செய்திகள் :

BB Tamil Day 17: 'போடா - போடி' ஜெஃப்ரிக்கும் சாச்சனாவிற்கும் சண்டை; ‘திண்டுக்கல் ரீட்டா’வாக விஷால்

post image
ஹோட்டல் டாஸ்க்கில் பெண்கள் அணி ஓவர் அலப்பறை செய்தது. ஆண்களைப் பழிவாங்குவது போலவே நடந்து கொண்டதைப் போல் தெரிந்தது. எழுதுவதற்கு இடம் போதாத அளவிற்கு பலகையில் நிறைய புகார்களை எழுதிக் குவித்தார்கள். இந்த முறை நாமினேஷன் ஃப்ரீ பாஸை பெண்கள் அணிதான் தட்டித் தூக்கும் என்று தோன்றுகிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 17


‘ஒரு குச்சி, ஒரு குல்பி’, என்கிற பிக் பாஸ் சீசன்களில் அடிக்கடி ஒலிக்கும் பாடலைப் போட்டு மக்களை எழுப்பினார்கள். பெண்களில் சிலர் தயாராக இருக்க, சிலர் இன்னமும் ரெடியாகாத நிலையில் பஸ்ஸர் அடித்து ஹோட்டல் டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். 

‘அடுத்த ரவுண்டில் நம்மை பதிலுக்கு வெச்சு செய்வார்கள்’ என்கிற பதட்டத்திலேயே ஆண்கள் பம்மியிருந்ததைப் போல் பட்டது. ‘நீங்க நடந்து வர்றது எனக்கு கஷ்டமா இருக்கு’ என்று சுடுதண்ணீர் எடுத்து வரும் ஜாக்குலினிடம் ஐஸ் வைத்தார் ரஞ்சித். முத்து சாப்பிட்ட பிளேட்டை ஜாக் எடுக்க முயன்ற போது “வேணாம் மேடம். நானே கழுவிக்கறேன். இதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும்ன்னு எனக்குத் தெரியும்” என்று ஜெர்க் ஆகி சிரித்தார் முத்து. 

பிக்பாஸ் வீடு

ரஞ்சித் ஐஸ் வைத்து பேசியதாலோ என்னமோ, சுடுதண்ணீர் ஆறிப் போய் கிடந்தது. ‘அண்ணன் சொன்னாருன்னு போய் சொல்லு. சுருக்குன்னு சுடுதண்ணி வேணும்’ என்று ரூம் சர்வீஸ் ஜெஃப்ரியிடம் ரஞ்சித் கறாராகச் சொல்லி அனுப்ப ‘அண்ணனுக்கு ஊத்தப்பம்’ என்று கிச்சன் டீமிடம் ஆர்டர் சொன்னார் ஜெஃப்ரி. ‘சுருக்குன்னு சுடுதண்ணியா கேட்குது… தரோம்” என்று பொருமிய பெண்கள் அணி, சுடுதண்ணீரை தயார் செய்து மறந்து அங்கேயே வைத்து விட்டார்கள். ‘ஒருவேளை பழிவாங்கற மோட்ல இருக்காங்களோ?” என்று பயத்துடன் விசாரித்தார் ரஞ்சித்.

தலைக்கு மசாஜ் கேட்ட சத்யா, ‘சாப்பிட எதுவுமே தரலை’ என்கிற புகாருடன் கீழே சாய்ந்து விட்டார். ‘கிறுக்குப் பய தங்கமணி தலைவலியால் மயக்கம்..’ என்கிற பிரேக்கிங் நியூஸை புகார் பலகையில் எழுதினார் முத்து.

‘ஆங்கிலத்தில் எனக்குப் பிடிக்காத வார்த்தை’ - புகார் சொன்ன ஜாக்குலின்


சபையைக் கூட்டிய பிக் பாஸ் ‘review time’ என்று அறிவித்தார். வாடிக்கையாளர்கள் மேல் புகார் இருந்தால் ஹோட்டல் பணியாளர்கள் சொல்லலாம். ‘எதுக்குமே டைம் தரலை’ என்கிற புகாரை தீபக் மீது அன்ஷிதா வைக்க, அவர் கறாராக பதிலடி தந்ததில் உடனே ஆஃப் ஆனார். 

