Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
Nobel: இஸ்ரேலை ஆதரித்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - குவியும் கண்டனங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை.
அவருக்குப் பதில் வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காகப் பாடுபட்ட அந்நாட்டு பெண் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மரியா கொரினா மச்சாடோ தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,``இந்த பரிசைப் பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களுக்கும், எங்களது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கும் அர்ப்பணிக்கிறேன்.
இன்று நாங்கள் வெற்றியின் வாசலில் இருக்கிறோம். உலக நாடுகள் எப்போதும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் காக்க உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம்," எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவின் முந்தைய சமூக ஊடக கருத்துகள் வைரலாகியிருக்கின்றன.
குறிப்பாக இஸ்ரேல் - காசா போரின் போது, இஸ்ரேலுக்கு ஆதரவான அவரின் கருத்துகள் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றன.
காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை ஆதரித்து பதிவு செய்திருந்தார். மேற்கத்திய மதிப்புகளைப் பாதுகாக்க இஸ்ரேலுடன் நிற்பதாகக் கூறிய அவர் சுதந்திரத்தின் உண்மையான கூட்டாளி இஸ்ரேல் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
2018-ம் ஆண்டின் தேர்தல் வாக்குறுதிகளில் "நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், இஸ்ரேலிய தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவேன் என்று நான் நம்புகிறேன், அதை என்னால் அறிவிக்க முடியும்.
ஒரு நாள் வெனிசுலாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். அது இஸ்ரேல் அரசுக்கு எங்கள் ஆதரவின் ஒரு பகுதியாக இருக்கும்" என அறிவித்தார்.
தேர்தல் அரசியலுக்காக மரியா கொரினா மச்சாடோ 2018-ம் ஆண்டு செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
"நான் அர்ஜென்டினாவின் ஜனாதிபதிக்கும், இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாவுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அதில், குற்றவியல் வெனிசுலா ஆட்சியை அகற்றுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படி கடந்த காலங்களில் இராணுவ அதிகாரத்துக்கும், அடக்குமுறைக்கு ஆதரவாக இருந்தவருக்கு எப்படி அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க முடியும் என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது.