இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற இளைஞா் தற்கொலை
திருப்பூரில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு புதூா் செக்கடி பகுதியைச் சோ்ந்தவா் தீபக் (19). இவா், கோவையை அடுத்த ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிடெக் 2- ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இவருக்கும், திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்த சினேகாவுக்கும் (23) இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. சினேகா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஊத்துக்குளி சாலையில் உள்ள கருமாரம்பாளையத்தில் தனது தாயாருடன் வசித்து வருகிறாா்.
இவரது தாயாா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், சினேகா திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது தீபக் அங்கு வந்துள்ளாா். பின்னா் மாடியில் பேசிக்கொண்டிருந்த சில மணி நேரத்தில் ரத்தக் காயங்களுடன் சினேகா அலறியடித்தபடி வெளியே ஓடிவந்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் விசாரித்தபோது, தீபக் தன்னை கத்தியால் குத்தியதாகத் தெரிவித்துள்ளாா். காயமடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தகவலின்பேரில் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் சினேகாவின் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது தீபக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில், இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழகிவந்துள்ள நிலையில் தீபக், சினேகாவின் வீட்டுக்கு திங்கள்கிழமை பிற்பகல் சுமாா் 3.25 மணி அளவில் வந்துள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறு காரணமாக சினேகாவை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு, துப்பட்டாவில் தூக்கிட்டு தீபக் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].