Vidaamuyarchi Teaser: `உன்னை நம்பு' - பொங்கலுக்கு `விடாமுயற்சி!'; தள்ளிப்போகும் ...
Ukraine: போரில் ஈடுபடுவதற்கான வயதை 18 ஆக குறைக்க அமெரிக்கா வலியுறுத்தல்; பைடன் அவசரம் காட்டுவது ஏன்?
உக்ரைனில் போரில் ஈடுபடும் இளவயதினர் வயதை 18 ஆக குறைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. தற்போது 25 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் ஈடுபட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், உக்ரைன் இழந்த வீரர்களுக்கு இணையாக வீரர்களைத் திரட்டுவதிலும், புதிய வீரர்களுக்கு போதுமான பயிற்சி அளிப்பதிலும் கோட்டைவிடுவதாகப் பேசியிருக்கிறார்.
ரஷ்யா நிலையாக கிழக்கு நோக்கி முன்னேறுவதாகவும், இந்த நேரத்தில் ஆள்பலம் மிகத் தேவையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தித் தளம்.
போரில் அமெரிக்க வீரர்கள் பங்குகொள்ளவில்லை என்பதும், ஆயுத உதவிகளை மட்டுமே அமெரிக்க அரசு செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது. புதிதாக 725 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், உக்ரைன் குறித்த இந்த பார்வை வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், போரின் நிதித்தேவையை சமாளிக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வரிவிதிப்பை அதிகரிக்க உள்ளார்.
பைடன் அரசின் ஆட்சி ஜனவரி மாதத்துடன் நிறைவடையும் நிலையில் உக்ரைன் ராணுவத்தின் அளவை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கண்ணி வெடிகள், ட்ரோன்கள், ஸ்டிங்கர் எதிர்ப்பு ஏவுகணைகள், ஹிமார்ஸ் வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் அனுப்பி வைக்கின்றனர்.
ஜனாதிபதி கட்டுப்பாட்டில் நட்பு நாடுகளுக்கு உதவி செய்ய இருக்கும் PDA பணம் ஜோ பைடன் வசம் 5 பில்லியன் வரை இருக்கிறது. PDA பணத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவில் 725 மில்லியன் டாலர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க செலவழிக்கப்படுகிறது.
2022ம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு 56 பில்லியன் வரை ராணுவ உதவிகள் செய்துள்ளது ஜோ பைடன் அரசு.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஜனவரி 20ம் தேதி பதவியேற்கவுள்ளார். உக்ரைன் - ரஷ்யா போருக்கு முடிவுகட்டுவதாக உறுதி ஏற்றுள்ளார் அவர். ட்ரம்ப் உக்ரைனுக்கு உதவிகள் வழங்குவதை நிறுத்துவார் என்ற கருத்தும் நிலவிவருகிறது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் கணக்கில் உக்ரைனிடம் அதிக ஆள் பலம் இருந்தால் நிலைமை வேறுமாதிரியாக இருக்கும் என நம்புகிறது அமெரிக்கா.
ரஷ்யாவோ அதிகமாக ஆள் திரட்டுவதுடன் வடகொரியாவிடமும் உதவிகளைப் பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 10,000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவில் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்படுவதற்கான வயதை 27-லிருந்து 25 ஆக கடந்த ஏப்ரல் மாதம் குறைத்தது உக்ரைன் அரசு. அமெரிக்காவின் வலியுறுத்தலை ஏற்கும்பட்சத்தில் உக்ரைனின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதுடன் உள்நாட்டில் அதிருப்தியை சம்பாதிக்கும் சூழலும் எழலாம்.