கோன்பனேகா குரோர்பதி: 7 ஆண்டுக்கால முயற்சி; யூடியூப் மூலம் படித்து ரூ.50 லட்சம் வ...
``இது போன்ற புத்தி செந்தில் பாலாஜிக்கு இருக்காது; பழனிசாமி தலைகீழாக நின்றாலும்" - டிடிவி தினகரன்
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,
"கரூர் விவகாரத்தில் தன் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், கூட்டணி கட்சிகள் விஜயை கைது செய்யக் கூறிய போதும், முதல்வர் ஸ்டாலின் அதெல்லாம் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. நிதானமாகவும், பொறுப்புடனும் கையாள்கிறார் என்பது தான் உண்மை.
முதல்வருக்கு யாரையும் கைது செய்து விட வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பது தெரிகிறது. 41 உயிர்கள் அநியாயமாகப் போயுள்ளன.
இதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டிய அவசியமும், கைது செய்ய வேண்டிய அவசியமும் அரசுக்கு உள்ளது. இதனால் நான் அரசுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம். நடுநிலையாக பார்க்கும் போது எல்லாம் சரியாக தான் நடக்கிறது.
த.வெ.க. ஒன்றும் திட்டமிட்டு செய்யவில்லை. இது ஒரு விபத்து தான். நிர்வாகிகளுக்கு அனுபவம் குறைவு என்பதால் இது போன்றது நடந்துள்ளது.

விஜய் தார்மீக பொறுப்பு ஏற்று இருந்தால், நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்து இருக்காது. ஆனால், தங்களின் மீது பழி வந்து விடும் என ஆலோசகர்களோ அல்லது வழக்கறிஞர்களோ கூறியதால், விஜய் அப்படி பேசி இருக்கலாம்.
பழனிசாமி நான்கரை ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து மக்களின் வரிப்பணத்தை புசித்தவர். ருசி கண்ட பூனை போல, எப்படியாவது பதவிக்கு வந்து விட வேண்டும் என்பதற்காகவும், பதவி ஆசை எல்லாம் தாண்டி பதவி வெறியில், ஆட்சியாளர்களும் ஆளும்கட்சியும் தான் காரணம்; இது சதி என்பது போல, `ஆடு நனையுது என்பதற்காக ஓநாய் அழுகும்' கதையாக த.வெ.க. வழக்கீலாக பழனிசாமி பேசி வருகிறார்.
விஜய் கூட்டணி பற்றி பேசும் மனநிலையில் இருப்பாரா? விஜய் கூட்டணிக்கு வர வேண்டும் என பழனிசாமி நினைப்பது தவறு கிடையாது. ஆனால், பழனிசாமி ஆட்சிக்கு வர வேண்டும் என தலைகீழாக நின்றாலும், அவரை வீழ்த்தாமல் அ.ம.மு.க. ஓயாது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போதே பழனிசாமி உடனே செல்லவில்லை; பயந்துக் கொண்டு ரெம்ப நாள்கழித்து சென்றார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உடனே கரூருக்கு சென்று விட்டார். இதை வைத்து அரசியல் பேசும் தலைவர்களை மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
கூட்டணிக்காக பழனிசாமி ஊர் ஊராக சென்று பேசுவதை தரம் தாழ்ந்த அரசியலாக நான் பார்க்கிறேன். பா.ஜ.க. குழு அமைத்து பழனிசாமிக்கு நிராகர பா.ஜ.க. அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடி சம்பவத்தின் போது இது போன்ற குழுவும் வரவில்லை.
கரூர் சம்பவத்தை அரசியலாக்காமல், அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் ஒரு உயிர்கூட பாதிக்கப்படாமல் வருங்காலங்களில் கையாள, ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் அர்ஜூனா, நிர்மல்குமார் கூறிய கருத்துக்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது.
அண்ணாமலையின் கருத்து எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவரிடம் நான் நிச்சயம் பேசுவேன்.
விழுப்புரம், மதுரை மாநாடு, திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் எத்தனை பேர் காயமடைந்தார்கள் என்பதை போலீசார் பட்டியலிட்டு உள்ளனர். நல்ல வேலை அங்கு எதுவும் நடக்கவில்லை.
அங்கு நடந்திருந்தால் யாரை குறை சொல்ல இருக்க முடியும்; கரூரில் நடந்ததால் முன்னாள் அமைச்சர் ஒருவரை குறை சொல்கிறார்கள். 2006ம் ஆண்டு முதல் செந்தில்பாலாஜி பழக்கம். என் நல்ல நண்பர். அவர் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என அரசியல் ரீதியாக எதையும் செய்வார்.
ஆனால், இதுபோன்ற புத்தி அவருக்கு இருக்காது. இதுபோன்ற செயல்களால் அவருக்கு என்ன லாபம் இருக்கிறது என்பது தெரியவில்லை.

எடப்பாடி பழனிசாமியை தவிர, ராமசாமி அல்லது குப்புசாமி யாராக இருந்தாலும், எனக்கு ஒன்றும் கிடையாது. எனக்கு அ.தி.மு.க. மேல் எந்த விரோதமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ரொம்ப கம்போர்ட்டாக இருந்தோம்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில், அ.தி.மு.க.-வில் பொதுச் செயலாளர் பதவிக்கு யாரை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என இருந்த சட்டத்தை மாற்றி, 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என டெண்டர் ஸ்டைலில் பழனிசாமி மாற்றியுள்ளார்.
இதனால், அ.தி.மு.க.-வாக இல்லை; ஈ.டி.எம்.கே.-வாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி வருவதற்கு நிச்சயம் வாய்ப்பே இல்லை.
நாங்கள் எங்கள் கட்சியை தேர்தலுக்கு தயார்ப்படுத்துவதற்கான வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்போம்," என்றார்.