Chandrachud: `மணிப்பூர் டு தேர்தல் பத்திரம்’ - சந்திரசூட் வழங்கிய பரபரப்பு தீர்ப்புகள்! - ஒரு பார்வை
இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் 2022 நவம்பர் 9 அன்று பதவியேற்றார். பதவியேற்ற நேரத்தில், சந்திரசூட் மீது மக்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகாலம் தொடர்ந்து வந்த அவரின் பதவி தற்போது நிறைவடைந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க, மரியாதைக்குரிய நீதிபதிகளில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். அவர் பதவிக் காலத்தில் உச்ச நீதிமன்றம் சந்தித்த பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கிறார். அதில், இந்திய அளவில் பேசப்பட்ட வழக்குகளின் விவரமும், தீர்ப்பும் பார்க்கலாம்.
ராணுவத்தில் கமாண்டர் பதவிக்காக ஆண்களை மட்டுமே தேர்வு செய்வதாக 35 பெண் ராணுவ அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதி,
உங்கள் வீட்டை ஒழுங்காக அமைத்து, அந்தப் பெண்களுக்காக என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
யூனியன் பிரதேசமான டெல்லியின் சட்டம் - ஒழுங்கு மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இது தொடர்பாக 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2016-ல் ஆளுநருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா அமர்வு விசாரித்தது. அதன் பிறகு மே 11, 2023 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், தலைமை நீதிபதி சந்திரசூட், ``இதர யூனியன் பிரதேசங்களுக்கும், டெல்லிக்கும் வித்தியாசம் இருக்கிறது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும். பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து,
ஐஏஎஸ் அதிகாரிகள், அவரவர் துறை சார்ந்த அமைச்சர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். டெல்லி துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது.
டெல்லி அரசின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்து, அந்த தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் விரைவில் அவசரச் சட்டம் இயற்றியது குறிப்பிடதக்கது.
சிவசேனா கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. அதையடுத்து ஒரு பிரிவுக்கு உத்தவ் தாக்கரேவும், மற்றொரு பிரிவுக்கு ஏக்நாத் ஷிண்டேவும் தலைமை தாங்கினர். ஷிண்டே பிரிவு தனியாக பிரிந்ததை அடுத்து, முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே, நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் ஆதரவோடு மகாராஷ்டிரா முதல்வரானார். இந்த விவகாரம் அப்போது தேசிய அளவில் கவனம் பெற்றது.
இந்த நிலையில், சிவசேனா கட்சிக்கு இரு தரப்பும் உரிமை கோரின. அதோடு, ஒரு தரப்பு, மற்றொரு தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு தாக்கல் செய்தன. இரண்டில் எது உண்மையான சிவசேனா என்பது குறித்து சபாநாயகர் ராகுல் நர்வேகர் முடிவை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே அணி உண்மையான சிவசேனாவாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலையில், மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த நாள் உச்ச நீதிமன்றம் இந்த சம்பவத்துக்கு எதிராக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட்,
இது மிக மோசமான அரசியலமைப்பு துஷ்பிரயோகம். வெளிவரும் வீடியோக்களால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் அதைக் கையில் எடுப்போம்." எனக் காட்டமாக தெரிவித்திருந்தார்.
மேலும், தொடர்ந்து மணிப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள், அது தொடர்பாக நடந்த விசாரணைகளை உச்ச நீதிமன்றம் உன்னிப்பாகக் கண்காணித்தது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆராயவும், மணிப்பூர் வன்முறை வழக்கில் சி.பி.ஐ விசாரணை எவ்வாறு தொடர்கிறது என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் முன்னாள் பெண் நீதிபதிகள் கொண்ட குழுவையும் நீதிமன்றம் அமைத்தது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதனால், அவர்களுக்கான பல உரிமைகள் மறுக்கப்படுவதாக, 'தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் அங்கீகரிக்கப்படவேண்டும்' என்று பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, இது தொடர்பான மனுக்களை கடந்த ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி விசாரிக்கத் தொடங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, தொடர்ந்து 10 நாள்கள் விசாரணை நடத்தியது.
அதைத் தொடர்ந்து தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ```நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது; அதன் சரத்துகளை கையாள முடியும். இந்தச் சிறப்புத் திருமண சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகக் கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும்.
தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தற்போது மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மலையாள செய்தி சேனல் மீடியாஒனின் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மத்திய அரசு மறுத்ததை எதிர்த்து மீடியா ஒன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அந்த வழக்கு கடந்த ஆண்டு, ஏப்ரல் 5 அன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ``மலையாள செய்தி சேனல் மீடியாஒனின் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மத்திய அரசு மறுப்பு ரத்து செய்யப்படுகிறது. தடைக்கான காரணங்களை சீலிடப்பட்ட கவரில் மட்டுமே தெரிவிக்க முடியும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது.
சீல் வைக்கப்பட்ட கவர், நீதியின் கொள்கைகளை மீறுவதாகவே கருதப்படும். அதேபோல, ஊடகங்கள், ஆளும் அரசை விமர்சிப்பதை அரசுக்கு எதிரான நடவடிக்கை என வகைப்படுத்த முடியாது. ஊடங்கங்களுக்கு அதற்கான சுதந்திரம் இருக்கிறது" எனக் குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக உறுதி செய்தது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ``குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது மாநிலம் சார்பாக எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவை கேள்வி கேட்க முடியாது.
அரசியலமைப்பின் 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் மற்றும் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மாற்றும் முடிவு செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது" எனக் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வழிமுறைகளில் ஒன்றான தேர்தல் பத்திரம் இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து வாங்கி, அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் நன்கொடை அளிக்கலாம். இந்திய அரசு 2017-ல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பில், ``அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறை சட்ட விரோதமானது. தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இருப்பதற்கு தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் அவசியம். அரசியல் சட்டப் பிரிவு 19(1)(a)-ன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானதாக தேர்தல் பத்திர திட்டம் இருக்கிறது. நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் முழுக்க முழுக்க "பதில் உதவியை எதிர்பார்க்கும்" நோக்கங்களுக்காக மட்டுமே இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நன்கொடைகள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs