Bitcoin விலை ஏறுமா, இறங்குமா இனி நாமே கணிக்கலாம்... எப்படி? | IPS FINANCE | EPI ...
Doctor Vikatan: கர்ப்பிணிகள், ஆட்டோ மற்றும் டூ வீலரில் பயணம் செய்யலாமா?
Doctor Vikatan: என் வயது 28. இப்போது நான் 2 மாத கர்ப்பமாக இருக்கிறேன். வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். டூ வீலரில் கணவருடன்தான் வேலைக்குப் போவது வழக்கம். இந்நிலையில் மாடிப்படிகளில் ஏறக்கூடாது, டூ வீலர், ஆட்டோவில் பயணம் செய்யக்கூடாது என்றெல்லாம் என் மாமியார் சொல்கிறார். அதனால் கரு கலைந்துவிடும் என்கிறார். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை? கர்ப்ப காலத்தில் அதிக வாந்தியும் முதுகுவலியும் வரும் என்கிறார்கள் சிலர். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
இயற்கையின் படைப்பில் கருவானது, கர்ப்பப்பைக்குள் ரொம்பவே பாதுகாப்பாக இருக்கக்கூடியது. டூ வீலரில் போவதாலோ, ஆட்டோவில் பயணிப்பதாலோ, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதாலோ அந்தக் கருவானது கலைந்துவிடாது. அதே சமயம், பொறுமையாக, பாதுகாப்பாகச் செல்வதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இருபது பெண்களில் ஒருவருக்கு கரு கலையும் ரிஸ்க் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. 7வது வாரத்தில் செய்யப்படுகிற ஸ்கேன் பரிசோதனையில், கரு ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த நேரத்தில் லேசான திட்டு போல ப்ளீடிங் இருந்தாலும் பயப்படத் தேவையில்லை. அது தானாகவே சரியாகிவிடும். கர்ப்பத்தில் சிக்கல் இருப்பது தெரிந்து, உங்கள் மருத்துவர் உங்களை ஓய்வெடுக்கச் சொல்லாதவரை நீங்கள் உங்கள் வழக்கமான வேலைகளை எல்லாம் செய்யலாம். அதாவது கர்ப்பமாவதற்கு முன் நீங்கள் வாக்கிங் போகும் பழக்கம் உள்ளவராக இருந்திருந்தால், கர்ப்பத்தின் போதும் அதைத் தொடரலாம். மற்றபடி கர்ப்பம் உறுதியான பிறகு உடலியக்கம் தொடர்பான புதிதாக எதையும் செய்ய முயற்சி செய்ய வேண்டாம்.
கர்ப்ப காலத்தில் வாந்தி இருப்பது சாதாரணம்தான். அது ரொம்பவும் அதிகமானால் மருத்துவரை அணுகுங்கள். அதன் தீவிரம் பார்த்து மருத்துவர் உங்களுக்கு சிகிச்சை அளிப்பார். அடிக்கடி வாந்தி எடுப்பதால் கரு கலைந்துவிடுமோ என்றும் பயப்படத் தேவையில்லை. 5-6 மாதங்களில் கடுமையான முதுகுவலி இருக்கலாம். அதுவும் நார்மல்தான். புரொஜெஸ்ட்ரான் என்ற ஹார்மோன்தான் கர்ப்பத்தைப் பாதுகாக்கிறது. அந்த ஹார்மோன், குழந்தை வளர்வதற்கேற்ப இடுப்பெலும்பு தசைகளைத் தளர்த்திவிடும். அதனால்தான் அடி முதுகு வலி ஏற்படும். இதற்கு வெந்நீர் ஒத்தடம் போன்ற எளிய சிகிச்சைகளே போதும். மாத்திரைகள் தேவைப்படாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.