அடுத்து வந்த ஜாக்குலினும் தீபக் மீது பிராது கொடுத்து “அவர் பேசற எல்லா ஆங்கில வார்த்தைகளும் எங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்ல” என்றார். “இது கூடவா தெரியாது”ன்னு அவர் கேட்டது கஷ்டமா இருக்கு” என்பது ஜாக்கின் புகார். ‘இது கூடவா தெரியாது’ என்று ஏளனமாக கேட்பது நிச்சயம் ஒருவரை புண்படுத்தும் என்பது உண்மைதான்.

பிக்பாஸ் வீடு

ஆனால் மிகவும் தரமான இண்டர்நேஷனல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் என்னும் போது அங்குள்ள பணியாளர்களுக்கு நிச்சயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் பணி சார்ந்த வார்த்தைகள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். இந்த அடிப்படையான லாஜிக்கை புகார் தெரிவிப்பதற்கு முன் ஜாக் யோசித்திருக்கலாம். 

‘தலை மசாஜ் கேட்ட சத்யாவை ஹாண்டில் செய்யறதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. நாங்க ஒண்ணும் அடிமைகள் இல்ல. அவர் ஒருத்தர்தான் பிரச்சினை தந்தாரு. மத்தபடி எல்லோருமே ஓகே’ என்று சுனிதா வைத்த புகாரைக் கேட்டு அதிருப்தியுடன் முகம் சுளித்தார் சத்யா. 

ஜெஃப்ரிக்கும் சாச்சனாவிற்கும் இடையே ஒரு சண்டை


ஜெஃப்ரிக்கும் சாச்சனாவிற்கும் இடையே ஒரு பெரிய சண்டை நிகழப் போவதற்கான அறிகுறி ஆரம்பத்திலிருந்தே தெரிகிறது. பெரியவர்களை விடவும் அதிகமான ரெடர் மோடில் இருக்கிறார்கள். “டேய் தம்பி.. “ என்று ஆரம்பித்து சாச்சனா சொன்ன கமெண்டைக் கேட்டு மனம் புண்பட்ட ஜெஃப்ரி, பதிலுக்கு முறைப்பைக் காட்ட அதை புகாராக எழுதி வைத்தார் சாச்சனா. ‘’கஸ்டமர் கிட்ட அப்படி நடந்துக்கக்கூடாதுப்பா” என்கிற சுனிதாவின் இடையீட்டினால், வேண்டாவெறுப்பாக வந்து மன்னிப்பு கேட்ட ஜெஃப்ரி பிறகு மேஜையின் மீது ஆத்திரத்துடன் குத்தி விட்டுச் சென்றார். 

‘ரூம் சர்வீஸ் ஆளு கிட்ட சமையல் பத்தி கேட்கலாமா… லாஜிக் இருக்கா?” என்பது ஜெஃப்ரியின் ஆதங்கம். ‘ரூம் சர்வீஸ் வழியாத்தானே சொல்லியனுப்ப முடியும்?” என்பது சாச்சனாவின் வாதம். “போடா.. வாடான்றாங்க’ என்று முத்துவிடம் கோபத்துடன் அனத்தினார் ஜெஃப்ரி. ‘சரி. விடு.. அடுத்த ரவுண்டுல நீ பார்த்துக்க” என்று ஆறுதல் சொன்ன முத்துவிடம் ‘பதிலுக்கு வாடி போடின்னு  சொன்னா நல்லாவா இருக்கும்” என்று பொருமினார் ஜெஃப்ரி. கடைநிலை பணியாளர்களிடமும்  மரியாதையும் கனிவுமாக பேசுவதுதான் அடிப்படையான பண்பு. 

பிக்பாஸ் வீடு

மீண்டும் சபையைக் கூட்டிய பிக் பாஸ், “ஹோட்டல் நிர்வாகம் எப்படியிருக்கு?” என்று வாடிக்கையாளர்களிடம் விசாரிக்க “வெல்.. குட்.. நேத்தை விட இன்னிக்கு பெட்டரா இருக்கு’ என்று சான்றிதழ் தந்தார் தீபக். “அப்படின்னா.. இவங்களே நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தினா நல்லாயிருக்கும்ல?” என்று பிக் பாஸ் செய்த  கொடூரமான காமெடியைக் கேட்டு ‘அய்யோ.. பிக் பாஸ் வேணாம்” என்று அலறியது பெண்கள் அணி. 

