காந்தாரா - 2 படப்பிடிப்புக்கு எதிர்ப்பு?
காந்தாரா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதையும் படிக்க: தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெறும் கூலி படப்பிடிப்பு!
காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக உருவாகும் காந்தாரா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாக இப்படத்தைக் கொண்டு வர ரிஷப் ஷெட்டி திட்டமிட்டுள்ளதால் பான் இந்திய வெளியீடாக திரைக்கு வருகிறது.
தற்போது, கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்திலுள்ள ஹெரூர் என்கிற கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பின்போது வெடி பொருள்களை அதிகமாக பயன்படுத்தியதால் வன விலங்குகளுக்கு தொல்லை ஏற்பட்டதாகக் கூறி கிராம மக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், கிராமவாசி ஒருவர் காயமடைந்ததால் எசலூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், காந்தாரா - 2 படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்படலாம் என்றே தெரிகிறது.