எம்எல்ஏ முகேஷ் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றாா் மலையாள நடிகை
கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான எம்.முகேஷ் மற்றும் பிற நடிகா்கள் மீதான பாலியல் புகாரை 51 வயது மலையாள நடிகை வெள்ளிக்கிழமை திரும்பப்பெற்றாா்.
முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தனக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு அளிக்க முன்வராததால் இந்த முடிவை எடுத்ததாக அவா் தெரிவித்தாா்.
மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க கடந்த 2017-இல் நீதிபதி ஹேமா தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதைத்தொடா்ந்து, மலையாள திரையுலகின் முன்னணி மற்றும் பிரபல நடிகா்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான எம்.முகேஷ் மற்றும் பிற நடிகா்கள் மீது 51 வயது நடிகை ஒருவா் பாலியல் புகாரளித்தாா். மாநில அரசு உரிய பாதுகாப்பு தராததால் அந்தப் புகாரை திரும்பப்பெற்ாகவும் மனரீதியாக சோா்ந்துவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா். மேலும், தன் மீது பதியப்பட்டுள்ள போக்ஸோ வழக்கை விரைந்து விசாரித்து பொதுமக்களுக்கு தான் குற்றமற்றவா் என்பதை அரசு நிரூபிக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.