டு வந்துடறேன்” என்று நக்கலடித்தார் விசே. ‘வாலி’ என்கிற திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் ‘தாஜ் ஹோட்டலுக்கு இந்தப்பக்கம்தானே போகணும்?’ என்று விவேக் கேட்க “ஆமாம்” என்று ஒருவர் பதில் சொல்ல, “எனக்கு அந்தப் பக்கம் வேலை இல்ல. இந்தப் பக்கமா போறேன்” என்பார் விவேக். விசேவின் பாணியும் இப்படித்தான் இருக்கிறது.

எலிமினேட் ஆன அர்னவ் - வாய்ப்பை தவற விட்டாரா?


பிரேக் முடிந்து திரும்பிய விசே “யாரு வெளிய போவாங்கன்னு நெனக்கறீங்க?” என்று பார்வையாளர்களிடம் கேட்டார். (இதெல்லாம் புதுசாவுல்ல இருக்கு?!). சவுந்தர்யா, சாச்சனா, தர்ஷா என்று சரியான பதில்கள் மக்களிடமிருந்து வந்தன. ‘அர்னவ்’ பெயரும் வந்ததில் “அவரு போகக்கூடாதுங்க.. அவர் இருந்தாதான் சுவாரசியம். இனிமேத்தான் இருக்கு அவரோட ஆட்டம்” என்று ஒருவர் எழுந்து அர்னவிற்கு ஆவேசமாக சப்போர்ட் செய்ய “நீங்க அர்னவ்வோட சொந்தக்காரரா?” என்று கேட்டு நக்கலடித்தார் விசே. 

‘யாரு வெளிய போவா?” என்கிற கேள்வியை போட்டியாளர்களிடம் கேட்டதில் பெரும்பாலோனோர் ‘சவுந்தர்யா’ என்று சொல்ல முத்து மட்டும் ‘அர்னவ்’ என்று சரியாக யூகித்தார். பிறகு நாமினேஷன் வரிசையில் இருந்தவர்களை ‘நீங்க சேவ்டு.. நீங்க.. அந்தப் பக்கம் போங்க” என்று சுண்டல் தருவது போல் வரிசையாக அவர்கள் காப்பாற்றப்பட்ட செய்தியை விசே சொன்னதால் சுவாரசியம் இல்லாமலேயே இந்தப் போர்ஷன் கடந்து போனது. தாங்கள் காப்பாற்றப்பட்டதை தர்ஷா மற்றும் சவுந்தர்யாவால் நம்பவே முடியவில்லை. மீதமிருந்தவர்கள் ஜாக்குலின் மற்றும் அர்னவ். எனில் இதில் சஸ்பென்ஸே இல்லை. ஜாக்குலின் திறமையான ஆட்டக்காரர் என்பதால் அர்னவ்தான் என்பதை எளிதாக யூகிக்க முடிந்தது. 

பிக்பாஸ் வீடு

எவிக்ஷன் கார்டில் இருந்த ‘அர்னவ்’ என்கிற பெயரை விசே காட்ட, வழக்கம் போல் அதிக ரியாக்ஷன் இல்லாமல் ஏற்றுக் கொண்டார் அர்னவ். இந்தச் சமயத்தில் காமிரா மிகச்சரியாக அன்ஷிதாவிற்கு க்ளோசப் வைக்க, அவருடைய முகத்தில் கண்ணீர். எல்லோரிடமும் நிதானமான புன்னகையுடன் அவசரம் அவசரமாக விடைபெற்றுக் கொண்டாலும் தன்னுடைய டிராஃபியை ஓங்கி உடைத்த சமயத்தில் அர்னவ்விற்குள் இருந்த ஒட்டுமொத்த எரிச்சலும் அந்தச் சமயத்தில் உக்கிரமாக வெளிப்பட்டது. கோபத்தை அவ்வப்போது வெளிப்படுத்துபவர்களைக் கூட நம்பி விடலாம். ஆனால் அடக்கி வைத்து வெளியே புன்னகைப்பவர்கள் வெடிகுண்டு போல ஆபத்தானவர்கள். 

அர்னவ்வின் வீடியோவில் ‘இது என் அஞ்சு வருஷ கனவு’ என்று பிக் பாஸ் வாய்ப்பு பற்றி அவர் சொல்வதைப் பார்க்க முடிந்தது. ஆனால் இந்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்று பார்த்தால் இல்லை. ஏதோ வீட்டில்  இரண்டு நாட்கள் தங்க வந்த சித்தப்பா மாதிரியே விலகலான மனநிலையில் இருந்தார். சொந்த அணியிலேயே சொதப்பினார். 

