கும்பகோணம்: செல்லாத ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு அலங்காரம்; நவராத்திரி விழாவில்...
அண்ணா, எம்.ஜி.ஆரை சனி என்று விமர்சித்த சீமான்; காட்டமான டிடிவி தினகரன்; நடந்தது என்ன?
விஜய் புதிய கட்சி தொடங்கும் வரை `என் தம்பி, வந்தால் சேர்ந்து பயணிப்போம்' என்றெல்லாம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று எந்தவொரு செய்தியாளர் சந்திப்பென்றாலும் விஜய்யை கடுமையாக விமர்சிக்காமல் செல்வதில்லை.
அதன் தொடர்ச்சியாக நேற்று (செப்டம்பர் 26) செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், "தி.மு.க-வில் இருந்து இரண்டு இட்லியும், அ.தி.மு.க-வில் இருந்து இரண்டு தோசை எடுத்து ஒரு உப்புமா கிண்டியிருக்கிறார்.

இங்க அண்ணாவையும், இங்க எம்.ஜி.ஆரையும் வைத்துக் கொண்டார். இதில் என்ன மாற்றம் வருகிறது.
இது ஒரு சனியன், இது ஒரு சனியன். இரண்டு சனியனைச் சேர்த்து ஒரு சட்டை தைத்துக் கொண்டார், சனிக்கிழமை சனிக்கிழமை கிளம்பிவிட்டார். மாற்றம் என்ற சொல்லையே அவர் சொல்லவில்லையே" என்று விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு எக்ஸ் தளத்தில் எதிர்வினையாற்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்,
"அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் குறித்தான சீமானின் அருவருக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. சீமானின் நாகரிகமற்ற பேச்சு தமிழக மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் குறித்தான திரு சீமான் அவர்களின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக்…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 26, 2025
யார் மீதோ கொண்ட வன்மத்தை வெளிப்படுத்துவதாக எண்ணி, மறைந்த தலைவர்கள் மீது நாகரிகமற்ற பேச்சுக்களின் மூலம் அரசியலில் தன் இருப்பைக் காட்டிக்கொள்ள சீமான் இனியும் முயலும் பட்சத்தில் அதற்கான எதிர்வினை தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இன்று செப்டம்பர் 27) செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேச்சு குறித்து விமர்சித்த டி.டி.வி. தினகரன், "கடந்த ஓராண்டாக சீமானின் பேச்சு தடுமாற்றமாகவும், ஏதோ கோபத்தின் வெளிப்பாடாகவும்தான் தெரிகிறது.
`தம்பி விஜய், நாங்கள் ஒன்றாகச் செயல்படுவோம்' என்று பேசியவர், இன்று விஜய்யால் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அவர் இருப்பது, விஜய் பற்றிய அவரின் பேச்சுக்களில் தெரிகிறது.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களைப் பற்றி சீமான் பேசுவதைப் பார்க்கும்போது அவருடைய நாக்கில் சனி குடி கொண்டிருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.
இதுபோலப் பேசி தனக்கு விளம்பரத்தைத் தேடிக் கொள்கிறார். விஜய் மீது கோபமாக இருந்தால் அவரைப் பற்றிப் பேசட்டும்.
எதற்காகப் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் பற்றிப் பேச வேண்டும்? தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை விட்டுவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது. அதற்கு எதிராகச் செயல்பட்டால் தமிழ்நாட்டு மக்கள் வருங்காலத்தில் பதில் சொல்வார்கள்" என்று கூறினார்.