மலேசியா டு திருச்சி; விமானத்தில் கடத்திவரப்பட்ட அபூர்வ வகை ரக்கூன், பல்லிகள்; தொடரும் கடத்தல்கள்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அதில் ஒரு பயணிமீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவரது உடைமைகளில் இருந்த கூடையில் ஏதோ உயிருள்ள பொருள் லேசாக அசைவதுபோல் தெரிந்தது. இதையடுத்து, அதிகாரிகள் கூடையை திறந்து பார்த்தபோது அதில் இருந்த பிளாஸ்டிக் டப்பாக்களில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் தென் ஆப்பிரிக்கா, வட அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள வனப்பகுதியில் வாழும் அபூர்வ வகையைச் சேர்ந்த 4 சிறிய தேகு பல்லிகள், வட அமெரிக்கா பகுதிகளில் வசிக்கும் அரிய வகை குள்ளநரி வகையைச் சேர்ந்த ரக்கூன் குட்டி ஆகியவை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை குட்டிகள் என்பதால் அவற்றை வீட்டில் வளர்க்க எடுத்து வந்ததாக கூறினார்.
ஆனால், விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து அவற்றுக்கு நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா இல்லையா என்பதற்கான சான்றிதழ்களும் அவரிடம் இல்லை. மேலும், சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். ஆனால், அது போன்று அவரிடம் எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் வெளிநாட்டு வகையான பல்லிகள், ஒரு ரக்கூன் குட்டி என 55 எண்ணிக்கையிலான பல்லிகள் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து திருச்சி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 'வனத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என திருச்சி விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஏற்கெனவே, விமானங்கள் மூலம் தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட் பொருள்களை கடத்தி வரும் சம்பவங்கள் தொடரும் நிலையில், இப்போது அரிய வகை உயிரினங்களை பயணி ஒருவர் கடத்தி வந்துள்ள சம்பவம், திருச்சி விமான நிலைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.