‘ஓகே. பெண்களின் நிர்வாகம் முடிவிற்கு வந்தது’ என்று பிக் பாஸ் அறிவித்தவுடன் ‘ஹப்பாடா..’என்று மகிழ்ச்சியில் கூச்சலிட்ட பெண்கள் ‘இருங்கடா.. இனிமேதான் இருக்கு உங்களுக்கு கச்சேரி’ என்கிற மோடில் கொலைவெறியுடன் சிரிக்க “பிக் பாஸ்.. எங்களுக்குப் பயமா இருக்கு. எல்லோரும் வன்மத்தைக் கக்க ரெடியா இருக்காங்க” என்பது போல் பீதியாகி சிரித்தார் முத்து. பெண்கள் அணி 1050 ரூபாய் டிப்ஸாக சம்பாதித்திருந்தது. 

க்யூட்டாக மாறி பெண்கள் அணியின் பாராட்டைப் பெற்ற விஷால்

இனி ஆண்களின் நிர்வாகம். சீஃப் ஷெஃப் தீபக். அவருடைய உதவியாளர்கள் ரஞ்சித், சாச்சனா. விஷால் ரிஷப்னிஸ்ட். (தாடி எடுத்து பார்க்க க்யூட்டாக இருந்தார்). ரூம் சர்வீஸ் சத்யா, அருண். மேனேஜர் முத்து. இந்த அறிவிப்பை சுவாரசியமான முறையில் நகைச்சுவையுடன் சொன்னார் முத்து. பெண்கள் அணி ஆரவாரத்துடன் சிரிக்க “இந்த சவுண்டை கேட்கவே பயமா இருக்கே” என்று பம்மினார் அருண். 

‘யார் யார் எந்தெந்த கேரக்டர் வாடிக்கையாளர்களாக மாறலாம்?’ என்று பெண்கள் அணி ஆலோசித்தது. ‘நான் ஆக்ட்ரஸா இருக்கணும்னு முதல்லேயே தீர்மானிச்சிட்டேன். அந்த மோட்ல செட் ஆகிட்டேன். அதை மாத்த முடியாது’ என்று அடம் பிடித்தார் தர்ஷா. கடந்த முறை வாய்ப்பு கிடைக்காத ஆனந்திக்கு ‘சோஷியல் மீடியா பிரபலம்’ என்கிற கேரக்டர் கிடைத்தது. அவருடைய பொறாமை பிடித்த மருமகளாக பவித்ரா. சவுந்தர்யாவும் சுனிதாவும் மாடல்கள். இதையெல்லாம் கூட ஒருமாதிரி சகித்துக் கொள்ளலாம். ஆனால் அன்ஷிதாவை பாட்டியாக்கியதுதான் கொடுமை. அவரும் துணிச்சலாக பாட்டி  கேரக்டரை எடுத்துக் கொண்டது பாராட்டத்தக்கது. ஆனால் இத்தனை இளமையான பாட்டியைப் பார்த்ததில்லை. அவருடைய பேரன் ஜெஃப்ரி. 

பிக்பாஸ் வீடு

ஹோட்டலில் முதல் வாடிக்கையாளராக பந்தாவுடன் உள்ளே வந்தவர், கிரிஷா என்கிற நடிகையாக மாறிய தர்ஷா. “இந்த இடம் அப்படியொண்ணும் நல்லால்ல” என்று அவர் செய்த அலப்பறையைப் பார்த்து பிக் பாஸ் புரொடக்ஷன் டீம் காண்டாகியிருக்கும். நடிகையின் உதவியாளர்களாக ஜாக் மற்றும் தர்ஷிகா. “மேடம் நீங்க நடிச்ச விளம்பரங்களை பத்தாயிரம் முறைக்கும் மேலா பார்த்திருக்கேன்” என்று சொல்லி ஐஸ் வைத்து வரவேற்றார் மேனேஜர் ‘முகமலர்ச்சி’ முத்துக்குமரன். பாட்டி அன்ஷிதாவும் பேரன் ஜெஃப்ரியும் அடுத்து வந்தார்கள். 

‘அழகிய லைலா… அது இவளது ஸ்டைலா’ என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்காத குறையாக, அமர்த்தலான உடல்மொழியுடன் வந்தவர் மாடல் சவுந்தர்யா. ‘உங்க கண்ணு ரொம்ப அளகா இருக்கு’ என்று விஷாலைப் பார்த்து அவர் சொல்ல “கண்ணு மட்டுமில்ல. நீங்க ஒட்டுமொத்தமாவே அளகா இருக்கீங்க” என்று பதிலுக்கு ஐஸ் வைத்தார் ரிஷப்னிஸ்ட் விஷால். 

ஜாக்குலின் - சவுந்தர்யா - வினையாகிப் போன விளையாட்டு

‘சோஷியல் மீடியா பிரபலம்’ மாமியாராக ஆனந்தியும் அவருடைய மருமகள் பவித்ராவும் அடுத்து வந்தார்கள். சிறந்த ஒப்பனையில் மாடலாக நுழைந்தார் சுனிதா. ஜாக்கும் சவுந்தர்யாவும் ஒருவரையொருவர் ‘கலக்கப் போவுது யாரு’ காமெடி ஷோ மாதிரி பயங்கரமாக கலாய்த்துக் கொண்டார்கள். “போடி முட்டை போண்டா’ என்று சவுந்தர்யா சொல்ல, ‘சப்பிப் போட்ட மாங்கொட்டை’ என்று ஜாக் பதிலுக்கு கிண்டலடித்தார். ஆனால் அது விளையாட்டாக அல்லாமல் உண்மையான வன்மம் தெரிந்தது. ஒரு காலத்தில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள்தான் இவர்கள். அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையே ஒரு நூலிழைதான் இடைவெளி என்கிற உண்மை நிரூபணமாயிற்று. 

“என்ன .. இந்த இடம்லாம் இப்படியிருக்கு.. க்ளீன் பண்ணுங்க” என்று ரூம் சர்வீஸ் அருணிடம் பந்தா காட்டி பழிதீர்த்துக் கொண்டார் பவித்ரா. அவரும் ‘ஓகே.. மேடம்” என்று பம்மினார். ஆனால் ரிசப்னிஸ்ட் விஷாலின் நிலைமைதான் பாவம். தேர்தல் நேரத்து அரசியல்வாதி மாதிரி கூப்பிய கையை அவரால் இறக்கவே முடியவில்லை. ‘மேடம்.. யெஸ் மேடம். ஓகே மேடம்’ என்று பணிவான மோடிலேயே பம்மி திரிந்தார். 

பிக்பாஸ் வீடு

ரூம் மாறச் சொன்ன அருணிடம் ‘அஞ்சு தோப்புக்கரணம் போடுங்க’ என்று விநோதமான தண்டனை கொடுத்தார் சவுந்தர்யா. (மகனே… புல்சே ஆம்லேட்டா கேக்கறே?!) பெண்கள் அணி சரமாரியாக புகார்களை எழுதிக் குவித்தது. “மேடம்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்” என்று ஆண்கள் கெஞ்சினாலும் துளி கருணை  காட்டவில்லை. ஃபவுண்டைன் ஏரியாவில் துணி துவைத்து பழைய திரைப்படத்தின் காமெடியை செய்தார் அன்ஷிதா பாட்டி. 

சபையைக் கூட்டிய பிக் பாஸ் “போர்டு ஃபுல்லா கம்ப்ளெயிண்ட்டா இருக்கே.. என்னப்பா பசங்களா?” என்று விசாரித்தார். பெண்கள் அணி சரமாரியாக புகார் சொன்னது. “ஐயா.. இந்தியாவில இருக்கிற எல்லா பிரபலங்களும் ஒரே நேரத்தில் ஹோட்டலுக்கு வந்துட்டதால சமாளிக்க முடியல” என்று முத்து ஐஸ் வைத்துப் பார்த்தாலும் பெண்கள் அணி மசியவில்லை. எனவே மேனேஜர் முத்துவின் வேலை பறிபோனது. ‘வேணும்ன்னே பண்ணிட்டாங்க” என்று பவித்ரா சொன்ன அதே வார்த்தையைச் சொல்லி முத்துவும் அனத்தியது விசித்திரமான ஒற்றுமை. 

கேரக்டரில் இருந்து வெளியே வந்த விஷால்


புது மேனேஜராக பதவியேற்றுக் கொண்ட விஷால், பெண்கள் அணியிடம் புன்னகையுடன் நன்றி சொல்ல “பட்டுக்குட்டி.. செல்லக்குட்டி’ என்கிற மாதிரி பாராட்டினார்கள். ஜாக் மீது ஓவரான கிண்டல்களை சவுந்தர்யா வீச “வேணாம்.. மேடம்.. வாய்ப்பைப் பயன்படுத்தி வன்மத்தைக் கக்காதீங்க” என்று பணிவாக கிண்டடிலத்தார் முத்து. சாப்பிடும் தட்டில் பூச்சி இருந்ததால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக் கூட்டினார் தர்ஷிகா. 

ஜாக் மற்றும் சவுண்டின் உரசல் அதிகமாகிக் கொண்டே போனது. ‘பாடி ஷேமிங் பண்ணாத. எனக்குப் பிடிக்கல’ என்று ஒரு கட்டத்தில் கோபத்தை வெளிப்படுத்தினார் ஜாக்குலின். “அவங்க மட்டும் காமெடிக்கு என்னென்னவோ சொன்னாங்க.. நான் சொன்னா மட்டும் கோவமா.. என்னா மச்சான் இது’ என்று ஜெஃப்ரியிடம் பிறகு அனத்தினார் சவுந்தர்யா. அடுத்த டாஸ்க்கிற்கான அறிவிப்பு வர “சவுந்தர்யா.. கொஞ்சம் கவனி” என்று ஜாக்குலின் சொல்லி விட “எதையாவது சொல்லி ரிஜிஸ்டர் பண்ணிட்டே இருப்பியா.. நான் வந்துட்டுதானே இருக்கேன்?” என்று எரிச்சலானார் சவுண்டு. (பேச வேண்டிய இடத்திலும் இதே மாதிரி பேசியிருக்கலாம்!). 

பிக்பாஸ் வீடு

சைகையின் மூலம் திரைப்படத்தின் தலைப்பை கண்டுபிடிக்கச் செய்ய வேண்டும்’ என்கிற ஆதி கால விளையாட்டை டாஸ்க்காக வைத்தார் பிக் பாஸ். இதில் பெரும்பாலான பதில்களை சரியாகச் சொல்லி  அசத்தியது, பெண்கள் அணி. ‘திமிரு பிடிச்சவன்’ என்கிற டைட்டிலுக்காக தீபக்கை நோக்கி தர்ஷா எதற்கு கை காட்டினார் என்று தெரியவில்லை. 

அடுத்து வந்த ஆண்கள் சொதப்ப ஆரம்பித்தது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் டைட்டிலை ‘இமைக்கா நொடி’ என்று முக்கால்பாகம் சரியான பதிலை தந்தார் தீபக். ‘நாய் சேகர்’ என்கிற டைட்டிலில் நாயைக் கண்டுபிடித்து விட்ட ரஞ்சித், சேகரைக் கண்டுபிடிக்க முடியாமல் தோற்றார். இறுதியில் பெண்கள் அணி 7 பாயிண்ட்டுகள். ஆண்கள் அணி 5 பாயிண்ட்டுகள். ஆகவே இரண்டாம் சுற்றில் பெண்கள் அணி வெற்றி. மூன்றாவது சுற்றின் வெற்றிதான் ‘நாமினேஷன் ஃப்ரீ பாஸ் யாருக்கு’ என்பதைத் தீர்மானிக்கும். 

‘யெஸ்.. மேடம்.. ஓகே மேடம்..’ என்று ஒட்ட வைத்த புன்னகையுடன் சுற்றிக் கொண்டிருந்த விஷால், பெண்கள் செய்த அலப்பறையைப் பார்த்து ஒரு கட்டத்தில் எரிச்சலாகி ‘கொஞ்ச நேரம் கத்தாம இருக்கீங்களா?” என்று கோபத்தைக் காண்பிக்க “இப்ப நீங்க விஷாலா மாறிட்டீங்களா?” என்று கேட்ட தர்ஷா, ‘நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்’ என்று அதை பெண்கள் அணியில் ரிஜிஸ்டர் செய்தார். 

‘திண்டுக்கல் ரீட்டா’வாக மாறிய விஷால் 


‘உங்களை மகிழ்விப்பதற்காக கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்’ என்று அறிவித்தது, ஹோட்டல் நிர்வாகம். சத்யாவும் அருணும் பாட்டு பாடினார்கள். “அவங்களை விடவும் கூடுதலா டிப்ஸ் வாங்கிடணும்.. அப்பத்தான் நாம ஜெயிக்க முடியும்” என்று பரபரப்பான முத்து “டேய்.. விஷாலு.. நீதான் பெண்களோட செல்லாக்குட்டி. நீ எது பண்ணாலும் அவங்களுக்குப் பிடிக்கும். டிரஸ் மாத்திட்டு வந்து டான்ஸ் ஆடு. துட்டு மழையா பெய்யும்”என்று விஷாலை ஏதோ ‘திண்டுக்கல் ரீட்டா’ ரேஞ்சிற்கு ஹேண்டில் செய்தார். 

