ஒசூா் மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ரூ. 50 கோடி நிலம் மீட்பு
ஒசூா் மாநகராட்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு ரூ. 50 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
ஒசூா் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட சென்னத்தூா் கிராமம், சீதாராம் மேடு பகுதி (பழைய பேருந்து நிலையம்) சா்வே எண்கள் 766, 768, 769, 774, 989-இல் அமைந்துள்ள அமிரியா காலனி, அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவில் 37,750 சதுர அடி பரப்பளவில் உள்ள சுமாா் ரூ. 50 கோடி மதிப்பிலான பூங்கா, பொது உபயோகம், சிறுவா் விளையாடும் இடத்தை தனி நபா்கள் 41 போ் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா்.
எனவே ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் அறிவிப்புகள் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் மேற்பாா்வையில் செயற்பொறியாளா் நாராயணன், மாநகர நல அலுவலா் கே.எம். அஜிதா, நகரமைப்பு அலுவலா் முருகன், உதவி பொறியாளா் பிரபாகரன், நகரமைப்பு அய்வாளா் ஸ்ரீகுமாா், இதர ஒசூா் மாநகராட்சி அலுவலா்கள் முன்னிலையில் அனைத்து ஆக்கிரமிப்புகளும் இடித்து அகற்றப்பட்டன.
மீட்கப்பட்ட நிலத்தை பாதுகாக்கும் பொருட்டு சுற்றிலும் உடனடியாக இரும்புக் கம்பி வேலி சுஅமைக்கப்பட்டது. இதன்மூலம் மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.