செய்திகள் :

ஆம்பூர் மூதாட்டி பெயரில் ரூ.2.39 கோடிக்கு GST மோசடி; கேரளாவில் பரிவர்த்தனை - நடந்தது என்ன?!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கிருஷ்ணாபுரம், காமராஜர் 3-வது தெருவில் வசிக்கிறார் மூதாட்டி ராணி பாபு. அதே பகுதியிலுள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலைச் செய்து வரும் ராணி பாபு பெயரில், கிட்டத்தட்ட ரூ.2.39 கோடிக்கு ஜி.எஸ்.டி வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ் வந்திருக்கிறது. 7 நாட்களுக்குள் நிலுவைத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த அறிவுறுத்தியுள்ள வணிக வரிகள் துறை அதிகாரிகள், நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைச் செய்திருக்கின்றனர். ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணின் பெயரில் எப்படி இத்தனைக் கோடிக்கு வரி ஏய்ப்பு நடைபெற்றது என விசாரித்தோம்.

திருச்சி மாவட்டம், கள்ளிக்குடி வடக்குப் பகுதிக்குட்பட்ட மணப்பாறை சாலை மலைப்பட்டி பகுதியில் `மாடர்ன் என்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனம் மூதாட்டி ராணி பாபு பெயரில் தொடங்கி, செயல்பட்டுவந்ததாகத் தெரியவந்திருக்கிறது. ராணி பாபுவின் `பான் கார்டு’, `ஆதார் கார்டு’ உள்ளிட்ட அடையாள ஆவணங்களைக் கொண்டுதான் இந்த நிறுவனமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மூதாட்டி ராணி பாபு

இப்படியொரு நிறுவனம் தனது பெயரில் செயல்பட்டு வந்ததும், நோட்டீஸ் வந்தப் பிறகுதான் மூதாட்டி ராணி பாபுவுக்கே தெரியவந்திருக்கிறது. வணிக வரி நுண்ணறிவுப் பிரிவினர் மூலமாக வரித் தொகை ரூ.1,07,50,294, அபராதத் தொகை ரூ. 1,07,50,294, இவற்றுக்கான வட்டித்தொகை ரூ. 24,86,436 ஆகியவைக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மொத்தமாக ரூ.2,39,87,024 தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும் எனவும் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார் ராணி பாபு.

கேரளாவில் வங்கிக் கணக்கு...

இந்த விவகாரத்தில் மேலும் ஓர் அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருக்காட்கரை பகுதியிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் ராணி பாபுவின் பெயரில் வங்கிக் கணக்கும் தொடங்கப்பட்டு பணப்பரிவர்த்தனைச் செய்யப்பட்டிருக்கிறது.

வரி பாக்கி தொடர்பாக, கடந்த 09-10-2024 அன்று வணிக வரிகள் துறையின் திருச்சி துணை ஆணையரான கோதை மதி என்பவர் திருக்காட்கரை எஸ்.பி.ஐ வங்கிக் கிளை மேலாளருக்கும் ஓர் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், ராணி பாபுவின் பெயரிலான வங்கிக் கணக்கில் ஏதேனும் தொகை இருந்தால், அதை பரிவர்த்தனைக்குட்படுத்தாமல் நிறுத்தி வைக்கவும், இது தொடர்பாக வணிக வரிகள் துறையின் பாலக்கரை உதவி ஆணையருக்கு டிமாண்ட் டிராஃப்ட்டை அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஜி.எஸ்.டி வரி பாக்கி நோட்டீஸ்

இதனிடையே தான் கடந்த 30-7-2024 அன்றைக்கே வரி பாக்கியைச் செலுத்த ராணி பாபுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. ராணி பாபுவிடம் இருந்து எந்த விதமான பதிலும் வராத காரணத்தில்தான் இந்த மாதம் 15-ம் தேதியில் இருந்து 7 நாள்கள் கெடு விதித்து இறுதி எச்சரிக்கை ( Recoverable Notice ) நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. தனக்கு வந்த நோட்டீஸையே படித்துப் புரிந்துக்கொள்ள முடியாத நிலையில்தான் இவ்வளவுப் பெரிய விவகாரத்தில் சிக்கியிருக்கிறார் மூதாட்டி ராணி பாபு. இதையடுத்து, தனது பெயரிலான ஜி.எஸ்.டி மோசடியைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவுப் போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறார் ராணி பாபு.