“பாம்பேல இருந்து ஒரு பிரபலமான டான்ஸர் உங்களுக்காக  வந்திருக்காங்க” என்று ஆண்கள் அணி பில்டப் கொடுக்க, விநோதமான ஒப்பனையில் கரீனா கபூராக மாறியிருந்த விஷால், இடுப்பை வளைத்து நெளித்து ஆட “ஹே. சூப்பர்ப்பா. செம ஃபிகர்ல்ல’ என்கிற மாதிரியே ரசித்து கைத்தட்டி ரசித்தது, பெண்கள் அணி. பிறகு கூடி கும்மாளமிட்டு நடனமாடி டிப்ஸை தாராளமாக அள்ளித் தெளித்தார்கள் பெண்கள். 

பிக்பாஸ் வீடு

மீண்டும் ஹோட்டல் டாஸ்க் துவங்க, கிச்சன் ஏரியாவில் ஓவராக அலப்பறை செய்து கொண்டிருந்தார் ஜாக்குலின். பிக் பாஸிற்கே அது பொறுக்கவில்லை போல. ‘டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது’ என்று அறிவிக்க ஜாக்குலினை கொலைவெறியுடன் ஜாலியாக துரத்தியது, ஆண்கள் அணி. தூங்கும் நேரம். ஆண்கள் சம்பாதித்து வைத்திருக்கும் டிப்ஸ் பற்றிய சீக்ரெட்டை பெண்களிடம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் சாச்சனா. (வெஷம். வெஷம்..). 

ஹோட்டல் டாஸ்க்கை சுவாரசியமாக கையாண்டது, ஆண்கள் அணியா அல்லது பெண்கள் அணியா? கமெண்ட்டில் வந்து சொல்லுங்க மக்களே..

Siragadikka aasai: முத்து - மீனா கொடுத்த அதிர்ச்சி; பல்ப் வாங்கிய ரோகிணி!

சிறகடிக்க ஆசை நேற்றைய (அக்டோபர் 23) எபிசோடில் ரோகிணி - மனோஜ் திருமண நாள் மற்றும் பிஸ்னஸ் பார்ட்டியில் குடும்பமாக அனைவரும் கலந்து கொள்ள ஒப்புக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் மீனாவும் ஸ்ருதியும் ஒப்புக்கொள்... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: `standby arunprasath' - வீடியோ பகிர்ந்து அருணுக்கு ஆதரவளித்த அர்ச்சனா

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி உள்ளிட்ட பதினெட்டுப் பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.Bigg ... மேலும் பார்க்க

Serial Update: `அன்று வருத்தம்; இன்று வாய்ப்பு'- சன் டி.வியின் புதிய சீரியல்; மீண்டும் இணையும் ஜோடி

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி சினிமா, சீரியல் என இப்போது வரை பிஸியாக இருப்பவர் நீலிமா ராணி. சன், ஜீ தமிழ் உள்ளிட்ட முக்கிய சேனல்கள் எல்லாவற்றிலும் இவர் நடித்த சீரியல்கள் ஒளிபரப்பாகி உள்ளன.ஆரம்... மேலும் பார்க்க

Kayal & Karthigai Deepam: தீபாவை நெருங்கும் பேராபத்து | மூர்த்தி பற்றி அறியும் கயல்?

கயல்-எழில் திருமணம் முடிந்தும் நிம்மதி கிடைக்காதுபோல. இந்த சீரியலில் மட்டும் தான் தினமும் ஒரு புது பிரச்னை வருகிறது. கயலின் அண்ணன் மூர்த்தி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 16: முத்துவோட லவ் ஸ்டோரி; என்னை அக்கான்னு கூப்பிடறாங்க - தர்ஷாவின் சிணுங்கல்

இன்றைய எபிசோடு சற்றாவது சுவாரசியமாக அமைந்ததற்கு காரணம், ‘ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்’. ஆண்கள் போட்ட டீலை, ‘குத்தினா கத்துவேன், கத்தினா குத்துவேன்’ என்கிற மாதிரி ராஜதந்திரத்துடன் கையாண்டு பெண்கள் அணி டபாய்த்... மேலும் பார்க்க

BB Tamil 8: `தோழி செளந்தர்யாவுக்கு நான் சொல்லி அனுப்புன விஷயம்'- `பிக் பாஸ்' விஷ்ணு சொல்வதென்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 8 கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர் அருண், நடிகை பவித்ரா, மாடல் சௌந்தர்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன்... மேலும் பார்க்க