சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
மேட்டுப்பாளையம்: `போலீஸ் கொலைவெறித் தாக்குதல்' - இளைஞரின் சிறுநீரகம் செயலிழந்ததாக புகார்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் வழங்கப்பட்ட மனுவில், “கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சேரன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தௌபீக் உமர் (21). அரசு மருத்துவனை ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை மேட்டுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளரான குரு சந்திர வடிவேல், உமருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரச்சொல்லியுள்ளார். அதனடிப்படையில் உமர் மேட்டுப்பாளையம் காவல் நிலையம் சென்றுள்ளார்.
அங்கு அவரை தனி அறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி, குரு சந்திர வடிவேல் மற்றும் சில காவல் அதிகாரிகள் பைப்பில் ஈர துணியை சுற்றி சரமாரியாக அடித்துள்ளனர். வீடு திரும்பியதும் உமருக்கு சிறுநீரில் ரத்தம் கசிய ஆரம்பித்துள்ளது. உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் பலமான உள் காயங்கள் உள்ளன. நரம்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெளபீக் உமரின் உறவினர்கள் காவல் நிலையம் சென்று கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை.
தௌபீக் உமர் மீது எந்த வழக்குகளும் இல்லை. அப்படியிருக்கும்போது உரிய சம்மன் இல்லாமல் சட்ட விரோதமாக அவரை மேட்டுப்பாளையம் காவல் நிலையம் அழைத்து நிர்வாணப்படுத்தி, சரமாரியாக சிறுநீரகம் செயலிழக்கும் அளவுக்கு அடித்துள்ளனர்.
எனவே காவல் நிலைய உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் மற்றும் அவரிடமும், அவரின் குடும்பத்தாரிடமும் தகாத வார்த்தைகளில் பேசிய காயப்படுத்திய காவல் அதிகாரிகள் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளனர்.