ஆசிரியையிடம் நகை வழிப்பறி: தொழிலாளி கைது
குமரி மாவட்டம் அருமனை அருகே பள்ளி ஆசிரியையிடம் நகை வழிப்பறி செய்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அருமனை அருகே மஞ்சாலுமூடு சிறக்கரையைச் சோ்ந்தவா் ஆஷா லதா (55). இவா் மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பள்ளி செல்வதற்காக வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பைக்கில் வந்த நபா், ஆஷா லதா அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் அருமனை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதனிடையே, மேல்புறம் அருகே அளப்பங்கோடு பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனா்.
அவா் மாலைக்கோடு காவுவிளையைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி ஜெஸ்டின் ராஜ் (48) என்பதும், ஆஷா லதாவிடமிருந்து நகையைப் பறித்தவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்த நகையையும் மீட்டனா்.