செய்திகள் :

Chandrachud: தீர்ப்பு, உத்தரவு, செயல்பாடு... சந்திரசூட்டின் தலைமை நீதிபதி பொறுப்பும் விவாதங்களும்!

post image

அதிகாரத்தில், ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தாலும் அவர்களை கண்டித்து, தண்டிக்கும் அதிகாரம் முழுமையாகப் பெற்ற இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கிய மூன்றாவது தூண். ஜனநாயகத்தை முன்னிறுத்தி நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருக்கும் தூண்... அதுதான் நீதித்துறை. இந்த நீதித்துறையின் 50-வது தலைமை நீதிபதியாக 2022 நவம்பர் 10-ம் தேதி சந்திரசூட் பொறுப்பேற்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பேற்றபோது,

இப்போது இரண்டு ஆண்டு தன் பொறுப்பை நிறைவேற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார்.

நீதிபதி சந்திரசூட்

இந்த இரண்டு ஆண்டுகளில் 6,844 வழக்குகளை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்திருக்கிறது. நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடந்த விசராணைகளுக்குப் பிறகு பல அதிரடி தீர்ப்புகள் வெளியாகியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதே நேரம், அவரின் செயல்பாடுகள் மீது சில கேள்விகளும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக சில வழக்குகளை இங்கே குறிப்பிடலாம்.

நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வின் விசாரிப்பில் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று, மத்திய பா.ஜ.க அரசு முன்னெடுத்த தேர்தல் பத்திர விவகாரம். அதாவது, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து தேர்தல் பத்திரத்தை வாங்கி, அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் நன்கொடை அளிக்கலாம் என்பதே அந்தத் திட்டம்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதி சந்திரசூட்,

தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இருப்பதற்கு தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் அவசியம். அரசியல் சட்டப் பிரிவு 19(1)(a)-ன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானதாக தேர்தல் பத்திர திட்டம் இருக்கிறது. நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் முழுக்க முழுக்க 'பதில் உதவியை எதிர்பார்க்கும்' நோக்கங்களுக்காக மட்டுமே இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நன்கொடைகள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டார். இந்த தீர்ப்புக்கு பிறகு மத்திய அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றியிருக்கிறார் சந்திரசூட் என்றெல்லாம் பேசப்பட்டது.

பிரதமர் மோடி - தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்

ஆனால், இந்தத் தீர்ப்பு குறித்து தனியார் பத்திரிக்கையிக்கு பேட்டியளித்த தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் உறுப்பினரான நிதின் சேத்தி, ``புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் பல்லையே பிடுங்கிய அரசு இது. தேர்தல் பத்திரங்கள் அல்லாமல் ரொக்கமாகவும் கட்சிகளுக்குப் பணம் கிடைத்து வந்தன. தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்தாலும் பிற வழிகள் மூலம் கட்சிகள் பணம் பெறத்தான் போகின்றன. ஒரு ரூபாய் கொடுத்தால் ஐந்து ரூபாய் திரும்பக் கிடைக்கும் என்ற முதலீடாக அரசியல்வாதிக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

லாபம் ஈட்டாமல் அரசியல் கட்சிகளுக்குப் பணம் கொடுக்க விரும்பிய ஷெல் நிறுவனங்கள் எவை? எதற்காகக் கொடுத்தனர்? யார் பணம் கொடுத்தார்கள்? அதனால் அவர்களுக்கு என்ன சலுகைகள் கிடைத்தன? கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக என்ன கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையம் அமைத்திருக்க வேண்டும். இது அரசியல் நிதியைப் பற்றியது மட்டுமல்ல, ஊழலைப் பற்றியது. ஊழலின் நாடித் துடிப்பை நிறுத்த இதுவொரு நல்ல வாய்ப்பு. ஆனால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையான வெளிப்படைத்தன்மை குறித்துப் பேசவில்லை.

உச்ச நீதிமன்றம் - சந்திரசூட் - எஸ்.பி.ஐ - தேர்தல் பத்திரம்

நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்வதோடு நிறுத்திக் கொண்டது. தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்டதில் மகிழ்ச்சி. ஆனால் நமது தேர்தல் முறையை மாற்ற இது போதுமானதாக இல்லை" என விமர்சித்திருந்தார். அதாவது, ஒரு வாய்ப்பு கிடைத்தும் அது தவறவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

அதே போல, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக, கேமராவுக்கு முன்பே, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த தேர்தல் அதிகாரி அனில் மஷியை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்,``தேர்தல் அதிகாரி நடத்தை ஜனநாயகப் படுகொலைக்குச் சமமானது. கேமராவைப் பார்த்த பிறகு வாக்குச் சீட்டில் ஏதோ செய்வது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. எனவே, இந்த அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கடுமையாக சாடினார்.

