``எனக்காக இவர்கள் நோபல் பரிசு கேட்கிறார்கள்; ஆனால், நான் விரும்பும் பரிசு இதுதான்'' - ட்ரம்ப் பேச்சு
ஆறு ஆண்டுகள் கழித்து ஐ.நா சபையில் உரையாற்றியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
'ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஏழு போர்களை நிறுத்தியுள்ளேன். எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்' என்று ட்ரம்ப் அடிக்கடி கூறுவது வழக்கம்.
ஐ.நா சபையிலும் போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளார்.

அது என்ன?
பொறுப்பேற்ற ஏழு மாத காலத்திற்குள், ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்.
அந்தப் போர்கள் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று பலர் கூறினார்கள். நான் முடிவுக்குக் கொண்டு வந்த இரண்டு போர்கள் 31 ஆண்டுகள் நடந்துகொண்டிருந்தன.
ஒன்று 36 ஆண்டுகளாக, மற்றொன்று 28 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்தன.
அவற்றுள் கம்போடியா மற்றும் தாய்லாந்து, கொசோவோ மற்றும் செர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான கொடூரமான, வன்முறைப் போர்கள் ஆகும்.
இதை இதுவரை எந்த அதிபரும், எந்தப் பிரதமரும், எந்த நாடும் செய்ததில்லை. இவை அனைத்தையும் நான் வெறும் 7 மாதங்களில் செய்திருக்கிறேன். இதுவரை இப்படி நடந்ததில்லை. இதைச் செய்ததில் நான் பெருமை கொள்கிறேன்" என்று பேசியுள்ளார்.
நோபல் பரிசு?
நோபல் பரிசு குறித்து "போர்களை நிறுத்தியதற்கும், ஆபிரகாம் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதற்கும் எங்கள் நாட்டிற்கு கிரெடிட் கிடைத்திருக்க வேண்டும். அது கிடைக்கவில்லை.

இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள்.
ஆனால், எனக்கு உண்மையான பரிசு முடிவில்லாத மற்றும் புகழ்பெற்ற அழிவுகரமான போர்களில் மில்லியன் கணக்கான மக்கள் இனி கொல்லப்படப் போவதில்லை என்பதும், தங்கள் தாய்மார்கள் மற்றும் தந்தையர்களுடன் இனி அவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் வளர முடியும் என்பது தான்" என்று கூறியிருக்கிறார்.