நெல்லை: திருக்கார்த்திகை பண்டிகைக்கு தயாராகும் களிமண் அகல் விளக்குகள்! | ஸ்பாட் ...
Bomb threat: பள்ளி, கல்லூரிகள் முதல் ஹோட்டல் வரை தொடரும் வெடிகுண்டு மிரட்டல்... திணறும் காவல்துறை!
தாஜ்மஹால் தொடங்கி ரயில் நிலையங்கள் வரை நாட்டின் பல பகுதிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து அதிகரித்து நிலையில், சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நீலகிரியிலும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், கேத்தி பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களால் கல்வி பாதிப்பு ஏற்படுவதுடன், பெற்றோரும் பதற்றத்தில் உள்ளனர்.
இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், " ஊட்டி ஃபெர்ன்ஹில் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு செப்டம்பர் மாதம் 24- ம் தேதியன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் பள்ளியில் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என கண்டறியப்பட்டது. அடுத்த நாள் மீண்டும் அதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
கடந்த 8, 14 தேதிகளில், குன்னூர் பெட்ஃபோர்டு பகுதியில் உள்ள தனியார் பெண்கள் பள்ளிக்கும் ஊட்டியில் உள்ள 4 தனியார் நட்சத்திர ஹோட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
15- ம் தேதியன்று ஊட்டி முத்தோரை பாலாடா பகுதியில் உள்ள தனியார் சர்வதேச பள்ளிக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதுதொடர்பாக பள்ளி மற்றும் ஹோட்டல் நிர்வாகங்கள் சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு, மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெடிகுண்டுகள எதுவும் கண்டறியப்படவில்லை. தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து கண்டறிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சைபர்கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்றனர்.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பள்ளிகள், கல்லூரிகள், ஹோட்டல்களுக்கு போலியான இ-மெயில் மூலம் மிரட்டல்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இ-மெயில் மூலம் விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களால் அச்சப்படவோ, பதற்றமடையவோ வேண்டாம். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள், வெடி குண்டு நிபுணர்கள் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.