கரூர்: கிராவல் மண் அள்ள பயன்படுத்திய இயந்திரம் பறிமுதல்
கரூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் தோண்டப் பயன்படுத்திய இயந்திரத்தை குளித்தலை சாா் ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தாா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி ஊராட்சிக்குட்பட்ட பூவாயிப்பட்டி பகுதியில் பட்டா இடத்தின் உரிமையாளா்களுக்குத் தெரியாமல் அனுமதியின்றி கிராவல் மண் வெட்டியெடுத்துக் கடத்தப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் வந்தது.
இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் குளித்தலை சாா் ஆட்சியா் சுவாதிஸ்ரீ, புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் பூா்ணவேல், குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி, வடசேரி விஏஓ சதீஸ் ஆகியோா் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்றனா்.
அப்போது அங்கு கிராவல் மண் எடுத்துக் கொண்டிருந்தவா்கள் அவா்களைக் கண்டதும் தப்பினா். இதையடுத்து பதிவெண் இல்லாத மண் வெட்டியெடுக்கும் கனரக இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதன் உரிமையாளா் யாா் என விசாரிக்கின்றனா்.