ஆபரேஷன் சிந்தூர்:முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு முப்படை தலைமை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை(மே.7) ஆலோசனை நடத்தி வருகிறார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து செவ்வாக்கிழமை நள்ளிரவில் முப்படைகளின் தாக்குதல் மற்றும் காஷ்மீரில் தற்போதைய சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை தலைமை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து புதன்கிழமை காலை 10 மணிக்கு விளக்கம் அளிக்கும் அளிக்கும் என தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு காலை 11 மணியளவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா தனது ஆழமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு- காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இது 50 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் புகுந்து நடத்திய மிக முக்கியமான இந்திய ராணுவ தாக்குதல் ஆகும்.