இதற்கிடையில், அந்த அதிகாரி 8 வாக்குகளை செல்லாத வாக்குகளாக மாற்றியதை ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் இரண்டு முறை நீதிமன்றத்தில் ``மனநிலை சரியில்லாததால்தான் அப்படி நடந்துகொண்டேன்... அதற்காக நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என பதில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த வழக்கு ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மகாராஷ்டிரா கட்சிப் பிளவு விவகார வழக்கில், ''ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் கூட்டணி அரசு அமைய துணைபோன ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது" என உத்தரவிட்டார். மேலும் சபாநாயகரிடமே உண்மையான சிவசேனா யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

உத்தவ் தாக்ரே

இது குறித்து அப்போதே உத்தவ் தாக்கரே தக்கல் செய்த மனுவில்,``அரசியல் அமைப்புச் சட்டம் (91வது திருத்தம்) இருந்தபோதிலும் சபாநாயகர் சட்டவிரோதமாக கட்சித் தாவலுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதை காரணம் காட்டி உண்மையான சிவசேனா எது என்பதை சபாநாயகர் தவறாக முடிவு செய்துள்ளார்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அது குறித்து பேசிய அவர், ``நாங்கள் முன்கூட்டியே இந்த வழக்கு விசாரணைக்காக தேதி கேட்டால், தலைமை நீதிபதி எங்களுக்கு உத்தரவிட வேண்டாம் என்று கூறுகிறார். அதனால் நாங்கள் கைகளை கட்டிக்கொண்டு நிற்கிறோம்." எனத் தன் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

ஜம்மு காஷ்மீர் 370 சட்டப் பிரிவை மத்திய பா.ஜ.க அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய அரசின் முடிவை உறுதி செய்தார். அப்போது, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா, ``சட்ட பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக விதி என்று கூறிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு நமது தோல்வி அல்ல... மாறாக இந்தியாவின் தோல்வி" எனக் குறிப்பிட்டிருந்தார்.

CJI சந்திரசூட் - பிரதமர் மோடி

இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் செப்டம்பர் 11 அன்று 'விநாயகர் சதுர்த்தி' கொண்டாட்ட வீடியோ பரவியது. அப்போதே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டின் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பிரதமர் மோடி அழைக்கப்பட்டதும், அது வீடியோவாக பதிவிட்டு வெளியிடப்பட்டதும் பெரும் விவாதமானது.

இதற்கு விளக்கமளித்துப் பேசிய சந்திரசூட், ``எனது வீட்டில் நடந்த ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே பிரதமர் வருகை தந்திருந்தார், அது ஒரு பொது நிகழ்ச்சி அல்ல. இந்தச் சந்திப்பில் தவறு எதுவும் இல்லை என்றே நம்புகிறேன். இது சமூக நிகழ்வாக இருந்தாலும் இது நீதித் துறையினருக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே நடைபெறும் ஒரு சாதாரண சந்திப்புதான். பிரதமர் மோடி மற்றும் அமைச்சா்களுடன் நீதிபதிகள் தொடா்ந்து கலந்துரையாடுகின்றனா். இந்த உரையாடல்கள் நீதிபதிகள் விசாரிக்கும் வழக்குகளைப் பற்றியதல்ல. வாழ்க்கை மற்றும் சமூகம் குறித்தே பொதுவாக பேசுவோம்." என விளக்கமளித்தார்.

ஆனால், இந்த சந்திப்புக் குறித்து டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரேகா ஷர்மா,``எந்தச் சூழ்நிலையிலும் இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்... அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளும், சமீபகாலமாக மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில், இந்திய தலைமை நீதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான சமூக தொடர்பு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வழக்கு தொடுப்பவர்களின் மனதில் அச்சத்தை எழுப்புகிறது." எனக் குறிப்பிட்டார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர், ``இதுபோன்ற சந்திப்புகள் பொதுமக்களின் பார்வையில் நீதித்துறையின் இமேஜை வெகுவாக பாதிக்கும் என்று என்னால் கூற முடியும். இந்த சந்திப்பு தலைமை நீதிபதியின் எதிர்கால தீர்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறமாட்டேன். என்றாலும், அது நிச்சயமாக மக்கள் மத்தியில் அவரது இமேஜை பாதிக்கும்…. இது தவறான செய்தியை கொடுக்கலாம்." என்றார்.