குவியும் ஜி.எஸ்.டி மோசடி...

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டுப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களை `ஜி.எஸ்.டி மோசடி’யில் சிக்கவைத்து, சிலர் கோடிகளில் கொழித்துக்கொண்டிருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே புகார்கள் குவிகின்றன.

பொதுவாக அன்றாடங்காய்ச்சிகளான, விவரமறியாத ஏழைக் குடும்பங்களைக் குறிவைத்து `புதிது புதிதாகத் திட்டங்கள் வந்திருக்கின்றன. அவற்றை உங்களுக்குப் பெற்றுத் தருகிறோம்’ என்று ஆசைகாட்டி, அவர்களிடமிருந்து `பான் கார்டு’, `ஆதார் கார்டு’, `வங்கிக் கணக்குப் புத்தகம்’ உள்ளிட்ட அடையாள ஆவணங்களை நகலெடுத்து வாங்குகின்றனர். பிறகு அவற்றைத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என அவர்களது செல்போன்களுக்கு வரும் ஓ.டி.பி எண்களைக் கேட்டு வாங்கிச் சென்று, அவற்றை மோசடித் தொழில் நிறுவனங்கள் நடத்துவோரிடம் விற்றுவிடுகின்றனர்.

அடையாள ஆவணங்கள்

இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி போலியாக ஜி.எஸ்.டி எண் பெற்று, ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் முறைகேடு செய்கின்றனர். இறுதியில், செலுத்தவேண்டிய ஜி.எஸ்.டி வரி தொடர்பான நோட்டீஸ், வீட்டுக்கு வரும்போதுதான், தங்கள் பெயரில் இப்படியொரு மோசடி நடந்திருப்பதே அந்த அப்பாவி ஏழைகளுக்குத் தெரியவருகிறது. மோசடிகள் குறித்தான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதிலும், ஜி.எஸ்.டி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ``கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துவிட்டு போலிகள் ஓட்டம் எடுத்த பிறகே ஆவணங்களின் அடிப்படையில் அப்பாவிகள்மீது அதிகாரத்தை ஏவுகிறது ஜி.எஸ்.டி விசாரணைப் பிரிவு. இறுதியாக குற்றம் செய்யாத அப்பாவிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள்; அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே, பொதுமக்களும் தேவையில்லாமல் யாரிடமும் ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களைப் பகிர வேண்டாம்” என்கிறார்கள் விவரப் புள்ளிகள்.

`எல்.முருகனின் விஷமத்தைவிட அவர் கருத்து ஆபத்தானது’ - ஆதரவு தெரிவித்த சீமானை விசிக தாக்கும் பின்னணி?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஒருபக்கம் விமர்சிக்க, மறு பக்கம் முருகனுக்கு எதிராக கடும் எதிர்வினையாற்றினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பா... மேலும் பார்க்க

அட்டைப்படம்

அட்டைப்படம் - விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க

``மத சட்டங்களால், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை மீற முடியாது..'' - உச்ச நீதிமன்றம்

குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தை எந்தவொரு தனிப்பட்ட சட்டமும் மீற முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்திருக்கிறது.இந்தியாவைப் பொறுத்தவரையில் சட்டப்படி பெண்களின் திருமண வயது 18, ஆண்களின... மேலும் பார்க்க

`திருவண்ணாமலை கோயிலுக்காக மாஸ்டர் பிளான் திட்டங்கள்’ - தீபத்திருவிழா ஆய்வில் உதயநிதி உத்தரவாதம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை வருகைத் தந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு வழிநெடுகிலும் தி.மு.க-வினர் வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து, ... மேலும் பார்க்க

Aavin: `புதிய வகைப் பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது!' - ஆவின் விளக்கம்

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கிரீன் மேஜிக் எனும் பச்சை நிற பாக்கெட் பாலை, கிரீன் மேஜிக் பிளஸ் எனப் பெயர் மாற்றம் செய்து, லிட்டருக்கு ரூ. 11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை எனவும், ஆவின் உடனடியாக இதை... மேலும் பார்க்க