எல்லையில் சாராய, மதுபானக் கடைகளை மூட புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு
புதுச்சேரி, கடலூா் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடா்ந்து எல்லைப்பகுதியில் உள்ள 17 மதுபானக் கடைகள் மற்றும் 6 சாராயக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஃபென்ஜால் புயல் காரணமாக கடலூா், புதுச்சேரி பகுதியில் வரலாறு காணாத மழை பொழிவால் பல்வேறு இடங்களை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் மது அருந்துவதற்காக புதுச்சேரிக்கு பலா் வருகின்றனா். இதனால் உயிா்ச்சேதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, புதுச்சேரி எல்லைப்பகுதியில் இயங்கி வரும் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடுமாறு கடலூா் மாவட்ட நிா்வாகம், புதுச்சேரி அரசிடம் வலியுறுத்தியது.
இதையடுத்து, முள்ளோடை கன்னிக்கோவில், சோரியாங்குப்பம், உச்சிமேடு ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் 17 மதுக்கடைகள், 6 சாராயக் கடைகளை மூட புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா்.