உச்ச நீதிமன்றம்

சிவசேனா உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த கட்சித் தலைவர் சஞ்சய் ராவத், ``பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டு `கணபதி பூஜை'யில் கலந்து கொண்டுள்ளார். அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்கள், அரசியல்வாதிகளை இந்தவகையில் சந்திப்பது பல்வேறு சந்தேகத்தை எழுப்பும் என்பதே எங்களின் கவலை. மகாராஷ்டிராவின் தற்போதைய அரசு குறித்த எங்களின் வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வர இருக்கிறது. பிரதமர் மோடியும் அதில் ஒரு பகுதியாக இருக்கிறார். இப்போது எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கிலிருந்து நீதிபதி சந்திரசூட் விலகிக்கொள்வது பற்றி அவர் பரிசீலிக்க வேண்டும்" என நம்பிக்கை இழந்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதே நேரம் பா.ஜ.க தரப்பு ''இதேபோன்று மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இஃப்தார் விருந்து நடத்தப்பட்டது. அதில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கலந்துகொண்டார்" இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்தது.

அதற்கு விளக்கமளித்த காங்கிரஸ், ``இதுவரையில் எந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ அல்லது தலைமை நீதிபதிகளோ எவரும் தங்களது இல்லத்தில் நடைபெறும் தனிப்பட்ட பூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிரதமரை அழைத்ததில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொது களத்தில் இப்தார் விருந்து நடத்தினார். அதில் அப்போதைய தலைமை நீதிபதியுடன், பா.ஜ.க தலைவர் எல்.கே. அத்வானி போன்ற உயர்மட்ட பா.ஜ.க தலைவர்கள் கூட அதில் கலந்து கொண்டனர். ஆனால், இப்படி தனிப்பட்ட விழாவுக்கு அழைத்ததில்லை." என பதிலளித்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகள் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த சந்திரசூட், பல்வேறு உத்தரவு, தீர்ப்புகள் மூலம் கவனம் பெற்றிருந்தாலும், அவரின் சில செயல்பாடுகள் மீது விவாதங்கள் நடந்துள்ளதையும் அறிய முடிகிறது.இதைத் தவிர்க்க வேண்டுமானால், முன்னாள் நீதிபதி விவியன் போஸ் 1956-ல் எழுதிய ஒரு தீர்ப்பின் குறிப்பில், ``ஜனநாயகத்தின் இதயமும், மையமும் நீதித்துறையும், அதைச் சார்ந்தவர்களின் செயல்பாட்டிலேயும் உள்ளது, அதாவது சுதந்திரமான மற்றும் அச்சமற்ற நீதிபதிகள் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, நீதித்துறை மரபுகளின் சிந்தனையில் வளர்க்கப்பட்டு, பயிற்சி பெற்றவர்களாக விளங்கவேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

H Raja: அவதூறு வழக்கில் ஹெச். ராஜா-வுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

பா.ஜ.க-வின் தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா 2018-ம் ஆண்டு `பெரியார் சிலையை உடைப்பேன்' எனத் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது தொடர்... மேலும் பார்க்க

`ஸ்டேன் சுவாமிக்கு நினைவுத் தூண் அமைக்க தடையில்லை' - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் மறைந்த மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமிக்கு நினைவுத்தூண் அமைப்பதற்கு சட்ட அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தனியார் நிலத்தில் ஒருவரின் சிலை வைப்பது அவரவர் விருப்பம் என்றும் இதில் அரச... மேலும் பார்க்க

`அரசின் சலுகைக்காக SC சான்றிதழ் வழங்க முடியாது!’ –கிறிஸ்துவப் பெண் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரியைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண், கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சேரி அரசின் எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்தார். அதற்காக, தன்னுடைய தந்தை இந்து சமூகத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் என்றும், தாய் கிறிஸ... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ஒருமுறை 24 மணி நேரம் மூடப்படும் உயர் நீதிமன்றக் கதவுகள்... நடைமுறையின் பின்னணி இதுதான்!

உலகின் மிகப்பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றம், சுமார் 170 ஆண்டுகள் பாரம்பர்யமிக்கது .பிராட்வே, பாரிஸ் கார்னர், ரிசர்வ் வங்கி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம்: சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்!

கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயம் அருந்தியவர்களில் 190-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில், 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த விவகாரம் தமிழ்நாடு... மேலும் பார்க்க