TN Budget: தனிநபர் வருமானம் டு மாநில ஜிஎஸ்டிபி - பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்
தமிழ்நாடு பட்ஜெட் நாளை (மார்ச் 14) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024 – 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 13) சென்னை தலைமை செயலகத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் இங்கே!
* 2024-25இல், பொருளாதார வளர்ச்சிப் போக்கைப் பாதிக்கும் உலக அளவிலான சவால்களை, தமிழ்நாட்டுப் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலுடன் எதிர்கொண்டது. பெருந்தொற்றோடு சர்வதேச அரசியல் பதற்றங்களும் தீவிரமான தட்பவெப்ப மாற்றங்களும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளைப் பாதித்ததுடன் எரிசக்தி, உணவுத் துறை ஆகியவற்றில் நெருக்கடிகளை விளைவித்தன.

* 2023-ல் உலகப் பொருளாதாரம் 3.33% உண்மை வளர்ச்சி நிலையை அடைந்தது. இந்தியப் பொருளாதாரம் 2022-23இல் 7.61%, 2023-24இல் 9.19%, 2024- 25இல் 6.48% வளர்ச்சியை எட்டியது. ஒருங்கிணைந்த கொள்கை முடிவுகளின் வலுவான அடித்தளத்தோடு, தமிழ்நாடு குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார வளர்ச்சியில் மீண்டெழுந்துள்ளது. 2021-22இலிருந்தே 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து எட்டிவருகிறது. 2024-25இலும் 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* தமிழ்நாட்டின் முற்போக்கான சமூகநலக் கொள்கைகளும், வலுவான உள்கட்டமைப்பு வசதிகளும், பெரும் எண்ணிக்கையிலான திறன்மிகு தொழிலாளர்களும் இம்மாநிலத்தை மேம்பட்ட பொருளாதார வளர்ச்சிப்பாதையில் இடம்பெறச் செய்துள்ளனர். இந்தியாவின் நிலப்பரப்பில் 4%, நாட்டின் மக்கள்தொகையில் 6% மட்டுமே கொண்டிருக்கும் தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21% பங்களித்துள்ளது.
2023-24இல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) நடப்பு விலையில் ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது. பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71% ஆகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33% ஆகவும் உள்ளது.

* மோட்டார் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, தோல்பொருள்கள் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக விளங்குவதால், மாநிலப் பொருளாதாரமானது உலகளாவிய சந்தை நிலைகளையொட்டியே அமைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகளைக் காட்டிலும் உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையே பெரிதும் சார்ந்திருப்பதை அது எடுத்துகாட்டுகிறது.
* தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சியானது தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தேசிய சராசரியைவிடவும் அதிகமாகவே இருந்து வருகிறது. 2022-23இல் ரூ.2.78 லட்சமாக இருந்தது. இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தைக் காட்டிலும் 1.64 மடங்கு அதிகமானதாகும். இதன் காரணமாக, தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு நான்காம் இடம் வகிக்கிறது.

* மாநிலத்தின் தனி நபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் தேசிய சராசரியைவிட மேலே உள்ளது.பெருநகரமொன்றை மட்டும் மையமாகக் கொண்டு இயங்கும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களைப் போலன்றி, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது மாநிலம் முழுவதுமுள்ள நகர்ப்புர மையங்களில் பரவலாக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற நகரங்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்குவதோடு நகர்ப்புற – ஊரக இடைவெளிகளைக் குறைக்கவும் உதவுகின்றன" என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
