செய்திகள் :

``கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில் பெண்கள் நெகிழ்ச்சி

post image

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள சக்திகைலாஷ் தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரியில் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இல்லத்தரசிகான "ஒரு நாள் மாணவி" என்ற திட்டத்தில் சுய தொழில், தற்காப்பு மற்றும் பல்வேறு விழிப்புணர்வு சம்மந்தபட்ட வகுப்பை கடந்த இரு நாள்கள் (02.01.2025மற்றும் 03. 01.2025) நடத்தினார்கள்.

"சேலத்தில் கல்லூரி படிப்பை தொடங்க முடியாத திருமணமான இல்லத்தரசிகள் பலர் எந்த ஒரு யுக்தியும் இல்லாமல் சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் வீட்டிலே அடைந்து இருக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்" என்ற நோக்கில், சக்திகைலாஷ் கல்லூரி நிறுவனம் சமூக அக்கறை கொண்டு இந்த இரண்டு நாள் வகுப்பை நடத்தியது. இதில் சேலம் மாவட்டத்தில் 18-60 வயது வரை திருமணமான இல்லத்தரசிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில் பெண்கள்

இந்த வகுப்பில் முக்கியமாக சுயதொழில் செய்வது எப்படி? அதை எப்படி இந்த காலகட்டத்திற்கு தகுந்த மாதிரி கையாள்வது என்பதை பற்றியும், இவர்கள் படிக்க வேண்டும் என்று நினைத்த பாடங்களை பற்றியும் வகுப்பு எடுக்கப்பட்டது.

சேலம் அம்மாபேட்டை துணை ஆய்வாளர் புவனேஸ்வரி, `பெண்கள் பாதுகாப்பு மற்றும் சைபர் க்ரைம்' பற்றிய வகுப்புகளை எடுத்தார். அதில் நிறைய கேள்விகளை கேட்டு பெண்கள் பயனடைந்தார்கள். தொழிநுட்ப வல்லுநர்கள் நிறைய பிசினஸ் உக்திகளை இவர்களுக்கு புரியும்படி அதில் வரும் லாபம் நட்டம் பற்றிய வகுப்புகளை எடுத்தார்கள்.

இந்த ஒரு நாள் மாணவி திட்டத்தை பற்றி இல்லத்தரசிகளிடம் கேட்டபோது, "எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னோட பொண்ணுங்க வந்து இங்க படிக்கிறாங்க. நம்மளும் இப்படி கல்லூரி வகுப்பறையில் உக்காந்து படிக்கவேண்டும் என்ற ஆசை பல வருடமாக இருந்தது. அதெல்லாம் நடக்குமா! என்ற எண்ணம் இருந்தது. இப்போது, அது நடந்துருக்கிறது. இதற்கு காரணமான சக்திகைலாஷ் நிறுவனத்துக்கு நன்றி. மாணவிகளோடு மாணவிகளாக உக்காரும் போது, நம்மளும் படிக்க போகிறோம் என்றும் கல்லூரி அனுபவம் கிடைத்த ஒரு சந்தோஷம் கிடைத்திருக்கிறது" என்று கூறினார்கள்.

ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில் பெண்கள்
ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில் பெண்கள்
ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில் பெண்கள்

"எனக்கு படிப்பின் மீது மிகவும் அதீத ஆசை. நான் பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். மேலே படிக்க என்னால் முடியவில்லை. ஆனால், என்னுடைய ஆசைகளை என் பிள்ளைகள் நிறைவேற்றி விட்டார்கள். இருந்தாலும் எனக்கும் கல்லூரி அனுபவம் வேண்டும் கல்லூரி படிக்க வேண்டும் என்ற ஆசை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். எனக்கு இந்த திட்டத்தை பற்றி என் பிள்ளைங்க தான் சொன்னாங்க அவர்கள் தான் என்னை இங்கே அனுப்பி வைத்தார்கள். பெத்தவங்க தான் பிள்ளைங்கள கல்லூரி அனுப்பி வைப்பாங்க, இங்க என் பிள்ளைங்க என்னை அனுப்பி வெச்சிருக்காங்க அவங்களுக்கு நன்றி" என்று ஒரு இல்லத்தரசி தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் நோக்கத்தை பற்றி கேட்டபோது உதவி ஆசிரியர் பவித்ரா கூறுகையில், "இனிமேல் எந்த கல்லூரி இந்த திட்டத்தை செய்தாலும் இதற்கு முதல் விதையை எங்க காலேஜ் தான் விதச்சிருக்கு. அதில், பெருமை அடைகிறோம். இந்த திட்டத்தில் பல பேர் நிறைய விசயங்களை கற்று கொண்டார்கள். அவர்களது கேள்விகளை கேட்டு திருப்தி அடைந்தார்கள். வீட்டில் செய்யும் சிறு தொழில் பற்றிய கேள்விகளை கேட்டு பயனடைந்தார்கள். மாணவிகளோடு மாணவிகளாக இவர்கள் உக்காந்து செய்யும் சேட்டையை தாங்க முடியவில்லை" என்று கூறினார்.