RJ Balaji: `அவங்களோட அடுத்த தலைமுறை தினக்கூலியாக இருக்கக்கூடாதுன்னு அவர் செய்த செயல்' -ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கிற `சொர்க்கவாசல்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை முடித்துவிட்டு சூர்யாவின் 45-வது படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார் ஆர்.ஜே. பாலாஜி. இந்தப் படத்துக்காக ஆர்.ஜே. பாலாஜி விகடனுக்கு அளித்த நேர்காணலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த்தின் மனிதநேயமிக்க செயல்கள் குறித்து சில விஷயங்கள் பேசியிருக்கிறார்.
இது குறித்து ஆர். ஜே. பாலாஜி, `` சத்தமாக நினைத்ததைப் பேசும் மனிதராகதான் அவரை பார்க்கும் பலருக்கும் தெரியும். ஆனால் ஒரு முறை புரோமோஷன் பணிகளுக்காக அவரின் வீட்டிற்குச் சென்றேன். அப்போது வேறு ஒரு மனிதரை அவரிடத்தில் கண்டேன். அவர் வீட்டில் 20 நபர்கள் பணிபுரிகின்றனர். அந்த பணியாளர்களின் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கிறார்கள், பெரிய ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.
இந்த 20 நபர்கள் 40 வருடத்திற்கு முன்பு சீக்காவின் வீட்டில் வேலைக்குச் சேரும்போது, `நீங்கள்தான் கடைசியாக இதுபோல தினமும் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும். உங்களின் அடுத்த தலைமுறை தினக்கூலியாக இருக்கக்கூடாது' எனக் கூறி அவர்களின் பிள்ளைகளை படிக்க வைக்க உதவிகள் செய்திருக்கிறார். சீக்கா என் மீது எப்போது அக்கறையாக இருப்பார். எனக்கு ஏற்கெனவே அவரைப் பிடிக்கும். இந்த சம்பவம் எனக்கு இன்ஸ்பயரிங்காக இருந்தது." எனக் கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...