செய்திகள் :

TVK : தீர்மானங்களை வாசிக்கும் பெண்கள்? விஜய் பயண திட்டம்? - பரபரக்கும் தவெக பொதுக்குழு கூட்டம்

post image

தமிழக அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஓராண்டு கடந்திருக்கிறார். இந்த ஓராண்டில் வெற்றிகரமாக விக்கிரவாண்டி அரசியல் மாநாடு, கொடி, கொள்கை, கொள்கை தலைவர்கள், தி.மு.க அரசின் மீதான விமர்சனங்கள், மாநில உரிமைக்காக வெளியிடும் அறிக்கைகள், கட்சியை நிர்வாக ரீதியில் பிரிக்கும் நடவடிக்கைகள் என அடுத்தடுத்து விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அந்தக் கட்சியின் தலைவர் விஜய்.

தவெக - விஜய்
தவெக - விஜய்

முதல் பொதுக்குழு கூட்டம்

அதைத் தொடர்ந்து தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை தொடங்கியிருக்கிறது. இதில் 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 1800-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் 120 மாவட்டங்களாக தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளருடன் 15 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி வரை கூட்டம் நடைபெறும் என கூறப்படும் நிலையில், த.வெ.க தலைவர் விஜய் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசுவார் எனவும் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, மும்மொழிக்கொளை, புதியக் கல்விக் கொள்கை, மீனவர் பிரச்னை ஆகிய அம்சங்களை உள்ளடக்கி மத்திய மாநில அரசுகளை சீண்டும் வகையில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தவெக - விஜய்

தீர்மானங்களை பெண்கள் வாசித்து நிறைவேற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம். ஆண்டு விழாவில் தவெக தலைவர் அரசியல் விமர்சனங்களை மேலோட்டமாக பேசியது பேசுபொருளான நிலையில், அதை கவனத்தில் கொண்டு இந்த முறை கொஞ்சம் அழுத்தமாகவே பேசுவார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும் இந்த கூட்டத்தில் விஜய் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.