உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்: கேஜரிவால்
புது தில்லி: தில்லியின் சட்டம் ஒழுங்கை சரியான முறையில் கையாள முடியாவிட்டால், அதற்கு பொறுப்பு வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான கேஜரிவால் வலியுறுத்தினார்.
தில்லி, பீதம்புரா பகுதியில் வீட்டிற்கு வெளியே கத்தியால் குத்தப்பட்ட ஒரு இளைஞரின் உறவினரை சந்தித்த பின்னர் கேஜரிவால் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், 'இரண்டு இளைஞர்களை சுமார் எட்டு உள்ளூர் சிறுவர்கள் தாக்கியுள்ளனர். இதில் கத்திக் குத்துக்கு உள்ளான மனீஷை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாததால் இறந்துவிட்டார் என்று என்னிடம் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட மற்றொருவரான ஹிமான்ஷு காப்பாற்றப்பட்டார். ஆனால், சாட்சியாக அவரது வாக்குமூலத்தை போலீஸôர் பதிவு செய்யவில்லை.
நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் மட்டுமே அமித் ஷா கவனம் செலுத்துகிறார். தில்லி சட்டம் ஒழுங்கை சரியாக கையாள முடியாவிட்டால், அவர் ராஜிநாமா செய்ய வேண்டும்' என்றார்.
பாதிக்கப்பட்டவர்களை போலீஸôர் மிரட்டுவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல் துறையிடம் இருந்து உடனடி எதிர்வினை எதுவும் கிடைக்கவில்லை.
தில்லியில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆம் ஆத்மி கட்சி மக்களை ஒன்றிணைத்து பாஜக தலைமையிலான மத்திய அரசை கட்டாயப்படுத்தும் என்று கேஜரிவால் கூறினார்.
பாஜக பதிலடி: கடந்த தசாப்தங்களாக தில்லியை ஆளும் ஆம் ஆத்மியின் ஊழல் மற்றும் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே சட்டம் ஒழுங்கு பயத்தை அக்கட்சி ஏற்படுத்துவதாக கேஜரிவாலுக்கு பாஜக பதிலளித்துள்ளது.