அர்னவ்வை உசுப்பேற்றி பேச வைத்து பல்டியடித்த விசே


‘இதை நான் எதிர்பார்க்கலை” என்று  மேடைக்கு வந்த அர்னவ்விடம் “ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொல்லட்டுமா.. மென்ட்டல் டார்ச்சர்ன்ற வார்த்தையை நீங்க சொல்லலை” என்று நமத்துப் போன பட்டாசாக மாறினார் விசே. இதை அப்போதே குறும்படம் போட்டு நன்றாகக் கொளுத்தியிருக்கலாம். “சரி.. ஓகே. வீட்ல இருக்கறவங்க கிட்ட பேசறீங்களா.. மனசுல இருக்கறதையெல்லாம் கேட்டுடுங்க” என்று உசுப்பேற்றி விட்டார் விசே. தனக்கேற்ற இயல்புடன் அர்னவ் சம்பிரதாயமாக ஆரம்பிக்க “நல்லா அடிச்சு ஆடுங்க பிரதர்” என்று இன்னமும்  உசுப்பி விட்டார் விசே. 

ஓவ்வொருவரையும் பற்றி கருத்து சொன்ன அர்னவ், விசே தந்த உற்சாகம் காரணமாக “டேய் .. பாய்ஸ் டீம்ஸ்.. ஜால்ராக்களா…” என்று கட்டிங் போட்ட கோவிந்தன் மாதிரி திடீரென்று இறங்கி அடிக்க அவரைத் தடுத்தி நிறுத்திய விசே. ‘வாய்ப்பு தந்தேன்றதுக்காக.. வன்மத்தைக் கக்கக்கூடாது. என்ன இருந்தாலும் அவங்க என் ஹவுஸ்மேட்ஸ்” என்று வீட்டின் பாதுகாவரலாக திடீரென்று மாற “நான் பாட்டுக்கு சிவனேன்னு  வெளியே போயிருப்பேன்..  மைண்ட்ல இருக்கறதையெல்லாம் பேசுன்னு நீங்கதானே சொன்னீங்க” என்று அர்னவ் உள்ளுக்குள் அலறியிருக்கலாம். 

அர்னவ்

அர்னவ்வை ஆரம்பத்தில் உசுப்பி விட்டு விட்டு பிறகு அவர் இறங்கி ஆடும் சமயத்தில் “இதுதான் தவறான விஷயம். இது மேடை நாகரிகம் கிடையாது” என்று அந்தர்பல்டி அடித்த விசேவின் செயல் ரசிக்கத்தக்கதாக இல்லை. கடந்த வாரத்தில் வெளியேறிய ரவியின் கமெண்ட்டுகளும் ஏறத்தாழ இதே மாதிரிதான் மிகையாக இருந்தன. அந்தச் சமயத்தில் ஏன் விசே ஆட்சேபிக்கவில்லை?

மெஷின் கன் கேள்விகளால் சுற்றி வளைக்காமல் நேரடியாக விசே பேசும் பாணி ஒரு கோணத்தில் ரசிக்க வைத்தாலும் போட்டியாளர்களைக் காயப்படுத்துவது போல் பேசி விடுவது ஏற்புடையதாக இல்லை. தனக்கு வழங்கப்பட்ட ‘சொம்புதூக்கி’ விருதிற்காக அருண் தயங்கித் தயங்கி எதையோ சொல்ல ஆரம்பிக்க “அப்ப அதை நீங்களே வெச்சுக்கங்க” என்று பட்டென்று விசே சொன்னதில் பரிதாபமாக அமர்ந்தார் அருண். “மூஞ்சுல அடிச்ச மாதிரி கேட்டுடுங்க” என்கிற வார்த்தையையும் விசே  அடிக்கடி பயன்படுத்துகிறார். 

கறாராக நடந்து கொள்கிறேன் என்கிற பெயரில் விசே இப்படிச் செய்யும் விஷயங்கள் நெருடலாக இருக்கின்றன. ‘என் தம்பியை நான் அடிப்பேன். இந்த ஊர்ல யாரும் கேட்கக்கூடாது. இந்த ஊர்ல என் தம்பியை யாரும் அடிக்கக்கூடாது. நான் கேட்பேன்” என்று ஒரு திரைப்படத்தில் நடிகர் பிரபு வசனம் பேசுவார். விசேவின் பாணி இப்படித்தான் இருக்கிறது. பிள்ளையைக் கிள்ளி விட்டு பிறகு தொட்டில் ஆட்டிய கதையாக “அர்னவ் சொன்னதையெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க. அடுத்த வாரம் பார்ககலாம்” என்று போட்டியாளர்களிடம் சொல்லி விடைபெற்றார் விசே. 

இனி எப்படியிருக்கும் ஆட்டம்?


ஜாக்குலினிற்கும் அவரின் நிழலாக இருந்த சவுந்தர்யாவிற்கும் இடையே உரசல் ஏற்பட்டு பிரேக்-அப்பாக மாறியிருக்கிறது.  இது பற்றி தனிமையில் அனத்திக் கொண்டிருந்தார் சவுந்தர்யா. “வீட்ல பார்த்தா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க. தப்பு பண்றோமோன்னு தோணுது” என்றெல்லாம் தன் இமேஜ் குறித்து அனத்திய தர்ஷாவிடம் “உனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. கேம்ல கவனம் செலுத்து. உன் இமேஜை மாத்திக் காட்டு” என்பது போல் சரியான ஆலோசனை சொன்னார் விஷால். 

முத்து

“நாம இதை கேமா மட்டும் பார்க்கலை.. ஆனா ஆண்கள் அணில எத்தனை கிளவரா இருக்கறாங்கன்னு பாரேன். ஒத்துமையா இருந்த மாதிரி காண்பிச்சிட்டு அர்னவ்விற்கு எல்லா விருதையும் கொடுத்துட்டாங்க” என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார் ஆனந்தி. அர்னவ்வின் பிரிவிற்காக வருந்திய அன்ஷிதா “அவனைப் பத்தி இங்க எனக்குத்தான்  ரொம்ப நல்லாத் தெரியும். அவன் வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான். அதிகம் பேச மாட்டான்” என்றெல்லாம் சொல்ல “அப்படின்னா நல்லாப் பேசி கேம் ஆடியிருக்கணும்ல.. ஏன் சான்ஸை மிஸ் பண்ணாரு?” என்று பவித்ரா கேட்ட கேள்வி சரியானது. 

செஸ் ஆட்டத்தை வைத்து பிக் பாஸ் கேம் பற்றி ஆண்கள் அணிக்கு விளக்கம் சொன்ன முத்து, இப்போது கபடி ஆட்டத்தை வைத்து சாச்சனாவிற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். 

வீட்டின் எண்ணிக்கை பதினாறாக மாறியிருக்கிறது. இந்த இரண்டு வாரத்தில் இந்த சீசனின் போக்கு எப்படிச் செல்கிறது? கமெண்ட்டில் வந்து சொல்லுங்கள் மக்களே!

Bigg Boss Tamil 8: ஆரம்பமான அடுத்த நாமினேஷன்; அணி மாறும் சாச்சனா, ஜெஃப்ரி; அடுத்து என்ன நடக்கும்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான இரண்டு புரோமோக்கள் வெளியாகி இருக்கின்றன.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி தொடக்கப்பட்டு இரண்டு வாரம் முடிவடைந்து இருக்கிறது. இதில் முதல் வாரத்தில் ரவீந்... மேலும் பார்க்க

Bigg Boss: ஜாக்குலின், தர்ஷாவை கடிந்துகொண்ட விஜய் சேதுபதி - இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது?

பிக் பாஸ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.நேற்றைய எபிசோடில் வழக்கம்போல விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பல கேள்விகளை எழுப்பி விசாரித்தார். குறிப்பாக, சம்மந்தி பஞ்சாயத... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 13: சாச்சனாவின் ‘உணவு’ பிரச்னை; ஆட்டத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்கிறாரா விசே?

பிக் பாஸ் சீசனுக்கும் முட்டைக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஒவ்வொரு சீசனிலும் முட்டை தொடர்பான சர்ச்சைகள் உத்தரவாதமாக வெடிக்கும். இந்த எட்டாவது சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே இங்கும் வெடித்தது. உ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: `வெளியேறிய அர்னவ்’ - சக போட்டியாளர்கள் போட்ட ஸ்கெட்ச் தான் காரணமா?

மெது மெதுவாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 8. ரவீந்தர், தீபக், ரஞ்சித், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் எவிக்‌ஷன... மேலும் பார்க்க

புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் ‘ஆண்கள் Vs பெண்கள்’ - பரபரப்பாக நடந்து வரும் பிக் பாஸ்!

பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6 ஆம் தேதி பிரம்மாண்டமாக 5 மணி நேர தொடக்கவிழாவுடன் துவங்கியது.புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற... மேலும் பார்க்க